எல்லே இளம்கிளியே

Posted: Thursday, December 30, 2010 | Posted by no-nononsense | Labels:
எல்லே இளம்கிளியே

மார்கழித் திங்கள் 15ஆம் நாளில் பக்தர்கள் பாடி மகிழும் ஆண்டாள் திருப்பாவையின் கீழ்காணும் 15ஆம் பாடல் ஓர் அற்புதம்! ஒரு சிறிய அழகிய நாடகமே அதில் அடங்கியுள்ளது. பக்தியோடு தமிழின் செழுமைக்காகவும் பக்தி இலக்கியங்களை படியுங்கள் தோழர்களே.

எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

(உறங்கிக்கொண்டிருப்பவளை தட்டியெழுப்பி பெருமாளை பாட அழைக்கிறாள் ஒருவள். அதற்கு மறுமொழி தருகிறாள் மற்றவள்)

இன்று அதிகாலை
செய்திதாளில்
இப்
பாடலையும் பொருள் விளக்கத்தையும் படித்ததில்
இருந்தே இதைத்தான்
வாய் முணுமுணுத்துக்கொண்டு இருக்கிறது.

பொருள்:

எழுப்புவோர்: ஏண்டி! இளங்கிளி போல் மிழற்றும் குமரிப் பெண்ணே, இன்னமும் உறங்குகின்றாயே!

தூங்குபவள்: பெண்களே! 'சில்' என்று கத்தி கூப்பிடாதீர்கள்! இதோ வந்து விடுகின்றேன்.

எழுப்புவோர்: நீ மிகவும் கெட்டிக்காரி! பசப்பு வார்த்தைக்காரி! உன்னுடைய பேச்சுவன்மையை நாங்கள் முன்பே அறிவோம்! உன் வாயையும் நாங்கள் அறிவோம்!

தூங்குபவள்: கெட்டிக்காரிகள் நீங்களா? நானா? நானே ஆனாலும் சரி.

எழுப்புவோர்: சீக்கிரம் எழுந்து வா! இந்த கெட்டிக்காரத்தனத்தைத் தவிர வேறு என்ன வைத்திருக்கின்றாய்!

தூங்குபவள்: நம் தோழியர்கள் அனைவரும் வந்து விட்டனரா?

எழுப்புவோர்: வந்து விட்டார்கள்! சந்தேகம் இருந்தால் நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள். குவாலயாபீடம் என்ற யானையை கொன்ற கண்ணனை, பகைவரின் செருக்கை அழிக்க வல்லவனை(வல்லானை) மாயக்கண்ணனின் புகழைப் பாடலாம் சீக்கிரம் வாடி.


0 comments:

Post a Comment