சகோதர யுத்தம்

Posted: Wednesday, October 27, 2010 | Posted by no-nononsense | Labels:
நெடுமாறன்: ஈழத்தில் போராளிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்தியஅரசின் 'ரா' உளவுத் துறைதான் அதற்குக் காரணம். 'டெலோ' இயக்கத்துக்கு ஏராளமான ஆயுதங்களைக் கொடுத்து, புலிகளுடன் மோதும்படி தூண்டிவிட்டது 'ரா'. அதன்படி, அவர்கள் ஆங்காங்கே விடுதலைப் புலிகளை சுட்டார்கள். சிலரைப் பிடித்துக்கொண்டு போனார்கள். அப்போது விடுதலைப் புலிகளின் சார்பில் இது குறித்து 'டெலோ' தலைவர் சிறீசபாரத்தினத்துடன் பேச்சு நடத்த கேப்டன் லிங்கம் அனுப்பிவைக்கப்பட்டார். அந்த லிங்கத்தின் இரு கண்களையும் தோண்டி எடுத்து, அவரைக் கொடூரமாகக் கொலை செய்தார் சிறீசபாரத்தினம். இதற்கு பதிலடியாகத்தான் புலிகளின் தாக்குதல் நடந்தது.

நெடுமாறனின் இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. ஈழத்தின் ஆரம்ப கால அரசியலில் RAW-ன் பங்கு பெருமளவு இருந்ததாக கூறப்படுகிறது. 

அதை விடவும் புலிகளின் எதேச்சதிகார மனோபாவம்தான் மற்ற சக போராட்ட குழுக்களை அழித்தது என்பதும் உண்மைதான். குறிப்பாக TELO தலைவர் சிறீசபாரத்தினத்தை புலிகள் கொன்றதற்கு சகோதர யுத்தம்தான் காரணம். அதைப்பற்றி ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ புத்தகத்தில் சி.புஸ்பராஜா (EPRLF) விரிவாக எழுதியுள்ளார். 

புலிகளுக்கு பயந்து புகையிலை தோட்டத்தில் ஒளிந்து கொண்டிருந்த சிறீசபாரத்தினத்தை புலிகள் சூழ்ந்து கொண்டனர். அப்போது தான் புலி தலைமையுடன் பேச விரும்புவதாகவும் தன்னை கொல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டிருக்கிறார். ஆனால் புலிகள் கொஞ்சமும் இரக்கம் காட்டிக் கொள்ளவில்லை. கிட்டுவின் கையில் இருந்த ஏ.கே.47 துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டுகள் சிறீயின் உடம்பில் 20 இடங்களில் துளைத்தெடுத்தன. தமிழீழ போருக்கு தன்னை ஒப்புக் கொடுத்த வீரனின் உயிர் எதிரியால் போகவில்லை. இன்னொரு சக போராட்டக்காரனாலேயே போனது வருத்தத்துக்குரிய விஷயம்.

ஏன் சிறீ அவ்வளவு முக்கியத்துவம் கொண்டவராக கருதப்படுகிறார்?

பிரபாகரனுக்கு அடுத்து மக்களின் ஆதரவை பெற்று இரண்டாம் நிலையில் இருந்தவர்கள் சிறீயும்(TELO) பத்மநாபாவும்(EPRLF). அவர்களில் சிறீ, ஒரு நெடிய போராட்ட வரலாற்றை தன் பின்னால் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சீறீ படுகொலையை புரிந்துகொள்ள ஒரு எளிமையான உதாரணமாக ஸ்டாலினை அழகிரி போட்டுத்தள்ளிவிட்டால் என்ன மாதிரி ஒரு அதிர்ச்சி அலை எழும்புமோ, அப்படித்தான் அப்போதும் நிகழ்ந்தது. 

பின்னாட்களில் பத்மநாபாவும் புலிகளால் சென்னையில் கொல்லப்பட்டு விட்டார். 

புலிகளின் சகோதர யுத்தம் பற்றி நிறைய எழுதலாம். ஆனால் முடிவாக அவர்கள் அதில் அடைந்த பலன் பூஜ்ஜியம் என்பதை நெஞ்சில் நிறுத்தி பார்க்கும்போது, எதையும் பேசவோ எழுதவோ தோன்றுவதில்லை.

* * *

சிறீயை லிங்கம் சந்திக்கச் சென்றது தொடர்பான தொடர்பான ஈழவேந்தனின் விரிவான கட்டுரை ஒன்றை நாம்தமிழர் இணையதளத்தில் படித்திருக்கிறேன். தேடினால் கிடைக்கக் கூடும்.

0 comments:

Post a Comment