சிவசங்கரியின் “புதிய கோணங்கள்” நூலை முன்வைத்து

Posted: Tuesday, April 6, 2010 | Posted by no-nononsense | Labels:

Sivasankari

சிலர் சில விஷயங்களுக்காக பொதுவில் பிரபலமாக இருப்பார்கள். அவர்களின் மற்றொரு முகம் பெரும்பாலும் அறியப்படுவதில்லை. எழுத்தாளர் கல்கியின் சரித்திர நாவல்கள் பிரபலமடைந்த அளவிற்கு அவருடைய கட்டுரைகள் பிரபலமில்லை. ஆனால் அவைதான் என்னைப் பொருத்தவரை அதிக சுவாரஸ்யமானவை. குறிப்பாக அவருடைய “மூன்று மாத கடுங்காவல்” மற்றும் “ஏட்டிக்கு போட்டி” ஆகிய இரண்டும் அளிக்கும் எழுத்து விருந்துக்கு இணையான ஒரு சுவையை இன்று வரை நான் கடக்கவில்லை.

அதேபோல்தான் எழுத்தாளர் சிவசங்கரியின் பயணக் கட்டுரைகள். புரிந்துகொள்ள மிக எளிமையான நடையில், செல்லும் இடங்களைப் பற்றிய பொதுவான தகவல்களுடன் மாறுபட்ட நுணுக்கமான பல குறிப்புகளையும் பதிவு செய்தவண்ணம் இருப்பார். ஆனால் அவர் கதைகள் பிரபலமான அளவிற்கு இவருடைய பயண எழுத்து படிக்கப்படவில்லை. இப்படி வெட்டவெளிதனில் கொட்டிக் கிடக்கும் எழுத்துக்கள் எண்ணிலடங்கா.

அண்மையில் அவருடைய “புதிய கோணங்கள்’ என்னும் கட்டுரை தொகுப்பிலிருந்து நேபாள பயண அனுபவங்கள் படிக்க கிடைத்தன. வழக்கம் போலவே விறுவிறுப்பான நடையில் சிறப்பான காட்சிப் படுத்தல்கள் நிறைந்த எழுத்துக்கள். ஆனால் இங்கே நான் எழுத முனையும் விஷயம் அது அல்ல. அதே கட்டுரை தொகுப்பில் எம்.டி.வாசுதேவன் நாயரின் (கேரளத்தின் முக்கியமான எழுத்தாளர்) நேர்காணல் ஒன்றும் வெளியாகியிருந்தது. அதன் கருபொருள்தான் என்னை ஈர்க்கிறது.


அதாவது எம்.டி.வி “இரண்டாம் மூழா” என்னும் நூலை எழுதியிருந்தார். இரண்டாம் மூழா என்றால் ”இரண்டாவது ஸ்தானம்” (Second in line) என்று பொருள். மகாபாரதம், பாண்டவர்களில் இரண்டாவது மகனாகிய பீமனுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை என்பதுதான் அப்புத்தகத்தின் வழியாக அவர் வைக்கும் குற்றச்சாட்டு.

அவர்களின் உரையாடலின் சாராம்சம்:

மகாபாரத போரின் வெற்றிக்கு ஆரம்பத்திலிருந்து முக்கிய பங்காற்றிய பீமனுக்கு, அவனுக்குரிய தர்மருக்கு அடுத்த இரண்டாவது ஸ்தானமும் மரியாதையும் அளிக்கப்படவில்லை. மாறாக அந்த இடத்தையும் முக்கியத்துவத்தையும் பீமனின் தம்பி அர்ஜூனனுக்கே மகாபாரதம் அளிக்கிறது.

போரில் அர்ஜூனனின் மகன் அபிமன்யூ இறக்கிறான். பாண்டவர்கள் பரிதவித்து போகிறார்கள். ஆனால் போரில் பல வீர தீரங்கள் புரிந்த பீமனின் மகன் கடோத்கஜன் இறக்கும்போது “ஏன் அழுகிறீர்கள், ஒரு ராட்சஸன் இறந்தது சந்தோஷமான விஷயம் தானே’ என்கிறான் கண்ணன்.

