சுட முயலும் பெருமூச்சுகள்

Posted: Thursday, September 23, 2010 | Posted by no-nononsense | Labels:
அரசு அதிகாரி ஒருவருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக வேண்டிய ரூபாய் நோட்டுக்களை எண்ணி முடித்து விட்டு இருக்கும் அவகாசத்தில் ஏதாவது எழுதலாமே என்று இதனை தட்டச்சிக் கொண்டிருக்கிறேன். 
நிச்சயமாக அவர் தன் கடமை தவறி எதையும் செய்ய அல்ல. கடமையை செய்யத்தான் இந்த பணம்.  ஆனாலும் கூச்சநாச்சம் எதுவுமின்றி பல்லை இளிக்கிறார் அந்த பெரிய அதிகாரி. 

இன்று காலை என்னுடன் பேருந்தில் பயணித்த இரு அரசு அதிகாரிகளின் பேச்சு இந்த இடத்தில் ஞாபகம் வருகிறது. அகவிலை படி உயர்வு குறித்து பேசிக் கொண்டிருந்தனர். பேச்சில் ஆணவமென்றால் அப்படி ஒரு ஆணவம். அதையெல்லாம் விரிவாக எழுதி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. வேலையில் அலட்சியம். சேவையில் ஊழல். சமூகம் குறித்த அக்கறை துளியுமில்லாத சுயநலம். இவர்களின் இந்த போக்கில் என்று வரும் மாற்றம் என்றுதான் தெரியவில்லை. 

***

கொஞ்சம் சுதாரிப்பாக இருந்திருந்தால்ல் நீயும் இப்படி ஒரு ‘நல்ல’ நிலையை அடைந்திருக்கலாம் என்று வழக்கமாக சில பெருமூச்சுகள் என் மேல் விடப்படுவது உண்டு. 

இந்த பெருமூச்சுகளால் தாக்கப்பட்டே என் தோளின் நிறம் கூட கொஞ்சம் மங்கி விட்டது. அவற்றை புன்னகையால் எதிர்கொண்டே அந்த மென்னகையின் பொலிவுகூட கொஞ்சம் குறைந்து விட்டது. என் முன் நான் காணும் ராஜபாட்டையையும், எனக்குள் நான் வாழ்ந்து வரும் ராஜவாழ்க்கையையும் பாவம் அவர் அறியார். படியை கொண்டு மலையை அளக்க முயல்வது இயலாத காரியம் என்பதை மழலை அறியாது. என்னை தாக்கும் பெருமூச்சுகளும் அப்படித்தான். 

கடந்த 15 ஆண்டு காலகட்டம் என்பது, எத்தனை பொன் கொடுத்தாலும் யாரிடமிருந்தும் கற்றிட முடியாத வாழ்க்கை பாடங்கள். எதெல்லாம் அந்தரம்; எதெல்லாம் நிரந்தரம் என்பதை அக புற இரு உலகங்களிலும் எனக்கு உணர்த்திய பரீட்சார்த்த பொழுதுகள். வாழ்க்கையை பற்றிய தெளிவு என் மனதில் தன் விழுதை அழுத்தமாக ஊன்றி விட்டது. அதனிடம் பெருமூச்சுகள் நொடிபொழுது சலனத்தையும் கூட ஏற்படுத்திடும் வலுவை இழந்து விட்டன. இருந்தாலும் அன்புகூர்ந்து விடப்படும் பெருமூச்சுகளை அனுமதித்து புன்னகைத்து வைக்கிறேன்.

அதெல்லாம் சரி. இதெல்லாம் இப்போது
 ஏன்?

சில நிமிடம் முன்புதான் தொலைபேசி வழியே
 மேலும் ஒரு பெருமூச்சு என்னை சுட முயற்சித்தது. :-)

0 comments:

Post a Comment