தன் காசே தனக்குதவி

Posted: Wednesday, July 13, 2011 | Posted by no-nononsense | Labels:
நாமக்கல்லைச் சுற்றி கடிகாரச் சுற்றில் சேலம், திருச்சி, கரூர் என்று சுற்றி விட்டு தற்சமயம் தாற்காலிகமாக இராசிபுரத்தில் பஸ் இறங்கி ஏறிக் கொண்டிருக்கிறேன். ஆனால் வேறு எங்கும் அதிகம் கண்டிராத ஒரு விஷயத்தை இந்த சிற்றூரில் அவதானிக்க முடிகிறது. ஆண்டகளூர் கேட்டில் டவுன் பஸ்ஸுக்காக நின்று கொண்டிருக்கும் போதும் சரி, ஊருக்குள் பழைய பஸ் ஸ்டாண்ட், கோர்ட், பொது மருத்துவமனைகளின் பக்கம் சுற்றும் போதும் சரி, ரத்தம் சுண்டிப் போய் நடக்க திராணியிழந்த வயோதிகர்கள் மிகப் பரிதாபமாக நம் முன்னால் வந்து பிச்சை கேட்கிறார்கள். பார்த்தாலே நெக்குருகுகிறது.


இவர்களுக்கு குறைந்தபட்சம் 60 வயதாவது இருக்கும். 30 வயது தொடக்கமே வயோதிகம் பற்றிய எண்ணங்களும் கவலைகளும் விட்டு விட்டு வரத் தொடங்கிவிடுகின்றன. இருந்தும், இறுதிகாலம் இப்படி பஸ் ஸ்டாண்ட் பிச்சைக்காரர்களாக அலைய விடுகிறது என்றால், இதிலிருந்து நம் வாழ்க்கைக்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.

என்னுடைய பழைய மேலாளர் இதைப்பற்றிய சிந்தனைகள் அதிகம் உடையவராக இருந்தார். குழு சந்திப்புகளில் பிஸினஸ் பற்றி பேசி முடிந்து, பேச்சு தனிப்பட்ட விசயங்களுக்கு வந்ததும் ஒவ்வொருவரின் சேமிப்பு திட்டங்கள், அவற்றின் செயற்பாடுகள் பற்றி அக்கறையாக விசாரிப்பார். எல்லோரையும் பென்சன் திட்டம் எதிலாவது சேரச்சொல்லி வலியுறுத்துவார்.

அவரிடம் அது பற்றி விரிவாக உரையாட எண்ணியிருந்து, விடுபட்டு, கடந்துச் சென்ற எத்தனையோ விஷயங்களில் அதுவும் ஒன்றாகிப் போனது.

முதுமையை உடலளவில், மனதளவில் மாத்திரமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் எதிர்கொள்ளத் தேவையான ஆயத்தங்கள் சம்பாதிக்க ஆரம்பித்த காலகட்டம் முதலே அவசியம் என்பதை கண்கூடான சில நிகழ்வுகள் உணர்த்துகின்றன. கண்முன் வராத துயரங்கள் எப்போதும் சொல்லித் தராத பாடங்களை தனக்குள் பொதித்துக் கொண்டுள்ளன என்பதை சிந்தித்து உணரலாம்.

0 comments:

Post a Comment