Posted: Thursday, April 7, 2011 | Posted by no-nononsense | Labels:
இந்தத் தேர்தலை பொறுத்தவரை...



நம் நாட்டில் ஒரு கட்சிக்கு வாக்களித்து நம்மை ஐந்து ஆண்டுகள் ஆள அவர்களுக்கு வாய்ப்பளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினால் அவர்களுக்கு அந்த ஐந்தாவது ஆண்டுதான் நம்மைப் பற்றி ஒரு அக்கறையும், அச்சமும், பதற்றமும் வருகிறது. காரணம் மீண்டும் எதிர்கொள்ளவிருக்கும் தேர்தல். அதுதான் ஜனநாயகத்தின் அற்புதம்; அதன் கையிலுள்ள பெரும் ஆயுதம். அதை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா என்பதைப் பொறுத்துதான் நமது அடுத்த ஐந்து ஆண்டுகளின் தலைவிதி நிர்ணயமாகிறது. அதை கவனத்தில் கொண்டு நாம் நம் வாக்கை முடிவு செய்யவேண்டும்.

இந்தத் தேர்தலை பொறுத்தவரை இரண்டு தகுதியற்ற தலைவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் ஒரு கட்டாய சூழலில் — கூட்டணி, கூட்டணி அரசியல், கூட்டணி தர்மம், ஆணவம், அகங்காரம், பிரச்சார கோமாளிகளின் உளறல்கள், ஊழல், சந்தர்ப்பவாதம் — ஆகியவற்றையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளும் மனநிலை எனக்கு இல்லை. அதனால் இரு தரப்பையும் பற்றிய ஆழமான பரிசீலனை என்னிடம் கிடையாது. மேலோட்டமான சில கருத்துக்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்று காலை பூங்காவில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு நாற்சந்தியில் அமைந்திருக்கிறது என்பதால் அங்கே வழக்கம் போல பிரச்சார ஆட்டோ நின்று கொண்டிருந்தது. ஒரு பிரச்சாரகர் எதைப் பற்றிப் பேசினாலும், மீண்டும் மீண்டும் சேர்த்துக்கொண்ட ஒரு வாக்கியம் ‘மறந்தும் இருந்து விடாதீர்கள். இருந்தும் மறந்து விடாதீர்கள்..!’. கண்டிப்பாக ஓட்டுப் போடும் முன் மக்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டிய ஒரு வாக்கியம்தான் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

கடந்த கால ஆட்சியின் சரி-தவறுகளை மறந்து விடாமல் பரிசீலனைக்கு உட்படுத்திதான் ஓட்டளிக்க வேண்டுமே தவிர, கடைசி நேர தேர்தல் கூத்துகளில் கவனம் சிதறி ஆட்சியாளர்களின் பழைய நடவடிக்கைகளை மறந்து தவறான ஒரு முடிவை எடுத்துவிடக் கூடாது. ஆனால் கடைசி நேர அரசியல் ஸ்டண்ட்களை பொறுத்து ஓட்டளிப்பதுதான் பெரும்பாலும் டக்கிறது.

என்னைப் பொறுத்தவரை கருணாநிதியின் குடும்ப ஆதிக்கமும், ஊழலும், பல்மட்ட அராஜகமும், வாய்ஜால அரசியலும், திமுக மா.செ.க்களின் குறுநில மன்னர் மனோபாவமும் தற்காலிகமாவது முடிவுக்கு வர வேண்டும்.

சாகும்போதும் பதவியில் இருந்துகொண்டே சாகும் கௌரவம் கிடைக்கப்பெறும் அளவிற்கு கருணாநிதிக்கு எந்த தகுதியும் கிடையாது. அதனாலும் தனிப்பட்ட விருப்பமாக ஆட்சி முடிவுக்கு வர விரும்புகிறேன்.

ஈழத்தில் மக்கள் சாகும்போது இங்கே கருணாநிதி நடத்திய நாடகங்கள் ஒன்றா, இரண்டா? அமைச்சரவையில் பங்கு வாங்க பதறியடித்துக் கொண்டு டெல்லிக்கு ஓடத் தெரிகிறது. சீட் பகிர்வில் பிரச்னை என்றால் ஆட்சிக்கு ஆதரவையே வாபஸ் பண்ணத் தெரிகிறது. ஆனால் மக்கள் கொத்து கொத்தாக சாகும்போது நானென்ன செய்ய என்று அங்கலாய்க்க மட்டுமே தெரிந்தது. மக்களை முட்டாள்களாக நினைத்து ஆடிய அழுகுணி ஆட்டங்களுக்குத் தக்க பாடம் புகட்டப்பட வேண்டும்.

