வாழ்க்கையின் தேட்டமும் தேடலும்

Posted: Sunday, November 8, 2009 | Posted by no-nononsense | Labels:
ஒரு சராசரி மனித வாழ்க்கையின் தேடல் என்னவாக இருக்கும்?

பணமும் புகழும் சம்பாதிப்பது

அதை அடைந்த பிறகு?

மேலும் பணமும் புகழும் சம்பாதிப்பது

அதற்கும் பிறகு?

மேலும் மேலும் பணமும் புகழும் சம்பாதிப்பது

இப்போது அவை இரண்டிலும் உங்களை விஞ்ச ஆளில்லை. அதற்கும் பிறகு உங்களின் தேடல் என்னவாக இருக்கும்??

இக்கேள்விக்கான தேடலில்தான் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் ஒளிந்திருப்பதாகத் தோன்றுகிறது.

இன்று மாலை நாமக்கல்லின் பிரபல மருத்துவரும் செல்வந்தருமான ஒருவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. சராசரிக்கும் கீழான வாழ்க்கை நிலையிலிருந்து தன் உழைப்பால் முன்னேறி நல்ல நிலையை அடைந்திருப்பவர். அந்த ஆழமரத்தின் நிழலில் இளைப்பாறுவோர் பற்பலர்.

பேச்சுவாக்கில் ஒரு நேரடியான கேள்வியை அவரிடம் தொடுத்தேன்.

“ஒரு காலத்தில் ஒருவேளை சோற்றுக்கு கஷ்டப்பட்டதாக சொல்றீங்க. இன்று சகல சௌபாக்கியங்களும் அமையப்பெற்ற வாழ்க்கை உங்களுடையது. வாழ்வில் நீங்கள் விரும்பிய நிலையை அடைந்துவிட்ட திருப்தி இருக்கிறதா?”

“இல்லப்பா. அன்னைக்கு இல்லாத சொத்து சுகம் இன்னைக்கு இருக்கு. ஆனா திருப்தியா இருக்கேனான்னு கேட்டா, நிச்சயமா இல்லைன்னுதான் சொல்ல முடியும். இப்போ என்னைவிட சொத்து அதிகம் வச்சிருக்கவன பார்த்து ஒரு காம்ப்ளக்ஸ் வந்துட்டுது”

“நீங்க கஷ்டப்பட்ட காலத்த நெனச்சிப் பார்த்தா கூடவா இன்றைய நிலை திருப்தி தரலை?”

“அதுதான் மனித மனதின் விசித்திரம். கீழிருந்து மேல வர்ற வரைக்கும் தான் அது போராட்டம். அதற்கு பிறகு மேல்மட்டத்தில் போராட்டம் மறைந்து ரேஸ் தொடங்கிடும். யார் அதிக பணக்காரன்ங்கிற ரேஸ்”

அவரே மேலும் தொடர்ந்தார்.

“வாழ்க்கையில முன்னேறனும்; சம்பாதிக்கணும்னு நினை. தப்பில்ல. ஆனா பணம் காசு வந்துட்டா நிம்மதி கிடைக்கும்னு நினைச்சிடாத. நிம்மதியை நீ இப்ப இருக்க வாழ்க்கையிலேயே கூட தேடிக்க முடியும். ஆனா எப்படி அப்படிங்கறதுதான் மேட்டர். அத கண்டுபுடிக்கறது பெரிய விஷயம்”

அதன்பிறகு பல பொருள் குறித்து பேச்சு தொடர்ந்தாலும் மனம் மேற்குறிப்பிட்ட உரையாடலையே சுற்றிவருகிறது.

எதனை ஆதர்ஷமாகக் கொண்டு வாழ்க்கையை முன்னகர்த்திச் செல்கிறோமோ, எதனை அடைய பெரும் பிரயத்தனங்களை எதிர்கொள்கிறோமோ, அதனை அடைதல் இறுதியில் அதற்குரிய பலனைத் தரவில்லை எனும்போது, அதுவரை அதன்பொருட்டு செலவழித்த காலத்திற்கும், உழைப்பிற்கும் நிஜத்தில் அர்த்தமென்ன?

வாழ்க்கையில் பொதிந்துள்ள மறைபொருள்கள் எளிதில் விளங்கி விடுவதில்லை.

0 comments:

Post a Comment