இக்கரைக்கு அக்கரை பச்சை

Posted: Monday, October 25, 2010 | Posted by no-nononsense | Labels:


வாரமலர், குடும்பமலர், வாரக்கதிர் போன்றவற்றில் சினிமா செய்திகளுக்கு பிறகு நான் விரும்பிப் படிப்பது திண்ணை போன்ற தொடர்களைத்தான். நாம் பல நூல்களை தேடிப் படித்து அறிந்துகொள்ளக்கூடிய விஷயங்களையெல்லாம் பல வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

இந்த வாரம் வாரக்கதிரில் இடம்பெற்றுள்ள கண்ணதாசனின் கீழ்காணும் பாடல் வரிகள் என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்தன.

“இக்கரைக்கு அக்கரை பச்சை
அக்கரைக்கு இக்கரை பச்சை

கடல் மீது விழுந்தவர்கள் நீந்துங்கள்
கனி மீது விழுந்தவர்கள் உண்ணுங்கள்
வழிச்சாலை கண்டவர்கள் செல்லுங்கள்
போகவழி தவறியவர்கள் நில்லுங்கள்”

Take life as it comes - என்னும் ஆங்கிலப் பழமொழியை நினைவுபடுத்திக் கொண்டால் மேலுள்ள வரிகளில் வழியும் தத்துவம் எளிதில் புரியும்.

இதே கருத்தை ‘யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே’ என்று வேறு வரிகளிலும் சொல்லக்கூடிய கவிஞரே, ‘வாழ நினைத்தால் வாழலாம்’ என்றும் ஆறுதல் சொல்வார். எல்லாம் கதைகளின் அந்தந்தச் சூழ்நிலைகள் வேண்டிக்கொண்ட வரிகள். கால தேச வர்த்தமானங்களைக் கடந்து அவை எல்லா காலங்களுக்கும் எல்லோருக்குமான வார்த்தைகளாக அமரத்துவம் பெற்றிருப்பதுதான் ஒரு கவியரசனின் சிறப்பு.

கண்ணதாசனின் பெருமையைச் சொல்வது கடல் நீரை கையால் மொண்டு அளப்பதற்கு ஒப்பு. மனம் கனமாக உணரும் வேளைகளில் எல்லாம் நான் அடைக்கலமாகும் ஓரிடம் அவனிடம்.

0 comments:

Post a Comment