மொழியால் மட்டும் ஒற்றுமை சாத்தியமா?

Posted: Monday, April 19, 2010 | Posted by no-nononsense | Labels:
நாம் தமிழர் இயக்கம் ஏன் என்னும் சீமானின் உரையை முன்வைத்து:

சீமானின் இந்த உரையை மிக ஆர்வமுடன் கேட்டேன். மீண்டும் பெருத்த ஏமாற்றம். ஈழம்.. ஈழம்.. ஈழம்..! என் அண்ணன் பிரபாகரன்.. பிரபாகரன்.. பிரபாகரன்..! இதைத் தவிர தமிழ்நாட்டு தமிழர்களின் அவலநிலை குறித்து இவர் வாய் ஒரு வார்த்தை கூட உதிர்ப்பதில்லை.

இன்று இவர் பேசும் பிரிவினைவாதமெல்லாம், இவரை விட இளைஞர்களை அதிகம் கவர்ந்து வைத்திருந்த அண்ணா ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே மேடைக்கு மேடை பேசி சலித்ததுதான்.

இவராவது ஈழத்தை மையப்படுத்தி பேசுகிறார். ஆனால் அண்ணா தமிழ்நாட்டை மையப்படுத்தி ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று பிரச்சாரம் செய்தார். 60-களில் அப்படி நடத்தப்பட்ட ஒரு திராவிட நாடு விடுதலை விழா மாநாட்டிற்கு 3 லட்சம் பேர் திரண்டார்கள். இதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் பல இளைஞர்கள் கைதானார்கள். பலர் தீக்குளித்தனர். பின்னர் நடந்த தேர்தலில் அண்ணா எம்.பியாகி நாடாளு மன்றத்தில் தான் ஆற்றிய முதல் உரையிலேயே திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தார்.

எல்லாம் இளைஞர்களை கவர்ந்து ஓட்டு பெறுவதற்காக. அந்த நோக்கம் வெற்றி பெற்றதும் அந்த கோரிக்கையையே பின்னாட்களில் கைவிட்டு, கோஷத்தையும் ‘மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி’ என்று மாற்றிப் போட்டார்.

பிறகு 70-களில் தனித் தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி கம்யூனிச ஆயுதப் போராட்டங்கள் ’தமிழ்நாடு விடுதலைப் படை’ என்னும் பெயரில் நடந்தன. (பெண்ணாடம் கலியபெருமாள் என்பவர் அப்போது இதில் இளைஞர்களிடையே பிரபலம்). அதுவும் பெரிய அளவில் இளைஞர்களை ஈர்க்கவில்லை. காரணம் இங்கே தனித் தமிழ்நாட்டிற்கான வாழ்வியல் காரணங்கள் இல்லை.

இந்த துரு பிடித்து உளுத்து போன பழையை தோல்வியடைந்த கோஷத்தைத்தான் சீமான் தற்போது ஈழத்துக்காக தூசி தட்டி கையில் எடுத்திருக்கிறார். ஈழப் பிரச்னையில் தமிழ் மக்களிடம் எப்போதும் அனுதாபம் உண்டு. அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவும் உண்டு. முடிந்த உதவியும் செய்ய எல்லோரும் தயார்தான். ஆனால் அதற்காக தங்கள் அடிப்படை பிரச்னைகளான குடிநீர் தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம், மின்வெட்டு, இத்யாதி இத்யாதிகளையெல்லாம் பின் தள்ளி விட்டு, ஈழத்திற்காக களமாட முன்வருவார்கள் என்பது வெறும் கற்பனையே. அப்படி நம்ப சொல்வது சீமானின் ஏமாற்று வேலை.

சீமான் இளைஞர்களின் உணர்ச்சியை தூண்டி விட்டு போகாத ஊருக்கு வழி தேடுகிறார். அல்லது வழி தேடும் பாவனையில் ஆதாயம் அடைய பார்க்கிறார். ’உறவுகளே’ ‘ரத்தங்களே’ ‘ ஒரு தாய் வயிற்று பிள்ளைகளே’ என்னும் வார்த்தை ஜாலம் இருக்கும் அளவிற்கு இவரிடம் விஷயம் இல்லை. தலைமைக்கான பண்புநலன்கள் இல்லை.

