பிளடி இண்டியன்ஸ்

Posted: Thursday, April 1, 2010 | Posted by no-nononsense | Labels:
“சார்.. ப்ளீஸ் என்ன ஸ்டேட்டஸ்னு மட்டும் சொன்னா போரும். நேக்கு மெட்ராஸ் யாரும் இல்ல சார்”

“ஏன் எங்களை தொந்தரவு பண்றீங்க. உங்க ஆபீஸை கேட்டுக்க வேண்டியதுதானே. உங்கள மாதிரி இங்க எத்தன அப்ளிகேஷன் தெரியுமா”

“சார் அப்படி சொல்லக் கூடாது. ஆபீஸ்ல கேட்டா உங்க ஆபீஸதான் காண்டக்ட் பண்ண சொல்றா. PRO நம்பர்க்கு போன் பண்ணா சரியா ரெஸ்பான்ஸ் இல்ல. அதான்..”

“இப்ப என்னதான் உங்களுக்கு வேணும்”

”சார்.. அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் சொன்னா போரும். இங்கே நாமக்கல்ல இருந்துகிட்டு யாரை காண்டக்ட் பண்றதுன்னு தெரியல. நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்”

“நீங்க நம்பர் மட்டும் சொல்லுங்கோ”

“199524/45”

சொன்ன அடுத்த கணமே..

“ரெண்டு செக் ரைஸ் ஆகியிருக்கு. நோட் பண்ணிக்கோங்க... இன்னும் பத்து நாள்ல செக் உங்க பேங்கல இருக்கும்”

- மேற்கண்ட உரையாடல் என் நண்பருக்கும் சென்னையிலுள்ள EPF (Provident Fund) அதிகாரி ஒருவருக்கும் நடந்தது. நண்பர் கெஞ்சியதும் பேசியதும் எனக்காக.

இதற்கு முன் நான் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து சென்ற ஜுனுடன் வெளியே வந்தேன். அதிலிருந்து மூன்று மாதங்கள் கழித்து PF-க்காக விண்ணப்பித்தேன். அதுதான் விதிமுறை. 90 நாட்கள் கழித்துதான் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணபித்த நாள் முதலாய் அலுவலகம் வந்ததும் தினமும் முதல் வேலை அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் பார்ப்பதுதான். அதற்கென ’கடனே’ என்று ஒரு இணையதளம் இயங்குகிறது. ஒரு மாதம் கழித்து அதில் ஸ்டேட்டஸ் அப்டேட் ஆகியது - விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று.

நிராகரிக்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதம் கடந்தும் எனக்கோ என் பழைய அலுவகத்திற்கோ அது வந்து சேரவில்லை. ஒருவழியாக அது வந்து சேர்ந்ததும் பிழைதிருத்தி அனுப்பி விட்டு சென்ற நவம்பர் முதல் இப்போது வரை தினமும் ஸ்டேட்டஸ் பார்த்துக் கொண்டிருந்தால், அது தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதையே சொல்லிக்கொண்டிருந்தது. E-governance என்பதெல்லாம் சும்மா பெயரளவில்தான்.

நான்கு மாதங்களாக அடிக்கடி சென்னை PF ஆபீஸுக்கு போன் செய்வதும், அது ஒன்று எடுக்கப்படாமலோ அல்லது தட்டிக்கழிக்கும் பதிலை பெறுவதுமாகவோ கழிந்து விட்டது. திருத்தியனுப்பிய விண்ணப்பம் கையில் கிடைத்ததா என்றுகூட சொல்ல அங்கே ஆளில்லை. அதிலும் ஒருமுறை போனை எடுத்த ஒரு பிரகஸ்பதி,”உங்க PF நம்பருக்கும் உங்க பேருக்கும் சம்மந்தமில்லையே. வேற பேரில்ல வருது’ என்று வயிற்றில் புளியை கரைத்துவிட்டு போனை வைத்து விட்டது.

இந்நிலையில்தான் என் நண்பர் ஒருவர் உதவிக்கு வந்தார். என்னோடு பணிபுரிந்து என்னுடனே ராஜினாமாவும் செய்த அவர் அப்படி இப்படி என்று ஆள் பிடித்து அவரின் பணத்தை வாங்கி விட்டார். எனக்கும் எங்கேயோ விசாரித்து மேலே உரையாடலில் கண்ட அதிகாரியின் போன் நம்பர் வாங்கித் தந்தார். அந்த நம்பருக்கு போன் செய்தால், ஒருமுறையும் ‘ம்’ என்று கூட கேட்டதில்லை. ஆரம்பிக்கும்போதே கட் செய்யப்படும்.

மீண்டும் நண்பரே களம் இறங்கினார். ”நீ பேசுவதுபோல ஃபார்மலா எல்லாம் பேசினா வேலைக்காகாது. ஆளுக்கு தகுந்த மாதிரி பேசணும். நானே பேசுறேன்” என்று அவர் பாஷை கலந்து அவர் பேசியதுதான் மேலே உள்ளது.

”நம்பர் சொல்லுங்கோ’ என்று கேட்டு நம்பர் சொன்ன மறுகணமே, ஆம், மறுகணமே கணினியைத் தட்டி ஸ்டேட்டஸ் சொல்லி விட்டார் அந்த அதிகாரி.

ஆச்சரியமாக இருந்தது.

”இதற்குத்தானய்யா இத்தனை தடவையும் நான் உமக்கு போன் செய்தேன்” என்று ஆத்திரமும் வந்தது. சாமானியர்களின் ஆத்திரம் சல்லிகாசுக்கும் பிரயோசனமில்லாதது என்பதால், ஏதோ இப்பவாச்சும் தெரிந்ததே என்று கொஞ்சம் பெரிய மூச்சாக விட்டுக்கொண்டேன்.

நமக்கு உதவ நண்பர் இருந்தார். அவர் இல்லையென்றாலும் தடாலடியாக ஏதாவது செய்ய தைரியம் இருக்கிறது. அப்படியில்லாத அப்பாவிகளின் நிலையைப் பற்றித்தான் எனக்கு கவலை. நமக்கு பாத்தியப்பட்ட பணத்தை பெறவே நாய் படாத பாடு படவேண்டியுள்ளது.

ஏன் அரசு வழிமுறைகள் இவ்வளவு கடினமாக உள்ளன?

ஏன் அரசு ஊழியர்கள் இப்படி இருக்கிறார்கள்?

ஏன் அவர்கள் நம் கவலையை, அவசரத்தை, அவசியத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டேன் என்கிறார்கள்?

இதெல்லாம் என்று மாறும்?

பிளடி இண்டியன் சிஸ்டம்ஸ்!

-என்று மனம் கொந்தளித்தாலும், புத்திக்கு உறைக்கிறது ‘இதெல்லாம் என்றும் மாறாது’ என்று.

ஏன்?

பிகாஸ் வி ஆர் பிளடி இண்டியன்ஸ்!

0 comments:

Post a Comment