முடிவற்ற முடிவான இலக்கு

Posted: Monday, January 10, 2011 | Posted by no-nononsense | Labels:
இலக்கின்றி ஓர் பயணம் - ஓர் இடத்தில் இப்படி ஒரு வரியை படித்த கணம் முதல் அதைச் சுற்றியே சிந்தனை மையம் கொள்கிறது.

இலக்கு இல்லாமல் பயணங்கள் சாத்தியமா? இல்லை என்றே தோன்றுகிறது. ஒன்று இலக்கை நீ நிர்ணயிக்கிறாய். அல்லது அப்பயணமே நிர்ணயித்து, காட்டாற்றின் வெள்ளத்தில் மிதந்து செல்லும் தக்கையென உன்னையும் தன்னுடன் பயணிக்க வைக்கிறது. எல்லோருக்கும் முடிவான முடிவே அதன் முடிவு. வேறு வார்த்தையில் சொல்லப் போனால் இலக்கு. புரியாதவர்களுக்கு இன்னும் எளிமை படுத்திச் சொல்ல வேண்டுமானால் ‘மரணம்’.

மரணத்தை ஒன்று நீ தழுவுகிறாய் அல்லது அது உன்னைத் தழுவுகிறது. எல்லா வகையிலும் இறுதியான இலக்கு அதுவே. எந்த விதமான சமரசங்களுக்கும் பரிகாரங்களுக்கும் ஆட்படுத்திவிட முடியாத ஒரே சாஸ்வதம்.

இதைத்தான் ஆன்மிகவாதி மாயை என்று அழைத்து யாரும் அறியாத ஒன்றை புரியவைப்பதாகச் சொல்லி தன் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் காட்ட முயலுகிறான். ’ப்ரஹ்ம்ம ஸத்யம் ஜகன் மித்யா’ (பஜகோவிந்தம்)என்றெல்லாம் தேவபாஷையில் ஸ்லோகம் சொல்லி பிரம்மம் ஒன்றே சாஸ்வதம் என்கிறான். அதை மேலும் பகுத்தறிந்து கொண்டு போனால் இறுதியில் கிடைக்கும் இலக்கு மேற்சொன்னதில் இருந்து வேறுபட்டதல்ல.

ஆனால் அதை அறிந்துகொள்ள சுயசிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உண்மையில் மனிதகுலத்தை பீடித்திருக்கும் மாயை என நம் சிந்தனையில் கவிழ்ந்திருக்கும் சோம்பலை சொல்லலாம். அதை விரட்டாமல் ஒளிவட்டங்களின் உண்மைத்தன்மையை உணரும் திறன் என்றும் வாய்க்காது.

மரணம் தான் இலக்கு. அறிவியல், ஆன்மிகம் இரண்டினாலும் தவிர்க்க இயலா ஒரே நிகழ்வு. இலக்கு உறுதியான பிறகும் ஏன் வாழ்க்கையை கண்டு இவ்வளவு பயம்? வாழ்க்கையை கண்டு பயமா அல்ல்து தற்காலிகமான சுகபோகங்களை அடைய இடையே இருக்கும் சிரமங்கள் தரும் ஏக்கமா?

‘உண்பது நாழி உடுப்பது இரண்டே’ என்று வாழ என்ன மனத்தடை? தடையது லௌகீக கயிறு பிணைத்து வைத்திருக்கும் பந்தங்களில் இருக்கிறது. அதற்காக பந்தங்களை உதறித் தள்ளிவிட முடியுமா? எந்த மார்க்கம் ஏற்றுக்கொண்டாலும் அவை எல்லாம் இட்டுச் செல்லும் ஒரே இலக்கு எதுவென தெரிந்தவன் செய்ய வேண்டியது என்ன?

இறக்கும் வாழ்க்கையிது இலக்கை அடையும் வரை தடுக்கும் தடைகளை தவிர்க்கும் மார்க்கம் தேடி வீணில் அலையாமல் உவப்புடன் எதிர்கொண்டு உள்ளச் சிறப்புடன் வாழ்ந்து முடிப்பதே உத்தமோத்தமமான ஒரே வழி. மறுக்க முடியுமா? மறுப்பதும்கூட மறுமை போன்ற மாற்று மார்க்கங்களையே விடையாகத் தருகிறது எனும்போது அந்த மறுப்பு வலுவிழக்கிறது.

மரண பயம் மனிதர்களின் மனதில் தோற்றுவிக்கும் எண்ணங்கள் தான் எத்தனை எத்தனை விசித்திரமானவை. அந்த விசித்திரமானவைகளைப் பற்றிய வெகுமனசித்திரம் என்னும் நூல்புரி இட்டுச் செல்லும் பாதையின் சிக்கல்களை சிடுக்கெடுத்தபடிச் சென்றால், அது எண்ணிலடங்கா மதங்களின் வரலாற்றை அக காட்சிப்படுத்துவதாக அல்லவா அமைகிறது.

அந்த அக காட்சியை கண்டு தெளிய தேவை - சுயசிந்தனை. நம் மக்களுக்கு எட்டிக்காயாக கசக்கும் ஒரு சொல் இதுவன்றி வேறிருக்க முடியாது. சிந்தனையின்றி தர்க்கங்கள் சாத்தியமில்லை. தர்க்கிக்காமல் மனத்தெளிவு சாத்தியமில்லை. மொத்தத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கே அவை எதுவுமே முற்றிலும் சாத்தியமாக இல்லை. ஆனாலும் பயணம் தொடர்கிறது ஓரிருவரின் தெளிவின் ஒளியை தனதாக்கிக் கொண்டு ஒரு முடிவற்ற முடிவான இலக்கை நோக்கி.

0 comments:

Post a Comment