அதிதி தேவோ பவ

Posted: Wednesday, December 29, 2010 | Posted by no-nononsense | Labels:
எல்லா மலேசிய தமிழர்களுக்கும் ஒரு கனவு இருக்கும். என்றாவது ஒரு நாள் தமிழக மண்ணை மிதித்து ஊர் சுற்றிப் பார்த்துவிட்டு வர வேண்டும் என்னும் ஆசைதான் அது. தங்களுடைய மூதாதையர்களின் பூமி என்பதுடன் இதுவரை சினிமாவிலும் தொலைக்காட்சிகளிலும் மட்டும் கண்டு களித்து வரும் இடங்களை நேரிலும் பார்க்கும் ஒரு ஆர்வம் என்றும் சொல்லலாம்.

காலக்கிரமத்தில் இந்த ஆசை என்னுடைய மலேசிய தோழி ஒருவருக்கும் வந்து சேர்ந்தது. அவர் என்னுடைய நெருங்கிய நட்பு வட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவருடைய குணநலன்கள் எனக்கு நன்கு தெரியும். தமிழ் கலாச்சாரத்தை அடியொட்டிய சிந்தனைகளை கொண்டவர். கடவுள் பக்தி அதிகம். தமிழ்நாட்டின் புண்ணிய ஷேத்திரங்களுக்கு செல்ல வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் விருப்பம். தொழில்முறையில் ஆசிரியர்.

இந்தியாவில் இருப்பது போன்ற கல்வியாண்டு மலேசியாவில் கிடையாது. அங்கே ஜனவரியில் பள்ளிகள் தொடங்கி நவம்பரில் முடிந்துவிடும். டிசம்பர் முழுக்க பள்ளி விடுமுறை நாட்கள். அதனால் டிசம்பரில் தமிழ்நாட்டு கோவில் குளங்களில் அதிகமாக மலேசிய தமிழர்களை காணமுடியும்.

தோழியும் அவ்வாறாக டிசம்பரில் கிடைத்த விடுமுறையில், இஷ்ட மித்ர பந்துக்களுடன் ஒரு குழாமாக தமிழகம் வந்து சேர்ந்தார். நிச்சயம் தமிழ் மண்ணை மிதிக்கும்போது அவருக்கு மெய் சிலிர்த்திருக்கும் என்றுச் சொல்லமுடியும். இங்கே வரும் தன் விருப்பம் பற்றி என்னிடம் அவ்வளவு பேசி இருக்கிறார்.

கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேரடி விமானம் உண்டு. அதில்தான் பெரும்பாலும் மலேசிய தமிழர்கள் வருவார்கள். திருச்சி, அங்கே ஸ்ரீரங்கம், பின்னர் தஞ்சை பெரியகோவில், ராமேஸ்வரம், மதுரை என அவர்களுக்கு என்று ஒரு சுற்றுலா வழித்தடம் உண்டு. ஊரிலேயே சொல்லி அனுப்புவார்கள் போலும்.

அந்த வழியிலேயே ஆரம்பமானது தோழியின் யாத்திரையும். பயணத்தின் தொடக்கத்தில் உற்சாகமாக பேசி வந்தவரிடம் ஓரிரு வாரங்கள் போனதும் மெல்ல ஆர்வம் குன்றுவதை என்னால் உணர முடிந்தது. நாள் செல்ல செல்ல கோவில் குளம் பற்றிய தன் பேச்சை முற்றிலுமாக குறைத்துக்கொண்டு தாங்கள் ஷாப்பிங் சென்ற கதை, வழியில் கண்டது கேட்டது என அவருடைய வழக்கத்திற்கு மாறாக பேச ஆரம்பித்தார்.

இருவரின் அவசர குறு உரையாடல்களுக்கிடையே ஒருநாள் கிடைத்த ஆசுவாசமான உரையாடலின் போதுதான் காரணம் புரிந்தது. அந்த உற்சாகமின்மைக்கு காரணம் சில கோவில்களில் கிடைத்த கசப்பான அனுபவம் தான் என்று தெரிந்தது.

உதாரணமாக, பழநி மலையில் கோவில் உள்ளே தனி வழி மூலம் அழைத்துச் செல்ல என்றே புரோக்கர்கள் சுற்றிக்கொண்டிருப்பார்கள். இது நாம் அறிந்ததுதான். முகத்தில் இந்தியக்கலை தெரிபவர்களிடம் அதிகம் சீந்த மாட்டார்கள். ஆனால் ஆளை பார்த்தால் மலேசியா, சிங்கப்பூர் மாதிரி தெரிந்தால் (அதான் அந்த குழுவில் இருக்கும் பெரியம்மா கைலி கட்டி இருப்பாரே..) உடனே மொய்த்துக்கொண்டு கெஞ்ச ஆரம்பித்து விடுவார்கள்.

அப்படி இவர்களிடம் மொத்தமாக 500 ரூ என பேரம் பேசி உள்ளே அழைத்து சென்ற நபர் 1200 தந்தால்தான் ஆச்சு என்று மிரட்ட ஆரம்பித்து விட்டாராம். அங்கேயிருந்த காவலர் உட்பட யாரும் அதைக் கண்டு கொள்ளவில்லையாம். இந்த முன்னுக்குப் பின் முரணான பணம் பறிக்கும் வேலை கண்டு முகம் எல்லோருக்கும் பேஸ்தடித்துவிட்டது. பணம் கூட பிரச்னையில்லை. ஆனால் இறைவனின் சந்நிதானத்தில் எப்படி இப்படியெல்லாம் ஏமாற்று வேலைகள் கிட்டத்தட்ட அஃபிஷியலாக அனுமதிக்கப்படுகின்றன என்று வருத்தப்பட்டார்.