இருநாட்கள் முன்பு ஆட்சிக்கு வந்தால் மின்சார உற்பத்தி அதிகரிக்கப்படும் என்று ஒரு தேர்தல் வாக்குறுதியை படித்தேன். கருணாநிதி ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். மேலும், ‘தேவைக்கு அதிகப்படியாகவே மின்சாரம் வழங்கப்படும்’ என்று அதில் ஒரு முத்தாய்ப்பு வேறு. இதை எதிர்கட்சி சொல்லலாம். ஆட்சி அதிகாரத்தில் ஐந்து வருடங்கள் இருந்தவர்கள் சொல்லலாமா? இருந்தவரை மின்சார உற்பத்தியை அதிகரிக்க எடுத்த முயற்சிகள் என்ன? அப்போது முடியவில்லை என்றால் மீண்டும் வந்தால் மட்டும் எதன் அடிப்படையில் முடியும்? தமிழன் - எது சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும் ஏமாளி என்று நினைப்பு. இது ஒரு சின்ன உதாரணம் மட்டுமே.

போட்டத் திட்டங்களெல்லாம் கொள்ளையடிக்க. 2G வெளிவந்த ஊழல். சேது சமுத்திரத்தில் கப்பலை விட்டு தூர் வாறியதில் மறைந்துள்ள கொள்ளை ஒரு விஞ்ஞான ஊழல். இதுபோல் இன்னும் எவ்வளவோ! ஊழலை மனதளவில்கூட அங்கீகரிக்கும் ஒரு சமுதாயமாக நாம் முற்றிலும் மாறிவிடக்கூடாது.

திருவாரூரில் கருணாநிதிக்கு ஓட்டு கேட்கும் வேலையை அவர் மகள் செல்வி செய்து வருகிறார். சில நாட்கள் முன்னாள் பத்திரிக்கையில் ஒரு புகைப்படம் பார்த்தேன். ஒரு முதியவர் ஓட்டு கேட்க வந்த செல்வியிடம் திமுக ஆட்சியைப் பற்றி சரமாரியாக கேள்விகள் கேட்க, அவரிடம் திருப்பி வாக்குவாதம் செய்ய முடியாமல் செல்வியின் முகம் இருண்டு அவர் வந்த வழி திரும்பியதை படமெடுத்து போட்டிருந்தார்கள். அந்த கடைகோடி முதியவரின் உணர்வுதான் இன்று இந்த ஆட்சியால் அதிருப்தி அடைந்திருக்கும் மெஜாரிட்டி தமிழர்களின் உணர்வும்.

எழுத எழுத காரணங்கள் நீள்கின்றன. நீட்டித்துச் செல்லத்தான் எரிச்சலாக உள்ளது.

கருணாநிதியை யாரெல்லாம் ஆதரிக்கிறார்கள்?

  1. கருணாநிதியை விட ஜெயலலிதாவின் மேல் தனிப்பட்ட வெறுப்புடன் இருப்பவர்கள்.

  2. திமுகவினரை உறவினர்களாக கொண்டவர்கள்.

  3. திமுக ஆட்சியால் பலனடைந்த/பலனடைய எதிர்பார்க்கும் மைனாரிட்டியினர். (like govt staffs, contractors..)

  4. ஜெ.யின் கண்டிப்பான ஆட்சிமுறையின் மீது(strict bureaucracy) கசப்பும், அச்சமும் கொண்டவர்கள் (like those same govt staffs)

  5. எந்த வித பரிசீலனைகளும் இல்லாத பரம்பரை திமுக அனுதாபிகள்.

  6. அரசின் கஜானா நிலை தெரியாமல் இலவசங்களுக்கு ஆசைப்படும் வெகுளிகள்.

இப்படி இன்னும் சில காரணங்களை அடுக்கிச் செல்லலாம். எல்லாம் தனிப்பட்ட நலன்கள், விருப்பு வெறுப்புகள் சார்ந்ததாகவே இருக்கும்.

பொதுநலன் என்று பார்க்கும்போது, ஒரு ஆட்சி சரியில்லை என்றால் தயவு தாட்சண்யமின்றி அவர்களை தண்டிப்பதுதான் ஜனநாயகத்தை சமநிலையில் வைத்திருக்க இருக்கக்கூடிய ஒரே வழி. அடுத்து வருபவர்களுக்கும் மக்கள் நலனில் ஒரு பயம் கலந்த அக்கறை இருக்கும். உண்மையில் ஜனநாயகத்தின் தாத்பர்யமும் அதுதான். ஒரு ஆட்சி கயமைத்தனமானது என்றால் சுயபிரக்ஞை கொண்ட எந்த குடிமகனும் அதை தண்டிக்கத் தயங்கக்கூடாது. அவர்களை நீடிக்கச் செய்ய சுயவிருப்பு வெறுப்புகளுக்கு இடம் தரக்கூடாது. காரணங்களை ‘கண்டுபிடித்து’ நியாயப்படுத்த முயலக்கூடாது. அப்புறம் அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

இந்தத் தேர்தலை பொறுத்தவரை இதுதான் என் நிலைப்பாடு. அதாவது, திமுகவை அதன் கடந்த கால ஆட்சியின் தவறுகளுக்காக தண்டிப்பது.

