சில நேரங்களில் சில மனிதர்கள்

Posted: Thursday, May 12, 2011 | Posted by no-nononsense | Labels:
ஜெயகாந்தன் ‘அக்கினிப் பிரவேசம்’ என்று ஒரு சிறுகதை எழுதியிருந்தார். பின்னர் அதையே விரிவாக்கி ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்னும் புதினமாக எழுதினார். வெளியான காலத்தில் மிகப் பரவலான விமர்சன பாதிப்பை ஏற்படுத்தி இருந்த கதை அது. சாஹித்ய அகாடமி விருதும் கிடைத்தது. பின்னர் பீம்சிங் டைரக்சனில் அதே பெயரில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. என்னுடைய சேகரிப்பில் வெகுகாலமாக இருந்துவந்த அந்தப் படத்தை பார்க்கும் வாய்ப்பை இன்றுதான் ஏற்படுத்திக் கொண்டேன்.

புதினமாக எழுத்தில் வெற்றி கண்ட கதையை சினிமாவுக்கான திரைக்கதையாக திருத்தியமைக்கும் பொழுது மூலக்கதையின் ஜீவன் சிதைக்கப்பட்டுவிடுவதுதான் பெரும்பாலும் நிகழ்ந்துவரக்கூடிய ஒன்று. ஆனால் இந்த படம் அதனுடைய புதினத்தின் அழகு கெடாமல் வெகு நுட்பமான ரசனையுடன் வணிக சமரசங்களுக்கு ஆட்படுத்திக் கொள்ளாமல் எடுக்கப்பட்டிருந்தது. முக்கிய கதாபாத்திரங்களில் லட்சுமியும், ஸ்ரீகாந்தும் நடித்திருந்தார்கள்.

ஒரு மழைநாளின் மாலைப்பொழுதில் கல்லூரி முடிந்ததும் பேருந்துக்காக காத்திருக்கிறாள் கங்கா. விடாது பெய்யும் மழையில் தனியாக ஒரு அழகிய இளம்பெண்(கங்கா) நின்று தவிப்பதை காண்கிறான் காரில் உலா வரும் காமுகன் பிரபாகர். அவளிடம் சென்று லிப்ட் கொடுப்பதாக கூறுகிறான். முதலில் மறுத்தாலும், பின்னர் சூழ்நிலையை உத்தேசித்து அதை ஏற்றுக்கொண்டு வண்டியில் ஏறிவிடுகிறாள். பிரபாகரின் திட்டப்படி கார் ஊரை விட்டு விலகி தடம் மாறிச்செல்கிறது; தன்னுடன் வாழ்க்கையின் வழித்தடத்தையே கலைத்துப் போடும் சம்பவத்தை நோக்கி அவளையும் அழைத்துச் செல்கிறது. அவளுடைய எதிர்ப்புகளுக்கு பலனில்லாமல் கற்பு சூறையாடப்படுகிறது.

கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மகளின் அலங்கோல நிலை கண்டு நடந்ததை விசாரிக்கிறாள் கங்காவின் தாய். மறைக்க முடியாமல் உள்ளதை உள்ளபடியே அழுது புலம்பியபடி சொல்லிவிடுகிறாள் கங்கா. பொதுவாக குடும்ப ரகசியமாக நான்கு சுவர்களுக்குள் மூடி மறைக்கப்பட்டு விடக்கூடிய அந்த விஷயத்தை ஊரைக்கூட்டி ஒப்பாரி வைத்து விடுகிறாள் அவளுடைய தாய். உறவுகள் வெறுக்கின்றன. சுற்றம் வார்த்தைகளால் சுட்டெரிக்கின்றன. தங்கையின் மகளுக்கு நேர்ந்துவிட்ட கதியை கேள்விப்பட்ட பணக்கார தாய்மாமன் அவளை தன்னுடன் பட்டணம் அழைத்துச் சென்று தன் வீட்டில் தங்க வைத்து படிக்கவைக்கிறார். சபலம்... தங்கையின் மகள் என்றாலும் கற்பு கெட்டவள் தானே என்னும் சபலம் வயது வித்தியாசமின்றி அவளை வளைக்கப் பார்க்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படும் அவளைப் பார்த்து அவர் சொல்கிறார்,

“Ganga.. Let me tell you something. You can be only a concubine. Not a wife. நீ யாருக்காவது வப்பாட்டியா இருக்கலாமே தவிர, யாருக்கும் மனைவியா இருக்கமுடியாது. Why not MINE? "

