பருவமழை

Posted: Monday, November 22, 2010 | Posted by no-nononsense | Labels:
மழைக்கால மேகங்கள் தங்கள் வாடிக்கைக்கு திரும்பி விட்டனவா, அல்லது கிளைமேட் சேஞ்ச் தமிழகத்துக்கு மட்டும் அளித்துள்ள பாஸிடிவ் எஃபக்டா.., எதுவாகிலும் மேட்டூர் அணை 111 அடியை எட்டும் அளவிற்கு இந்தமுறை பருவமழை கருணை மழை பொழிந்துள்ளது. மகிழ்ச்சி! விவசாயம் செழிக்கட்டும். அதன்போதாவது உணவு பொருள்கள், குறிப்பாக காய்கறிகள் விலை குறையட்டும். 

மழை பொழியும் போதெல்லாம் என் மகள் தனக்கு தெரிந்த ஒரே மழைப்பாடலான rain rain go away-ஐ பாடுகிறாள். நானும் உடன் சேர்ந்து உற்சாகமாக பாடிக்கொண்டுதான் இருந்தேன் - மாலனின் இந்த வரிகளை படிக்கும் வரை:

....மழை என்றால் சந்தோஷமான அனுபவம் காத்திருக்கிறது என்ற மனநிலையை அந்தப் பாடல் ஏற்படுத்தியது.இன்று குழந்தைகள் Rain Rain Go away என்று பாடுவதைக் கேட்கிறேன். விளையாடுவதற்கு மழை இடையூறாக இருப்பதாக அந்தப் பாடல் சொல்கிறது. 

இயற்கை குறித்து இது எந்த மாதிரியான மனநிலைகளை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் என்பதை நினைத்துப் பார்த்தால் கவலையாக இருக்கிறது. ஏற்படுத்தும் என்ன, ஏற்படுத்தியிருப்பதைப் பார்க்க முடிகிறது.மனிதனுடைய 'சந்தோஷத்திற்கு' இயற்கை இடையூறாக இருக்கிறது என்ற எண்ணம் சிறுவயதிலேயே ஓர் தலைமுறைக்கு ஊட்டப்பட்டுவிட்டது.

ஈரம் படிந்த இலக்கியமாக இருந்திருக்க வேண்டிய குழந்தைகள் பீங்கான் ஜாடிக்குள் செருகிய பிளாஸ்டிக் பூக்களாகப் பரிணமித்துவிட்டார்கள்.

இந்த தேசத்திற்கு நேர்ந்த இழப்புக்களில் இது மிகப் பெரிது.

(முழுதாய் படிக்க: http://jannal.blogspot.com/2010/11/blog-post.html)

இயற்கையோடு இயைந்து வாழ நம் குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க மறக்கிறோம். அல்லது நமக்கே தெரியவில்லை. நம் இன்றைய வாழ்க்கைச் சூழலை கருத்தில் கொண்டு பார்க்கும்போது இரண்டாவது தான் பெரும்பாலும் காரணமாக இருக்க வாய்ப்புண்டு. 

வாழ்க்கையை பற்றிய கண்ணோட்டம் முதலில் எத்தனை பேருக்கு உண்டு என்பது பற்றியே எனக்கு ஐயம் உண்டு. பணம், சினிமா, டிவி, மது, மாது - முடிந்தது ரசனை! அவ்வளவு தானா உலகம். அவ்வளவுதான் உலகம் என்று நம்புபவர்கள் மனக்கிணற்றுக்கு வெளியே தலையை நீட்ட முதலில் மனம்கொள்ள வேண்டும். 

இதற்கு மேல் இதைப்பற்றி பேசினால் ஊருக்கு உபதேசமாகி விடும். பிறகு ஊருக்குதான் உபதேசம் என்று என்னை நோக்கி சொல்லும் சந்தர்ப்பத்திற்காக ஊர் காத்திருக்க வாய்ப்பாகி விடும். உபதேசம் உபன்யாசம் இரண்டையும் செய்ய ஊருக்குள் நிறைய சாமியார்கள் உண்டு. வேண்டாம் நமக்கந்த வேலை :-)

ஆனாலும் வாழ்க்கையின் ரசனையான பக்கங்களை பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கு அறை எண் 305-ல் கடவுளில் பிரகாஷ்ராஜ் பேசும் சிம்புதேவனின் வசனம் தான் நினைவுக்கு வருகிறது. ரிடையர்டு அரசு அதிகாரியான டெல்லி கணேஷிடம் வாழ்க்கையைப்பற்றிய மாறுபட்ட பார்வையை சில கேள்விகள் மூலம் கேட்பார். நான் ரசித்த ரசமான காட்சியது. அப்படம் மறுமுறை காணும்போது கவனித்து பாருங்கள்.

0 comments:

Post a Comment