Encounter with comrades

Posted: Tuesday, February 15, 2011 | Posted by no-nononsense | Labels:


photo0309p.jpg

ஏறத்தாழ இரண்டு வருடங்களாக கரூருக்கு பேருந்தில் சென்று கொண்டிருக்கிறேன். ஆனால் எப்போதும் கரூர் பேருந்து நிலையம் சென்று இறங்குவது எனக்கு வழக்கமல்ல. அதற்கு முந்தைய நிறுத்தத்திலேயே இறங்கி விடுவேன். மிக நெரிசலான தினங்களில் நடுப் பேருந்தில் மாட்டிக்கொண்ட நாள்களில் மட்டும் பஸ் நிலையம் சென்று இறங்கி அங்கேயிருந்து அலுவலகம் நோக்கி பின்னோக்கி வருவேன்.

என்றாவது நடக்கும் இந்த சம்பவம் எனக்கு ஒரு விதத்தில் பிடிக்கும். பஸ் நிலையத்திலிருந்து அலுவலகம் வரும் வரை சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களையும், துண்டு பிரசுரங்களையும், அரசியல் கட்சிகளின் - சினிமா ரசிகர்களின் ஃப்ளக்ஸ் போர்டுகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே வரலாம். பல சுவாரசியமான விஷயங்கள் அதில் கிடைக்கும்.


சில சமயம் பஸ் நிலையம் வெளிப்புறமுள்ள ரவுண்டானா அருகில் ஏதாவது தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்து கொண்டிருக்கும். பெரும்பாலும் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் அதை செய்வதில்லை. மாற்று சிந்தனைகளை மக்கள் மனதில் விதைப்பதை சித்தாந்தமாக கொண்டிக்கும் இயக்கத்தினர்தான் வெயிலில் வதையும் சிரத்தைகளை எடுத்துக் கொள்வர் என்பதால், அதையும் சிறிது செவி மடுக்கலாம்.

இன்று அப்படியாக பேருந்து நிலையம் சென்று இறங்க நேர்ந்தது. பேருந்து உள்ளே நுழையும் போதே ஏதோ தெருமுனைப் பிரச்சாரம் நடந்து கொண்டிருப்பதைக் கண்டேன். சிவப்பு வண்ண பேனர்கள் அது பொதுவுடமை குழுவினர்களில் ஒருவருடையதாக இருக்கலாம் என்று கட்டியம் சொன்னது. தேர்தல் நேரத்த்தில் எப்படி என்னதான் பேசுகிறார்கள் என்று கேட்க அவர்களை நோக்கிச் சென்றேன்.

'பழங்குடியினரின் வாழ்வாதரமான இடங்களை சுரங்கம் அமைத்து சுரண்டும் பெருமுதலாளிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுவோம். ஸ்பெக்ட்ரம் ஊழல் சொத்துக்களை “நக்சல்பாரிகளாக” மாறி பறித்தெடுப்போம்’ என்று பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தது. மைக் பிடித்து பேசியவர் மிக ஆவேசமான, அதே நேரம் கருத்துள்ள உரையை ஆற்றிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டுக்கொண்டே நெருங்கி மிக நேராக அவர்களுக்கு நேரெதிராக நின்று என் மொபைலில் போட்டோ எடுத்துக் கொண்டேன். இது எனக்கு எப்போதும் ஓர் அநிச்சை செயல். என் கவனத்தை கவரும் எந்த நிகழ்வையும் உடனே படம் பிடித்துக் கொள்வேன்.


படம் பிடித்துக் கொண்டு அவர்களை நோக்கிச் சென்றேன். அவர்களை கடந்துதான் அலுவலகம் செல்ல வேண்டும். ஒரு சிவப்பு சட்டைத் தோழர் மெல்ல என்னை நெருங்கி கொஞ்சம் கனத்தை குரலில் விசாரிக்க ஆரம்பித்தார்.

‘உங்க பேர் என்ன சார்? உங்க போன் நம்பர் கொடுங்க’

‘எதுக்கு கேக்கறீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?’

’இல்லை.. அங்கேயிருந்து போட்டோவெல்லாம் எடுத்தீங்க? எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாமா?’

‘நான் இந்த நாட்டு சிடிசன் சார். என் முன்னாடி திறந்தவெளியில நடந்த கூட்டத்தைதான் போட்டோ எடுத்தேன். அதென்ன தப்பு’

‘இல்ல.. எங்கள போட்டோ எடுத்த எல்லோருடைய டீடெயிலும் கேட்டு வாங்கி வெச்சிருக்கோம்.. பாருங்க வேணா.. ‘ என்று பல பெயர்களும் நம்பர்களும் குறித்து வைக்கப்பட்டுள்ள ஒரு தாளைக் காட்டினார்.