தாய்மானின் சீண்டல், சில்மிஷம், ஆசை வார்த்தைகள் எதற்கும் பிடிகொடுக்காமல் சமாளித்துக்கொண்டே படிக்கிறாள். பட்டம் வாங்குகிறாள். நல்ல ஒரு வேலையிலும் சேர்ந்துவிடுகிறாள். விரக்தியில் ஒருநாள் அவள் தாய்மாமன் சொல்கிறார், “இவளுக்கு சமர்த்து இருந்தா இவள கெடுத்தவனையே தேடிப்பிடிச்சி இ-வ-ந்-தா-ன் என் ஆம்படையான்னு காட்டட்டுமே” என்கிறார். அவளிடம் சவாலாக அல்ல, காது படாமல்தான். ஆனாலும் அவள் காதில் விழுகிறது. தன்னை நிர்கதியாக்கியவனை மீண்டும் சந்திப்பது குறித்த எதிர்பார்ப்புகள் முதல்முறையாக அவள் மனதிலும் விழுகின்றன.

இதன் பிறகே கதையின் மையநீரோட்டம் தொடங்குகிறது. அதன் பயணம் எதிர்பார்ப்புகளுக்கு எதிர்மாறான திசையில் கண்ணியமான உரையாடல்களின் வழியாக நகர்ந்துச் செல்ல ஆரம்பிக்கிறது.

கங்காவாக லட்சுமியும் அவரை கற்பழித்த பிரபாகராக ஸ்ரீகாந்தும் வாழ்ந்திருப்பார்கள். ஸ்ரீகாந்த் எந்தளவு திறமைசாலியான நடிகர் என்பதை அவரை இந்த கதையினுள் பிரபாகராக பார்க்கும்போதே உணரமுடியும். உடல்மொழிகளில் நுட்பம் வேண்டி நிற்கும் சற்று கடினமான பாத்திரம்; அநாயசமாக செய்திருப்பார். திரையுலகம் வீணடித்துவிட்ட ஒரு நடிகர்.

லட்சுமிக்கோ இப்படம் ஊர்வசி பட்டமே பெற்றுத் தந்தது. (அதாவது தேசிய விருது). அந்த பாத்திரத்தில் கங்காவாக வாழ்ந்து காட்டியிருப்பார் என்பதெல்லாம் சம்பிரதாயமான வார்த்தைகளாகவே இருக்கும். இவரைப்போய் பல காலத்திற்கு டூயட் பாடவிட்டு விட்டார்களே என்று வருத்தம் கவிகிறது.

இன்னொரு முக்கியமான பாத்திரமாகிய தாய்மாமா பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தவர் ஒய்.ஜி.பார்த்தசாரதி (சுருக்கமாக ஒய்.ஜி.பி - ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை). நாடக உலகில் மிகப்புகழ்பெற்ற ஆளுமை. இவரின் நடிப்பைக் காணும்போது இவர் ஏன் நாடகங்களுடன் நிறுத்திக்கொண்டார் என்று தவிர்க்க முடியாமல் ஒரு அங்கலாய்ப்பு ஏற்படுகிறது.

கங்காவின் கதையை நாவலாக எழுதும் எழுத்தாளராக நாகேஷும் வருகிறார். அவர் மூலமாகத்தான் கங்கா பிரபாகரையே சந்திக்கிறாள். நாகேஷ் எந்தவித சிரமமும் இன்றி வெகு லாவகமாக, உடல்மொழிகளை காணும்போது - மிகவும் அனுபவித்து செய்த வேடமாகவே தெரிகிறது.

ஜெயகாந்தனின் விருது பெற்ற கதை என்பதால் இதைக் கையாள்வதில் இயக்குநருக்கு இருந்திருக்கக்கூடிய அழுத்தத்தை இந்த கைதேர்ந்த நடிகர்களெல்லாம் சேர்ந்து வெகு சுலபமாக்கி விட்டிருக்கிறார்கள். நாம் பார்த்துக்கொண்டிருப்பது சினிமா என்னும் நினைவை மறந்து காட்சிகளுடன் ஒன்றிப்போய் நாமும் அதன் போக்கில் நம்மை தொலைத்து விடுகிறோம்.

சில நேரங்களில் சில மனிதர்கள் - இலக்கியத்திற்கு பெருமை சேர்த்த திரைப்படைப்பு. தமிழின் சிறந்த படங்களின் வரிசையில் கட்டாயம் இடம்பிடிக்கக்கூடிய ஒரு நல்ல சினிமா. சந்தர்ப்பம் கிடைக்கும்போது தவறவிடாமல் பாருங்கள்.

0 comments:

Post a Comment