பழைய பாடல் X புதிய பாடல்

Posted: Thursday, July 14, 2011 | Posted by no-nononsense | Labels:


i-love-music.jpg


பழைய பாடல் இனிதா, புதிய பாடல் இனிதா என்பது மாதிரியான ஒரு தலைப்பில் இன்று இரு கிளைமண்டுகள் சீரியஸாக விவாதித்துக்கொண்டு இருந்தனர். அலுவலகத்தில் அரசியல் பேசுவதில்லை, எந்த விவாதத்திலும் கலந்து கொள்வதில்லை, எதிலும் அபிப்ராயம் தெரிவிப்பதில்லை என்பதை சிரமப்பட்டு கடைபிடித்து வருகிறேன். அதனால் கண்டுகொள்ளவில்லை.

பழைய பாடலை ஏன் இவ்வளவு சிலாக்கிக்கிறோம்?

சில புதிய பாடல்களும் நன்றாகத் தானே இருக்கின்றன?

இப்படி பல கேள்விகள் எழுவதுண்டு.

உண்மையில் பழைய பாடல், புதிய பாடல் என்று ஒரு வித்தியாசமே இல்லை. இருப்பதெல்லாம் நல்ல பாடல்கள், மோசமான பாடல்கள் என்னும் இரு பிரிவுக்குள் அடங்கிவிடக் கூடியவை. அதற்கு கால பேத வர்த்தமானம் கிடையாது.

பழைய பாடல்களின் காலம் என்று நாம் போற்றும் 50-களில் இருந்து 80 வரையிலான காலகட்டத்திலும் மோசமான பாடல்கள் எண்ணிலடங்காமல் போடப்பட்டன. இன்றைய ’ஒமகஸீயா’ போன்ற அர்த்தமற்ற ஒலிக் குறிப்புகள் கொண்ட பாடல் வரிகள் ஐம்பதுகளிலேயே உண்டு. மந்திரிகுமாரியின் எனக்கு பிடித்த ‘மந்தாரைச் செடி ஓரம்’ பாடலில் அப்படிப்பட்ட ஓசைகள் பாடல் நெடுக தொடர்ந்து வரும். சிவாஜியின் பிரபலமான ‘திண்ணைப் பேச்சு வீரரிடம்..’ பாடலின் துள்ளலுக்கு டெம்போ ஏற்றுவதே அந்த ‘டகுடி டகுடி’ ஒலி எழுப்பல் தான்.

அன்றும் அதற்கு முந்தைய காலகட்ட பாடல்களையே பாராட்டிப் பேசி சமகால இசையை குறைகூறிய பெரிசுகள் நிச்சயம் இருந்திருப்பார்கள்.

அப்படியானால் அடிப்படையில் எதுதான் வித்தியாசம்?

எனக்குத் தோன்றுவது ‘ஜீவன்’ தான்.

பாடல் ஹிட் ஆவதை மட்டும் கொண்டு அதை சிறந்த பாடலாக வகைப்படுத்த முடியாது. இரண்டு நாட்களாக கோ படத்தில் சில பாடல்களை திரும்ப திரும்ப கேட்டு வந்தேன். முணுமுணுக்கவும் செய்துகொண்டிருந்தேன். ஆனால் இன்று அது போரடிக்கிறது. மீண்டும் பழைய பிடித்தமான பாடல்களுக்குத் திரும்பி விட்டேன். இது மாதிரி பட்டியல் போட்டால் எண்ணில் அடங்காது என்பது எல்லோருக்கும் தெரியும். இது நிச்சயமாக பொதுவான ஒரு அநுபவம் தான்.

இப்படி சலிப்பு ஏற்படுவது கடந்த பதினைந்து ஆண்டுகளாகத்தான் மிக அதிகம். அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தின் இசை என் விருப்பத் தொகுப்புகளுக்குள் மிக அரிதாகவே ஒன்றிரண்டு என இடம்பெறுகின்றன. எஞ்சியவை ஆரம்ப ஈர்ப்பு முடிந்ததும் காணாமல் போய்விட்டன.

இசை என்பது கேட்பதற்கு என்பதிலிருந்து ஆடுவதற்கு என்றாகிவிட்டதால் தான் இசை ஜீவனற்றுப் போய்விட்டது என்று வைரமுத்து ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆடுவதற்காக போடப்படும் துள்ளல் இசைக்கு என்றுமே நிலைப்பேறு இருந்ததில்லை. ஐம்பதுகளில் வெளியான உத்தமபுத்திரனின் யாரடி நீ மோகினி பாடல் அளவுக்கு வேறு எந்தப் பாடலும் இன்று வரையில் ரசிகர்களை கிறுக்குப் பிடித்து ஆட வைத்ததில்லை என்றுச் சொல்லலாம். ஆனால் அதன் கிறுகிறுப்பு நிலைக்கவில்லை. ஆனால், அதே படத்தில் ஒலித்த ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்றும் இனியவையாக காலம் கடந்து நீடிக்கிறது.

ஆக, பழைய பாடல்கள் எல்லாம் இனிமையானவை என்றில்லை. இருவிதமான பாடல்கள் எல்லா காலகட்டங்களிலும் இருந்து வருகின்றன. எண்ணிக்கையின் மிகுதி குறைவை பொறுத்தே அந்தந்தக் காலகட்டங்கள் தரப்படுத்தலுக்கு உள்ளாகின்றன. அது தர்க்க ரீதியானதொரு மதிப்பீடாக மட்டுமே இருக்க முடியும்.

0 comments:

Post a Comment