அதிநாயக ஜெயஹே -1

Posted: Wednesday, April 20, 2011 | Posted by no-nononsense | Labels:
இந்தியாவின் தேசிய கீதம் 'ஜன கன மன’ பாடல் பாரத தாயை போற்றி பாடப்பட்டதா, அல்லது ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வாழ்த்திப் பாடப்பட்டதா என்பது குறித்து ஒரு நீண்ட கால சர்ச்சை இருந்துவருகிறது. அதைப்பற்றி நண்பன் சதீஷ்கண்ணன் கேள்வி எழுப்பியிருந்தான்.

அதனை சரியாக அணுகிப் புரிந்து கொள்ள வேண்டுனாமால் அக்கால அரசியல் சூழல் பற்றியும், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் இந்திய வருகை பற்றியும், அவருக்கு நடந்த முடிசூட்டு விழா பற்றியும் கொஞ்சம் விரிவாக தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

சரித்திரத்தின் பக்கங்களில் பயணிப்பது சிலருக்கு கொட்டாவியை வரவழைக்கலாம். இருந்தாலும் முடிந்தவரை சுருக்கமாகவும் புரியும்படியும் சொல்ல முயற்சிக்கிறேன்.

முடிசூட்டல்கள்: டெல்லி தர்பார் I


1857-வரை இந்தியாவை ஆண்டது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி. 1857-ல் சிப்பாய் கலகம் இந்தியாவை உலுக்கியது. நாடெங்கும் கிளர்ச்சிகள் அமளி துமளிப் பட்டன. அதனை அடக்குவதற்கு கம்பெனியார் படாத பாடு பட்டனர்.

எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவுக்கு இனியும் இந்திய நிர்வாகத்தை கம்பெனியார் வசம் விட்டு வைப்பது சரியாகப் படவில்லை. 1857-ல் விக்டோரியா பிரகடனம் என்னும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனத்தை வெளியிட்டு இந்தியாவை நேரடியாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். கம்பெனி கலைக்கப்பட்டு, அதன் சொத்துகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன. அதுவரை ஒரு கார்ப்போரேட் கம்பெனியின் சொத்தாக மட்டும் இருந்துவந்த இந்திய துணைக் கண்டம், அது முதல் ’பிரிட்டிஷ் ராஜ்’ என்று அழைக்கப்பட்டு மகாராணியாரின் ஆளுகைக்கு வந்தது.

1876-ல் விக்டோரியா அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் சக்கரவர்த்தினியாக (Empress of india) முடிசூட்டப் பட்டார். அவருடைய விருதுகள் Queen of England, Scotland, Wales, and Northern Ireland and Dominions across the Seas and Empress of India’ என்று அழைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவருடைய முடிசூட்டு விழா இந்தியாவிலும் கொண்டாடப் பட்டது. 1877-ல் நடந்த அந்த விழா ‘டெல்லி தர்பார்’ என்று அழைக்கப்பட்டது. (தர்பார் என்றால் என்ன என்று பின்னர் விளக்கமாக எழுதுகிறேன்).

பெரிய படோபங்கள் இன்றி முக்கியமான மகாராஜாக்கள், நவாப்கள் மட்டும் கலந்து கொள்ள நடந்து முடிந்த அந்த விழா, மகாராணியாரின் முடிசூட்டலை அறிவிக்கும் ஒரு நிகழ்ச்சியாக மட்டும் நடந்து முடிந்தது.

முடிசூட்டல்கள்: டெல்லி தர்பார் II

1901-ல் விக்டோரியா இறந்துபட்டார். அவரைத் தொடர்ந்து அவர் மகன் ஏழாம் எட்வர்டு அரியணை ஏறினார். ‘மொட்டத்தலை ராசா’ என்று பட்டப் பெயர் கொண்டு அழைக்கப்பட்ட அவருக்கு ஆட்சிக்கு வரும் போதே 60 வயது ஆகியிருந்தது. சில ஆண்டுகள் மட்டும் ஆண்டுவிட்டு அவரும் இறந்துவிட்டார்.

அந்த ஏழாம் எட்வர்டுக்கும் ஒரு முடிசூட்டு விழா இரண்டாம் டெல்லி தர்பாராக 1903-ல் டெல்லியில் ஏற்பாடாகியது. அப்போது இந்தியாவில் வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபு அதற்காக ஒரு தடபுடல் ஏற்பாட்டை செய்திருந்தார். அதன்படி பேரரசர் ஏழாம் எட்வர்டு இந்தியா வந்து வரவேற்பு, விருந்து உபசரணைகளை ஏற்றுக்கொண்டு இந்தியாவின் பேரரசராக முடிசூட்டிக் கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சிக்கு வருவதாக வாக்களித்திருந்த மன்னர் கடைசி நேரத்தில் தன் தம்பியை மட்டும் அனுப்பி வைத்தார். அது பெரும் ஏமாற்றமாக இருந்தாலும் செய்த ஏற்பாடுகளில் குறைவின்றி ஒரு அசத்தலான தர்பாரை நடத்திக் காட்டினார், கர்சன் பிரபு. நாடே பிரமித்தது.

அதற்கு பிறகு ‘டெல்லி தர்பார்’ என்றால் ஒரு உயர்வான அடையாளமும், பெருமிதமும் உலக அளவிலான கவன ஈர்ப்பும் அந்த நிகழ்ச்சிக்கு உண்டாயிற்று.

-0-

டெல்லி தர்பார் என்றால் என்ன,
ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவும் 3-ம் டெல்லி தர்பாரும்,
தாகூர் எழுதிய ஜன கன மன பாடல்,
— அடுத்தப் பகுதியில்.

0 comments:

Post a Comment