யாகாவாராயினும் நாகாக்க

Posted: Wednesday, October 20, 2010 | Posted by no-nononsense | Labels:
நண்பர் பேச பேச எனக்குள் நரம்புகள் முறுக்கேறிக் கொண்டிருந்தன.

மானசீகமாக மனதிற்குள் எத்தனையோவாவது முறையாக அதே சபதத்தை மீண்டும் எடுத்துக் கொண்டிருந்தேன்.

இந்தமுறை கண்டிப்பாக ஜெயித்துக் காட்ட வேண்டும் என்று ஒரு வெறி மனதிற்குள் குடி கொண்டது.

அதே எண்ணத்துடன் தூங்கப் போனவன், அதிகாலை அலாரம் வைத்து எழுந்து விறுவிறுவென தகுந்த உடைகளை உடுத்திக் கொண்டு பள்ளி மைதானம் நோக்கி விரைந்தேன்.

மனதிற்குள் எப்போதோ படித்த உதயமூர்த்தி வந்து ‘தம்பி! உன்னால் முடியும் தம்பி!’ என்று உச்சஸ்தாயில் உரக்கச் சொல்லிக் கொண்டே இருந்தார்’. உந்துதல் கூடி நாடி கூடுதலாக துடிக்கத் தொடங்கியது.

ஒருவழியாக நெற்றி வியர்வை நிலத்தில் சொட்ட அங்கங்கே அல்லும் சில்லும் விட்டுப் போக வெற்றிகரமாக நடந்து முடித்து வீடு வந்தேன்.

உள்ளே நுழையும்போதே கமகம சாம்பார் மணம். இந்த அம்மாவின் கைப்பக்குவம் இப்போது பார்த்துதானா இவளுக்கு கைவர வேண்டும் என்று கருவிக் கொண்டே குளித்து வந்தேன்.

அதற்குள் சாப்பாட்டு மேசையில் நான்கு தோசைகள் நன்றாக எண்ணை ஊற்றி சுடப்பட்டு முறுவலாக காத்திருந்தன.

‘இதெல்லாம் இனி நான் சாப்பிடப் போறதில்லை. எண்ணை தடவாம ரெண்டே இட்லி போதும்’

‘க்ஹூம்.. சுட்டத என்னா பண்றதாம்..’ என்று மென்மையாக தொடங்கிய மண்டகப்படி உச்சிகால பூஜையை அடைவதற்குள் அத்தனை தோசையும் என் வாயினுள் அடைக்கலம் ஆகியிருந்தன.

ஆரம்பமே ஜெர்க் அடிக்குதே என்று நினைத்தபடி அலுவலகம் சென்றடைந்தவனை வரவேற்றன ஆம வடைகள்.

பஜ்ஜிக்கு அப்புறம் ஒரு வடையில் ஒரு அவுன்ஸ் அளவுக்கு எண்ணையை பிழிந்தெடுக்க முடிந்ததை இன்றே கண்டேன். ஏதோ இலாபம் என்று ஒரு ஏமாளி க்ளையண்ட் வாங்கி கொடுத்திருக்கிறார்.

‘ஏன் சார்.. வாங்கித்தர வேற எதுவும் கிடைக்கலையா’... மனதிற்குள்தான் கேட்டுக்கொள்ள முடிந்தது. படியளக்கும் உபதெய்வம் அல்லவா!

இரவு நரம்புகளை முறுக்கேற வைத்த நண்பரிடம் மனதிற்குள் மன்னாப்பு கேட்டுக்கொண்டு சாம்பிளுக்கு இரண்டை மட்டும் லபக்கினேன்.

‘என்னா சார் இப்படி பல்லுபடாம சாப்பிட்டுக்கிட்டு.. நீங்கதான் எதுவும் வாங்கி தரதில்ல, நாங்க வாங்கி தரதாச்சும் தாராளமா சாப்பிடுங்க’ என்றபடி முரட்டுத்தனமாக தட்டை என் பக்கம் தள்ளியவர் எதிரமர்ந்து கொண்டு,

‘அப்புறம் அந்த கோல் இண்டியா ஐபிஓ வருதில்லைங்களா..’ என்று ஆக்ஸாபிளேடை கழுத்தி வைக்கத் தொடங்கினார்.

வடைகளும் வழக்கமான பாடாவதி டீயும் உள்ளே சென்று வயிற்றின் அனைத்து டிரைனேஜ்களையும் அடைத்துக் கொண்டு விட்டதில் பசி என்பது ருசிக்கும் இல்லை. மணி 3.30 ஆனது.

இன்னொரு க்ளையண்ட் ஒருவருடன் தவிர்க்க முடியாமல் இரண்டு விதமான சொதியுடன் ஒரு குஸ்கா, ஐஸ்கிரீம் - பிஸினஸுக்காக கம்பெனி கொடுக்க என்று ஸ்வாகா ஆனது.

‘இத்தோடு எல்லாத்தையும் நிறுத்திக்குவோம்’ என்று மனதிற்குள் முந்தைய தின சபதங்களையும் மீண்டும் உதயமூர்த்தியையும் ஒலிக்க விட்டபடி வீடு வந்து சேர்ந்தவனை வருக வருகவென்றது மீன் மணம்!

நன்கு மொறுவலாக பொறிந்து வரக்கூடிய முரல் மீனை ஃப்ரை செய்து வைத்திருந்தார் சகதர்மினி :(

நான் விரும்பி வாடியபோதெல்லாம் என் வாயை கூடாமல் போன இந்த முரல், தேகம் கூடி ஆடி அடங்கி அகஸ்தமாக வீரம் வந்து வாயை கட்ட பார்க்கும் வேளையில் தேடி வந்து நாசியை தீண்டும் திமிரென்ன என்று வந்த கோபத்தில்......... அதை அப்படியே வாயில் போட்டு சாப்பிட்டு விட்டு மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு அமர்ந்து கொண்டேன்.

இல்லையென்றால் நேற்று ஆயிரம் அறிவுரை வழங்கிய அந்த அபூர்வ டயடீசியன் நண்பர் அழைத்து நான் இன்று என் சபதத்தை கட்டிக் காத்ததன் வீர பிரதாபங்களை ஆவலுடன் கேட்பார். நல்ல நண்பர் என்பதால் நாளை சமாளித்துக் கொள்ளலாம்.

ஆ! இதென்ன, குழந்தை கையில் காட்பரீஸுடன் திரிகிறாள்.

‘ஏ பாப்பா.. நேத்து நைட்டுதானே இதெல்லாம் சாப்பிடக் கூடாதுன்னு சொன்னேன். ஒண்ண சாப்பிடப்படாதுன்னா படாதுதான்.. you should stick to your words ma.. கொண்டா இப்படி’

லபக் !!!

0 comments:

Post a Comment