அதேபோல மதுரையில் வெளியே முந்நூறு ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்ற மாலையை அம்மன் கழுத்தில் சாற்ற தனியாக நூறு ரூபாய் கேட்டார்களாம். சாற்றுவதற்கு எதற்கு காசு; அதான் அர்ச்சனைக்கும் உள்ளே அழைத்துச் செல்வதற்கு ஏற்கெனவே கொடுத்துவிட்டோமே என்று சொல்லிப் பார்த்து பலன் இல்லை என்றார். இதெல்லாம் அவருக்கு பெரிய அதிர்ச்சி.

‘நீங்கள் வேண்டுமானால் மலேசியாவின் எந்த கோவிலுக்கு வேண்டுமானாலும் வந்து பாருங்கள், இப்படியெல்லாம் ஒரு இடத்திலும் கிடையாது’, என்று புலம்பினார்.

‘இப்போது புரிகிறது நீங்கள் ஏன் கோவில், தெய்வம் போன்றவற்றின் மீது பற்றில்லாமல் இருக்கிறீர்கள்’, என்று சொல்லி சிரித்தார். ஆனால், என்னால்தான் அந்த சிரிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. போவது தமிழனின் மானம் அல்லவா!

‘கோவில்கள் போகட்டும். இங்கே சந்தித்த பிரச்னை என்று வேறு எதுவும் உண்டா’ என்றதற்கு அவர் பகிர்ந்து கொண்ட அதிருப்திகளில் முதலிடம் பெறுவது நம் ஊரின் கலீஜான பொது கழிப்பிடங்கள். மேலும் திறந்த வெளியில் மல ஜலம் கழித்தபடி அமர்ந்திருப்பது, எல்லா சுற்றுலா தளங்களிலும் குவிந்து கிடக்கும் பிச்சைக்காரர்கள், போலவே அர்ச்சனை தட்டை வாங்கிக்கொள்ள சொல்லி சூழ்ந்துகொண்டு துரத்தும் கோவில் வாசல் கடைக்காரர்கள் என்றுபோன்ற விஷயங்கள் விரும்பத்தகாத அனுபவங்களாக இருந்ததாக சொன்னார். எல்லாம் வழக்கமாக நாம் கேட்கும் புகார்கள் தாம்.

இவற்றையெல்லாம் தாண்டி மனதில் நினைத்து வழிபட்ட தெய்வங்களின் வாசல்களை மிதிக்க முடிந்தது மிகவும் மனநிறைவாக இருப்பதாகவே சொன்னார். இந்த நிறைவுதான் மீண்டும் மீண்டும் பக்தர்களை தமிழக கோவில்களை சுற்றி வரச் செய்கிறது. அடுத்தமுறை வரும்போது இன்று கசப்பான அனுபவமாக தெரிவதெல்லாம் இவருக்கும் நம்மை போலவே பழகியிருக்கும். சுலபமாக எதிர்கொண்டு விடுவார்.

இங்கே பிடித்திருந்தது என்றால்: சரவணபவன் சாப்பாடு (அங்கே மலேசியர்கள் அதிகம் அசைவமே எடுத்துக்கொள்கிறார்கள்), அடையாறு ஆனந்தபவன் பலகாரம், மூட்டையாக துணிகளை கட்டிச்செல்லும்படியான ரெங்கநாதன் தெரு - பாண்டி பஜார் ஷாப்பிங் என்று வழமையாக கீழைநாட்டுத் தமிழர்கள் சுகித்து மகிழ்ந்து பாராட்டும் விஷயங்களே இவரையும் கவர்ந்திருந்தன. ஆனால் இவைகளுக்கும், அவர் எதிர்பார்த்து வந்திறங்கிய பண்பாட்டு அடையாளங்களுக்கும் ப்ராப்தி இல்லை என்பதை என்னால் சொல்லிக்கொள்ள முடியவில்லை.

அவர் விடை பெற்றுக்கொண்ட பிறகு சுற்றுலா பயணிகளை நமது தேசம் எதிர்கொள்ளும்விதம் பற்றி மனதில் வெகுநேரம் அசை போட்டுக்கொண்டு இருந்தேன். அதிதி தேவோ பவா என்னும் அளவிற்கு கடவுளாக விருந்தினரை உபசரிக்கவில்லை என்றாலும்கூட அவர்கள் முகம் சுழிக்கும்வண்ணம் பணம் பறிக்கும் வேலை செய்யாமல் இருக்கலாம். அதற்கென இருக்கும் அமைப்புகள் அவற்றை கண்காணிக்கலாம்.

ஆயிரம் சிறப்புகள் கொண்ட தேசமாக பாயிரம் ஆயிரம் பாடி வைத்துக்கொள்வது மட்டுமே ஒரு தேசத்தின் அடையாளம் ஆகிவிடாது. அது உண்மையில் இங்கேயுள்ள மனிதர்களிடம் இருக்கிறது.

0 comments:

Post a Comment