‘அதிருக்கட்டும். அதுக்காக நான் ஏன் என் டீடெயில் தரணும். அதான் சொன்னேனே நான் ஒரு சாதாரண குடிமகன். அவ்வளவுதான்’

‘இந்த மாதிரி மீட்டிங் நடந்தா உங்கள கூப்பிடுவோம். அதுக்குதான். அதில்லாம நீங்க போட்டோ எடுத்தது டீடெயில் தர மாட்டேன்னு சொல்றது எல்லாம் மர்மமா இருக்கு. பெயர், நம்பர் கொடுங்க’

அந்தத் தோழரின் பதட்டம் எனக்கு சிரிப்பையே வரவழைத்தது. சிரித்துக் கொண்டே சொன்னேன்.

‘தோழர்.. என்ன இப்படி பதட்டப்படுறீங்க. நான் பார்த்த ம.க.இ.க இயக்கம் இது இல்லையே. புதிய கலாச்சாரத்திலும், புதிய ஜனநாயகத்திலும், தோழர் மருதையனின் உரையிலும், ஸ்ரீரங்க கருவறை நுழைவுப் போராட்டங்களிலும் நான் கண்ட தீரம் இது இல்லையே’ என்றதும் சிறிது பின்வாங்கினார்.

ம.க.இ.க பற்றிய அறிதல் இல்லாதவர்களுக்கு இந்தப் பெயர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் குறிப்பாக அவர்களின் இயக்கத் தலைவர் மருதையனின் பெயர் பொதுவெளியில் அதிகம் புழக்கமில்லை.

‘இல்ல, ஏதாவது மீட்டிங்னா சொல்லுவோம். அதுக்குதான்...’, தோழர் விடவில்லை.

‘தோழர்.. இயக்கத்திற்கான தியாகமும் என்னிடமில்லை; குடும்பம் இருக்கிறது. ஒரு சாமானியனாக கருத்தியல் ரீதியான ஆதரவு என்றும் உண்டு. அதற்கு மேல் களப்பணிக்கு நான் ஆளில்லை. உங்களுக்கு இந்த போட்டோவை அழித்துவிட வேண்டும்னா இப்பவே செய்யறேன்’ என்றபடி மொபைலை எடுத்து அழிக்கப் போனேன்.

தோழர் தடுத்து, ‘நான் இந்த மாவட்டத்து ம.க.இ.க பொறுப்பாளர்ங்க. பெயர் *&^$#@. இந்த நம்பர்ல என்னை காண்டக்ட் பண்ணுங்க’ என்று விடாப்பிடியாக பெயரையும் எண்ணையும் ஒரு துண்டு பிரசுரத்தில் எழுதிக் கொடுத்தார்.

‘உங்க பெயரையாவது சொல்லிட்டு போங்க தோழர்’

’பெயர் ......, என் அலுவலகம் LGB பெட்ரோல் பங்க் கட்டிடத்தில்’ என்றபடி புன்னகைத்து நகர்ந்து நடக்க ஆரம்பித்தேன். மைக் பிரச்சாரகர் இன்னும்கூட பழங்குடி வாழ்விடங்களிலேயே இருந்தார். அதில் விளக்கிச் சொல்ல நிறைய இருக்கிறதல்லவா. ஆனால் ஒருவரும் கவனித்ததாகத்தான் தெரியவில்லை.

அவரை அனுப்பி என்னை விசாரிக்கச் சொல்லிவிட்டு, அதுவரை தூரத்தில் இருந்தவாறு எங்களை கவனித்துக் கொண்டிருந்த மற்ற தோழர்கள் என்னை விசாரித்தவரிடம் பார்வையால் விசாரித்ததை கவனித்தேன். என்ன பதில் சொல்லியிருப்பார் என்பதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. ஆனால் தோழர்கள் ஏன் இப்படி பதட்டப்படுகிறார்கள் என்பதில்தான் என் சிந்தனை இருக்கிறது.

பிரச்சாரம் செய்வது பொது இடத்தில், தெருமுனையில். ஆனால் யார் யாரெல்லாம் தங்களை குறிப்பெடுக்கிறார்கள் என்பதிலும் ஒரு நோட்டமும் கவனமும். அநேகமாக ”நக்சல்பாரியாக மாறுவீர்” என்னும் பேனரும் முழக்கமும் அவர்களுக்கே பதட்டத்தைத் தந்து ஒருவித அதீத எச்சரிக்கை உணர்வின் பிடியில் வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

இப்படி ஒரு வெளிப்படையான நக்சல்பாரி பிரச்சாரத்திற்கு அனுமதி தந்து அரசு எப்படி வேடிக்கைப் பார்க்கிறது என்பதுதான் எனக்கு இதில் புதிராயிருக்கும் விஷயம். இது அரசு கொள்கைக்கு விரோதமானது. எனக்கு விரோதமானதா என்று கேட்டால் புன்னகையே என் பதில். ஏன் என்று கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். பிறகு கேட்பவர்களை நானும் தோழர் போல குறிப்பெடுக்க வேண்டியிருக்கும் ;-)

0 comments:

Post a Comment