தமிழ் தேசியம் - சில கருத்துக்கள்

Posted: Friday, April 2, 2010 | Posted by no-nononsense | Labels:
தமிழ் தேசியத்தை ஆதரித்த நண்பனின் கருத்துக்கு பதிலாக:

தமிழ் தேசியம் என்பது ஒரு கானல் நீர்; மாயை; அக்கரை பச்சை. இப்போது இருக்கும் unity in diversity -க்கும் அதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கப் போவதில்லை.

ஒரு பேச்சுக்கு தமிழ்நாடு என்று ஒரு தனிநாடு உதயமாகிறது என்றே வைத்துக் கொள்வோம். அப்போது மட்டும் பிராந்திய பேதம் இருக்காது என்று உன்னால் உறுதியாகச் சொல்லமுடியுமா?

இப்போது வட இந்தியா, தென்னிந்தியா என்று பேதம் இருந்தால், அப்போது வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என்று இருக்கும். சென்னையும் அதை சுற்றியுள்ள இடங்களும் தான் வளர்ச்சியடைகின்றன. தென் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது என்று ஒரு கோஷ்டி கிளம்பும். ஏற்கெனவே அப்படி ஒரு குரல் ராமதாஸ் போன்றவர்களால் எழுப்பப்பட்டு வருகிறது. அதையும் பிரிப்போமேயானால், இன்னும் கொங்கு தேசம், நாஞ்சில் நாடு என்று தனித்தனியாக பிராந்திய புறக்கணிப்பு கோஷம் எழும்பும். குறிப்பிட்ட ஜாதி அதிகம் இருக்கும் இடங்கள் மட்டுமே அதிக திட்டங்களைப் பெறுகின்றன; எங்கள் ஜாதி மக்கள் அதிகம் வசிக்கும் இடங்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுகின்றன என்று இன்னும் ஒரு ஜாதி அரசியல் பிராந்திய போர்வை போர்த்திக்கொண்டு போராட்டம் நடத்தும்.

பேதம் பெரும்பாலும் சுயநலத்திலிருந்துதான் பிறக்கிறது. சுயநலம் என்பது மொழியையோ இனத்தையோ பொறுத்தது அல்ல. மனித மனத்தை பொறுத்தது.

அதனால், இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரிய வேண்டும்; ஏனென்றால் நாமெல்லாம் தமிழர்கள்; இந்தியர்கள் இல்லை, என்பதெல்லாம் சும்மா உணர்ச்சிவய கோஷமாக வேண்டுமானால் பயன்படலாம். நடைமுறைக்கு ஒத்துவராது.

இந்தியாவில் நாம் இப்போது இருப்பது போலவே ஒற்றுமையாக இணைந்திருப்பதன் நன்மைகளை அவசியத்தை இங்கே ஏற்கெனவே வேறோர் இழையில் நான் எழுதியிருக்கிறேன். அதை மறுத்து பேசும் கருத்துக்கள் வந்தால் இன்னும் விரிவாக இதன்மீது விவாதிப்போம்.

0 comments:

Post a Comment