ஜெயராம் மன்னிப்பு கேட்ட பிறகும் அவர் வீட்டை அடித்து நொறுக்கியது இவருடைய இயக்கம். ஆனால் கடைசி வரை அதை கண்டிக்காமல், குறைந்த பட்சம் ஒப்புக்கொள்ளக் கூட செய்யாமல் தாங்கள் இல்லை என்று மறுத்தே வந்தார். இதுதான் சீமானின் அண்மைகால நேர்மை மற்றும் இளைஞர்களை வழி நடத்தும் பாதை.

ஈழம் வேறு. தமிழ்நாடு வேறு. மொழியால் மட்டுமே தமிழன் ஒற்றுமையா இருந்து விடுவான் என்றால், அந்த காலத்தில் தமிழ் மன்னர்களாகிய சேரன், சோழன், பாண்டியனெல்லாம் ஒருவருக்கு ஒருவர் ஜென்ம விரோதிகளாக தங்களுக்குள் அடித்துக் கொண்டது ஏன்?

மொழியில் ஒற்றுமை என்பது இரு சமுதாயத்தினரிடையே சில இணக்கங்களை ஏற்படுத்தும் என்பது உண்மையானாலும், வாழ்வியல் பிரச்னைகள் என்று வரும்போது, அப்போது பிரச்னைதான் முன் நிற்குமே தவிர, மொழி அல்ல.

‘ஏற்கெனவே அவங்க ஊருக்கும் நம்ம ஊருக்கும் வாய்க்கா சண்டை இருக்கு’ என்னும் வசனங்களெல்லாம் உரைப்பது என்ன? பக்கத்து ஊர் குடிநீருக்காக ஆயிரம் அல்லல்கள் பட்டாலும், நம்ம ஆள் தானே; நம்ம தமிழன் தானே என்று எவனும் மதகை சுலபத்தில் திறந்து விட்டு விடுவது இல்லை. அதனால் இரு ஊர்களுக்கிடையே வெட்டு குத்து, பகை என்பதெல்லாம் இங்கே சகஜம் தான். சின்ன ஊருக்கு சின்ன சின்ன காரணங்கள். பெரிய நிலபரப்புக்கு பெரிய காரணம் உண்டாகும்.

மொழியை வைத்து மட்டும் ஒற்றுமை என்றால் இன்று தெலுங்கர்கள் ‘தனித் தெலுங்கானா’ கேட்டு மாநில நிர்வாகத்தையே ஸ்தம்பிக்கச் செய்ய வேண்டிய அவசியமே இல்லையே!

அதனால் சீமான் முன்வைக்கும் தமிழர்கள் ஒன்று பட்டால், தனித் தமிழ்நாடு பிறந்தால், தமிழன் வாழ்வே சுபிட்சம் ஆகும் என்பது அர்த்தமற்ற வாதம். இவரை அப்படியே அலேக்காக தூக்கிக் கொண்டு போய் பாக்ஜலசந்திக்கு அந்தப் பக்கம் கடாசி விட்டு வந்து விடுவதுதான் தமிழ்நாட்டின் பொது அமைதிக்கும் இளைஞர்களின் எதிர்காலத்திற்கும் நல்லது.

*

சீமானைப்பற்றி ஏற்கெனவே விரிவாக இரு மடல்கள் எழுதியிருக்கிறேன். இன்றும் எழுத காரணம் சிலரைப்பற்றி நாம் தெளிவான தீர்மானங்களுடன் இருப்பது நல்லது. காரணம் அவர்களின் பேச்சு திறமை வசீகரமானது. அதில் மயங்கி வீணில் ரத்தத்தை கொதிக்க விட்டு குழம்பி விடக்கூடாது என்பதற்காகத்தான். இதைப்பற்றி மேலும் விரிவான விவாதத்திற்கும் நான் தயாராக இருக்கிறேன்.

*

”நாம் தமிழர்” என்னும் பெயருக்கு உரியவர் தினத்தந்தியின் நிறுவனர் ஆதித்தனார் தான். இப்பெயரில் அவர்தான் முதலில் கட்சி நடத்தி வந்தார்.

0 comments:

Post a Comment