திரைக்கதையின் துணிபு, இது நம்ம ஆளு!

Posted: Friday, October 22, 2010 | Posted by no-nononsense | Labels:



‘அம்மாடி இதுதான் காதலா
அட ராமா இது என்ன வேதமோ’ 

பேருந்தில் கேட்டதிலிருந்து இப்பாடல் வாயில் ஒட்டிக் கொண்டு விட்டது. கேட்டதிலிருந்து என்பதை விட பார்த்ததிலிருந்து என்றுச் சொல்லவேண்டும். வழக்கமான பாடாவதி படங்களுக்கு பதிலாக இன்று ‘இது நம்ம ஆளு’ ஓடிக் கொண்டிருந்தது. கண்கள் நிலைகுத்த ரசித்து பார்த்தபடி பயணித்து வந்தேன்.

தமிழின் சிறந்த படங்கள் என்று ஆளுக்கொரு பட்டியல் வைத்திருப்பார்கள். ஆனால் இது நம்ம ஆளு யாருடைய பட்டியலிலும் இருக்காது. உண்மையில் இந்தப் படம் தமிழில் வந்த ஆக்கங்களில் மிக முக்கியமானவைகளில் ஒன்று. இப்படி ஒரு சிக்கலான சப்ஜெக்டை எடுத்துக்கொண்டு ஒரு படம் பண்ணவே பெரிய தைரியம் வேண்டும்.

என்ன சிக்கல்?

ஒரு ஆச்சார திலகமான பிராமண குடும்பத்துப் பெண்ணை தாழ்த்தப்பட்ட இளைஞன் ஒருவன் மணம் புரிந்து, அதன் தொடர்விளைவான நிகழ்ச்சிகளிலின் வாயிலாக வர்ணாசிரம பேதங்களை அக்குடும்பத்தாரின் மனதிலிருந்து விலக்குகிறான். 

நாலு வரியில் எழுதமுடிகிற இதன் கதைச் சுருக்கத்தை சுவாரசியம் குறையாமல் இரண்டரை மணி நேரத்திற்கு சினிமாவா எடுப்பது அவ்வளவு சுலபமா என்ன? அதுவும் கலைப்படமாக இல்லாமல் மாஸ் ஆடியன்ஸை சென்றடையும் ஒரு கமர்சியல் படமாக! பாக்கியராஜின் திரைக்கதை திறமை ஏன் மெச்சப்படுகிறது என்பதற்கான ஆய்வை இந்த ஒரு படத்தின் சம்பவக்கோர்வைகளை பரிசீலிப்பதன் மூலமாக மட்டுமே எட்டிவிட முடியும். 

இப்படத்தை தூக்கி நிறுத்துவது பொருத்தமான பாத்திரத் தேர்வு. ஆச்சார பிராமணன் வேடத்திற்கு சோமையாஜூலுவின் தேஜஸ் போல வேறு யாருக்கும் அமையாது. போலவே நாயகியாக ஷோபனாவின் தேர்வு. அழகும் அறிவும் மிக்க பிராமண பெண்ணை அட்சர சுத்தமாக கண்முன் நிறுத்தியிருப்பார். மிகச் சிறந்த நடிப்பு படத்தில் இவருடையதே. இந்த மாதிரி முக்கிய பாத்திரங்கள் மட்டுமல்லாமல் படத்தில் லௌகீக பிராமண பாத்தித்தில் பாக்கியராஜின் ஆலோசகராக வரும் நபர் உள்பட அனைவரும் கச்சிதமான நடிப்பை வழங்கியிருப்பார்கள். 

இது நம்ம ஆளு படத்தை பாக்கியராஜ் இயக்கியிருந்தாலும் படத்தின் டைட்டிலில் பாலகுமாரன் இயக்கியதாகத்தான் பெயர் வரும். பிராமணீய தாத்பரியங்களை விமர்சிக்கும் ஒரு படத்தை பிராமணரல்லாத பாக்கியராஜ் இயக்குவதன் பின்னால் எழ சாத்தியமுள்ள சர்ச்சைகளை தவிர்க்கவே அந்த ஏற்பாடு. இருந்தும் படம் வெளியான சமயத்தில் கடுமையான எதிர்ப்பை சம்பாதித்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். மேல் விவரங்களை இதுவரை கடக்கவில்லை. 

இப்படத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம்: பாக்கியராஜின் இசை. சிறப்பான இசை என்றுச் சொல்லமுடியாது. ஆனால் அந்த படத்திற்கு என்ன தேவையோ அதை கொடுக்கமுடிந்ததே சாதனைதான். குறிப்பாக அதில் வரும் போட்டிப் பாடலில் அடிக்கப்பட்டிருக்கும் லூட்டியை வித்வத்துவ இசையமைப்பாளர் ஒருவரைக் கொண்டு போட்டிருக்க முடியுமா என்பது சந்தேகமே. லூட்டிக்கு மத்தியிலும் அதில் இழையும் வாணிஜெயராமின் குரல் தனித்து ரசிக்க வைப்பது. மற்ற எல்லா பாடல்களும்கூட ஓகே ரகம் தான். 

இப்படத்தின் இசையை பாக்கியராஜூக்காக போட்டுக் கொடுத்தவர் ‘சுந்தர காண்டம்’ படத்திற்கு இசையமைத்து காணாமல் போன தீபக் என்பார்கள். (அதில் வரும் பூங்குருவி பாடடி என் விருப்பப் பாடல்).

படத்தின் கிளைமாக்ஸில் சோமையாஜூலு தன்னை நெருப்பிலிட்டுக் கொள்ள முயலும்போது, அதைத் தடுத்து பாக்கியராஜ் பேசும் வசனங்களை கேட்பதற்குள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து விட்டது. 

வர்ண பேதங்களைப்பற்றிய அறிதலோ, அந்த பரப்பின் மீதான தனிப்பட்ட சிந்தனையோ கருத்துக்களோ இல்லாத முதிர்ச்சியற்ற இளமை பருவத்தில் தான் அதை கடைசியாக பார்த்தது. இன்றைக்கு மீண்டும் அதைப் பார்ப்பது வேறு மாதிரியான ஒரு புரிதலை தரும் என்று நம்புகிறேன். காரணம், சதுர்வேதி பிராமணரை சமரச சன்மார்க்கத்தை உணரச் செய்யும் வசனங்கள் காத்திரமாக இருக்கவேண்டிய அதேசமயம் அது சி சென்டர் ஆடியன்ஸுக்கும் புரிவதாக இருக்கவேண்டும். 

எவ்வளவு நுட்பமான வார்த்தைச் சிக்கல்! 

இதை எவற்றைகொண்டு நிரப்பி ஜெயித்தார்கள் என்பதை அருகிப் பார்த்து ரசிக்கும் ஒரு குறுகுறுப்பில் இருக்கிறேன். வீடு சென்றதும் யூடியூபில் தேடிப் பார்க்கவேண்டும். அலுவலகத்தில் வழியில்லை.

0 comments:

Post a Comment