2012

Posted: Tuesday, November 24, 2009 | Posted by no-nononsense | Labels:
எனக்கு இப்படத்தை பார்ப்பதைப் பற்றி இறுதி வரை இருமனதாகவே இருந்தது. காரணம் இப்படத்தை எடுத்த டைரக்டர்தான் “இண்டிபெண்டென்ஸ் டே”, “டே ஆஃப்டர் டுமாரோ” போன்ற மொக்கைகளையும் எடுத்தவர் என்கிற பயம் ஒருபுறம்; பதிவுலகம் முதல் பத்திரிக்கையுலகம் வரை இப்படத்துக்கு கொடுத்து வரும் பில்டப்புகள் (viral marketing) மறுபுறம் என குழப்பமாக இருந்தது. எதற்கும் ‘நடமாடும் சினிமா என்சைக்ளோபீடியா’ நம்ம டிபிஎன். சுரேஷ்குமாரை கேட்கலாமேயென்றால், அவனோ ’கந்தசாமி ஜூப்பர் அப்பு’ என்று சர்டிபிகேட் கொடுத்து விட்டு, பிறகு நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டதிலிருந்து இனி எந்த படம் பார்த்தாலும் கருத்து சொல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறான். சரி, போகட்டும், டிவிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்று லூஸில் விட்டு விட்ட சமயமாகப் பார்த்து ஒரு போன் கால் - சதீஷ்கண்ணனிடமிருந்து. ’2012 போலாமா’ என்று அழைத்தான்.

அப்போது சிறிது வேலையாக இருந்ததால் ’கொஞ்சம் வெயிட் பண்ணு; இங்கே நிதானம் பார்த்து சொல்றேன்’ என்று சொல்லி வைத்துவிட்டு மீண்டும் அழைப்பதற்குள்ளேயே டிக்கட் கௌண்டரில் வரிசை கட்டியிருந்தான். என் அருகிலிருந்த டிபிஎன் இப்போதாவது படத்தைப் பற்றி ஏதாவது கருத்து சொல்வானா என்று பார்த்தேன். சலனமேயில்லாமல் நரசிம்மராவ் மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு, ’போலாமா’ என்றால் ’சரி’ என்றும், ‘இல்ல வேண்டாமா’ என்றால் அதற்கும் ’சரி வேண்டாம்’ என்றும் கடுப்படித்தான். அதற்குள் சதீஷ்கண்ணனிடமிருந்து அடுத்த போன், ‘டிக்கெட் எடுத்துட்டேன்’ என்று. வீட்டில் வேறு அப்போது மும்மரமாக ராமாயணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வானர - ராவண படைகளின் போர்க்களக் காட்சி. இது முடிய எப்படியும் 1 மணி நேரம் ஆகும். அதுவரை வேறு சேனல்கள் எதுவும் மாற்றவும் முடியாது என்பதால் பேசாமல் சினிமாவுக்கே போகலாம் என்று கிளப்பி கே.எஸ் தியேட்டரை அடைந்தேன்.

கடைசியாக இந்த தியேட்டரில் என்ன படம் பார்த்தேன் என்பது வெகு நேரம் நினைவுக்கு வ்ரவில்லை. யெஸ்.. ’பெரியார்’ பார்த்தேன். நமது நகர தலைவர் தான் ஒரு கையில் சிகரெட்டும் மறு கையில் டிக்கெட்டுமாக அன்று இரண்டையும் விநியோகம் செய்து கொண்டிருந்தார். வண்டியை நிறுத்திவிட்டு டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்று சதீஷ்கண்ணன் போட்டு வைத்திருந்த இடத்தில் அமர்ந்தோம்.

பூமியின் மைய அச்சின் வெப்பநிலை திடீரென்று வெகு அதிகமாக உயர்ந்து வருவதைக் கண்டறியும் இந்திய விஞ்ஞானி ஒருவர், அதை தன் அமெரிக்க விஞ்ஞானி நண்பரை அழைத்து காட்டுவதில் ஆரம்பிக்கும் படம், உலகத்தை ஒரு புரட்டு புரட்டி போட்டுவிட்டு தான் ஓய்கிறது. பெரிய சஸ்பென்களெல்லாம் வைக்காமல் படத்தின் துவக்கத்திலேயே உலகத்தின் முடிவை கொண்டு வந்துவிடுகிறார்கள். எல்லோருக்கும் எளிதில் புரியும் கதை; அதற்கேற்ற பிசிறில்லாத திரைக்கதை அமைப்பு; மிக பிரம்மாண்டமான காட்சியமைப்புகள்; குறிப்பாக திறமையான தமிழ் டப்பிங் என்று எல்லாம் கச்சிதமாக அமைந்திருந்தன. எந்த இடத்திலும் போரடிக்கவில்லை. முக்கியமாக சில சயின்ஸ் ஃபிக்‌ஷன்கள் போல எரிச்சல் தரவில்லை என்பதே இதன் வெற்றிதான்.