கதையின் இறுதியில் எல்லோரும் மகாநிர்வாணத்தை, அதாவது மோட்சத்தை நோக்கிச் செல்லும்போது, பீமன் மட்டும் “எனக்கு ராட்சஸி (இடும்பி) ஒருத்தியும், பகைவன் (அஸ்வத்தாமா) ஒருவனும் காத்திருக்கிறார்கள் என்று மோட்சத்தை மறுத்து விடுவதாக வருகிறது. இது பீமனுக்கு செய்யப்பட்ட அநியாயமாக கருதுகிறார் ஆசிரியர்.

மகாபாரதத்தின் எத்தனையோ சம்பவங்களில் எல்லோரும் அறிந்த ஒரு சம்பவம்: வஸ்திராபகரணம். அதாவது திரௌபதிக்கு கண்ணன் சேலை அளித்து மானம் காத்த அந்த சம்பவம். மகாபாரதத்தின் ஆதிப் பிரதிகள் எவற்றிலும் அப்படி ஒரு சம்பவம் இடம்பெறவே இல்லை; அது ஒரு இடைசெருகல் என்கிறார் எம்.டி.வி. அதற்கு ஆதாரமாக குறிப்பிடத்தக்க சில வெளியீடுகளை காட்டுகிறார். கதையின் அந்த இடத்தில் அவள் மாதவிலக்காகவும், ஒற்றை சேலை அணிந்தபடியும் மட்டுமே இருந்திருக்கிறாள்.

ஆதிநாட்களில் மகாபாரதத்திற்கு ’ஜெயா’ என்று பெயர். மகாபாரதத்தின் மூல நூலில் இருந்தவை இருபதிலிருந்து நாற்பதினாயிரம் ஸ்லோகங்கள் மட்டுமே. பிறகு ஏற்பட்ட இடைசெருகல்கள் காரணமாக அது லட்சத்து இருபதினாயிரம் ஸ்லோகமாக ஆகிவிட்டது.

உண்மையில் வியாசர் என்றால் எடிட்டர் என்றுதான் அர்த்தம். அதன்படி பல நூறு ஆண்டுகளாக பல நூறு எடிட்டர்கள் திறமை காட்டிய தொகுப்பே மகாபாரதம்.

இவற்றையெல்லாம் ஏழு வருடங்களாக ஆராய்ச்சி செய்து அறிந்துகொண்டதாக எம்.டி.வி உரையாடலின் போது குறிப்பிடுகிறார்.

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களாகிய ராமாயணமும் மகாபாரதமும் திறமையாக புனையப்பட்ட புதினங்களே என்னும் நாள்பட்ட விமர்சனத்தை எம்.டி.வி என்னும் மாபெரும் எழுத்தாளரின், இந்த ஆராய்ச்சி குறிப்புகள் உறுதி செய்வதாக அமைந்துள்ளன.

ஆனால் எவ்வளவுதான் தர்க்க ரீதியாக நிரூபணம் செய்தாலும் மாறுபாடான கருத்துக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் இந்தியாவைப் பொருத்தவரை கிடையாது. அதனால்தான் இன்றும் - பாபர் மசூதி பிரச்சினைக்கும், ராமர் பால விவகாரத்திற்கும் மக்கள் தங்கள் ஜீவாதார பிரச்னைகளை விட அதிக முக்கியத்துவம் தருபவர்களாக இருந்துவருகின்றனர்.

*

இதேபோல வால்மீகி ராமாயணத்திலிருந்து கம்பராமாயணம் எப்படியெல்லாம் வேறுபடுகிறது என்பதையும் எழுத உத்தேசம். குறிப்புகள் எடுத்து வைத்து பல காலமாக கிடப்பில் கிடக்கின்றன.

0 comments:

Post a Comment