பூகோள அமைப்பறிவு கொஞ்சம் வாய்க்கப் பெற்றவர்களாயிருந்தால் திரையில் காட்டப்படும் இடங்களின் புவியியல் தன்மைகளை கருத்தில் கொண்டு, காட்சியமைப்பின் பின்னுள்ள செய்திகளையும் உணர்ந்து பார்க்க முடியும். உதாரணமாக, எஞ்சியுள்ள சிலராவது உயிர் பிழைக்கக் கட்டப்படும் ஸ்பேஸ் ஷிப்கள் ஏன் திபெத் பகுதியில் கட்டப்படுகின்றன என்பதை திபெத் ‘உலகத்தின் கூரை’ என்று ஏன் அழைக்கப்படுகிறது என்று அறிந்திருந்தால் நன்கு புரிந்துகொள்ள முடியும்.

இங்கே இப்படத்தின் இன்னொரு நுண்ணரசியலையும் கவனிக்க வேண்டும். இந்த ஸ்பேஸ் ஷிப்கள் எல்லாம் சீனாவில் கட்டப்படுகின்றன் என்று தான் படத்தில் சொல்லப்படுகின்றதே தவிர, திபெத் என்று மருந்துக்கும் யாரும் சொல்வதில்லை. ஒபாமா மட்டுமல்ல, ஒவ்வொரு அமெரிக்கனும் இனி திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாகத்தான் கருதுவான். காரணம் நான் பழகிப் பார்த்தவரையில் எந்த அமெரிக்கனுக்கும் உலக அரசியல் நடப்புகள் பற்றி தெரிந்திருக்கவில்லை. அல்லது அதில் அவர்களுக்கு ஆர்வமில்லை. பெரும்பாலான அமெரிக்கர்கள் கிணற்று தவளைகள்.

கடைசியில் படம் உலக பெரும் பணக்காரர்கள் மட்டும் ஸ்பேஸ் ஷிப்பில் ஏறி உயிர் தப்பிப்பதோடு முடிவடைகிறது. பெரும் பணக்காரர்கள் மட்டுமா என்று சிலர் புருவம் உயர்த்துவது தெரிகிறது. பின்னே.., ஸ்பேஸ் ஷிப்பில் இடம் வேண்டுமென்றால் ஒரு டிக்கெட் ஒரு பில்லியன் யூரோ ஆயிற்றே! சாதாரண மக்களால் மேலே தான் டிக்கெட் வாங்க முடியும். ஸ்பேஸ் ஷிப்பில் அல்ல, அல்லவா? (இங்கே இன்னொரு நுண்ணரசியல்: அமெரிக்கன் படத்தில் யூரோவுக்கு முக்கியத்துவம்!! டாலர் சினிமாவிலும் வலுவிழக்கிறது)

முதலாளித்துவத்தை ஆதரிக்கும் பூர்ஷ்வாத்தன படம் இது என்று எனக்குள்ளே ஒளிந்திருக்கும் கம்யூனிஸ்ட் குரல் கொடுத்தாலும், பணம் இருப்பவனே இவ்வுலகில் பாக்கியசாலி என்பதே நிதர்ஸனம் என்பதால், கதையமைப்பை புரிந்து கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முடிகிறது.

உலகம் அழிவதாகக் காட்டும் ஒவ்வொரு காட்சியிலும் தியேட்டரில் அப்படியொரு கரவொலி; கை தட்டல்! அழிவை கூட ’மனித மனம் எப்படி கொண்டாடுகிறது பார்’ என்று நானும் சதீஷ்கண்ணனும் பேசிக் கொண்டோம். இடைவேளையில் பார்த்தால் எல்லோரும் கல்லூரி இளைஞர்கள். இளங்கன்று ஸீரியஸ்னெஸ் அறியாது. எல்லாமே அவர்களுக்கு கொண்டாடம் தான். நாமும் அப்படித்தானே இருந்தோம். (இப்படிச் சொல்வதால் நாம் இளைஞர் இல்லை என்று அர்த்தமில்லை :-) )

முடிவற்ற நிலநடுக்கங்கள், சுனாமிகளின் முடிவில் பூமியின் புவியியல் அமைப்பில் பாரிய மாற்றங்களுடன் படம் முடிவடைகிறது.

படம், நிச்சயம் பார்க்கலாம். ஆனால் கண்டிப்பாக தியேட்டரில்!

0 comments:

Post a Comment