-0-

அரசியலில் மாத்திரமல்ல எதிலுமே நாம் ஒரு நன்னம்பிக்கை (optimism) கொண்டிருப்பது அவசியம். அது மட்டுமே நம்மை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும். இல்லையென்றால் இன்றே சயனைடை சுவைத்து முடித்துக் கொள்ளலாம். காரணம் உலகம் அதன் எல்லாக் கூறுகளிலும் அவ்வளவு அபத்தங்களால் நிறைந்தது. நன்னம்பிக்கைதான் உலகை இன்றளவும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. எல்லா சீர்திருத்தங்களுக்கும் அடிகோலியுள்ளது. எல்லா புரட்சிகளுக்கும் வித்திட்டிருக்கிறது. எல்லா பரிணாமங்களுலும் உடனிருந்திருக்கிறது.

அந்த optimism, logical optimism தானா என்பதை மட்டும் சரிபார்த்துக் கொள்வது முக்கியம்.

அரசியல் கட்சிகள் என்ன மாதிரி நடந்து கொள்கின்றன என்பது அடுத்தது. நமக்கு முன்னுள்ள வாய்ப்புகளில் நாம் சரியானதை தேர்ந்தெடுக்கிறோமா என்பதுதான் முக்கியம். தேர்தல் அரசியலில் தொடர்ந்து எடுக்கப்படும் சரியான முடிவுகள் அரசியலில் சீர்திருத்ததை நிச்சயம் கொண்டு வரும். இரு கட்சிகள் தொடர்ந்து மாறி மாறி ஏமாற்றி வந்தால், மாற்று சக்தியாக மூன்றாவதாக ஒன்று கண்டிப்பாக உதிக்கும். அது மாறுதலை கொண்டு வரும். இதுவரையான அரசியல் சரித்திரத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு இதனை சரிபார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

ஒரு எளிய உதாரணமாக, தொடர்ந்து அரசியல் சீர்கெட்டு, அராஜகம் மலிந்து கிடந்த பீகாரில் இன்று ஒரு நல்லாட்சி வந்து விடவில்லையா? அந்த நல்லாட்சிக்கு பீகார் மக்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி வாய்ப்பளிக்கவில்லையா? அதுதான் optimism!


மில்லியன் டாலர் கேள்வி

மில்லியன் டாலர்களெல்லாம் (5 கோடி) இப்போது பஸ் கூரைகளிலேயே கிடைப்பதால் இனி இந்த மாதிரி சொலவடைகளுக்கெல்லாம் மதிப்பிருக்காது.

-0-

திமுக பற்றி நான் எழுதியவற்றில் பலவற்றை சேர்த்துக் கொள்ள வில்லை. முக்கியமாக கருணாநிதி அரசு கேபிள் டிவி திட்டத்தை எதிர்கொண்டு அடித்த அந்தர் பல்டிகளை.

-1-

அதிமுக ஆட்சியில் இருக்கும்போது ஜெ. சுமங்கலி கேபிள் நெட்வொர்க்கின் எதேச்சதிகாரத்தை தடுக்க கேபிள் டிவிக்களை அரசுடமையாக்கும் மசோதா கொண்டு வந்தார். உடனே கருணாநிதி குடும்பத்தாருக்கு குலைநடுங்கிப் போனது. உடனே கட்சியின் முக்கியத் தலைகளெல்லாம் திரண்டு சென்று கவர்னரிடம் மனு கொடுத்து ஒப்பாரி வைத்தார்கள். தற்காலிகமாக அதில் முட்டுக்கட்டை விழுந்தது. அரசு கேபிள் வருவதற்குள் தேர்தல் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

-2-

இப்போது காட்சி மாறுகிறது. தினகரன் அலுவலகம் எரிப்பு விவகாரத்தில் கருணாநிதி, அழகிரியுடன் மாறன் சகோதரர்களுக்கு சச்சரவு ஏற்படுகிறது. இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று முழங்குகிறார் அழகிரி. ராயல் கேபிள் விஷனை துவக்கி மதுரையின் கேபிள் டிவி தொழிலை கையகப்படுத்துகிறார்.அவர்களின் டிவி சேனல்களுக்கு போட்டியாக கலைஞர் தொலைக்காட்சி உருவாகிறது. மாறன் சகோதர்களுக்கு கோடிகளை குவிக்கும் சுமங்கலி கேபிள் விஷனை முடக்க அரசு கேபிள் டிவி அறிவிப்பை வெளியிடுகிறார் கருணாநிதி. அரசு கேபிளுக்காக நவீன ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களும், நவீன உபகரணங்களும் 50 கோடி செலவில் மாவட்ட தலைநகரங்கள் தோறும் வாங்கி குவிக்கப்படுகின்றன. மாதக் கட்டணம் 100 ரூபாய் என்று நிர்ணயிக்கப்படுகிறது. சுமங்கலி கேபிளை எதிர்த்து லோக்கல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு கேபிளுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

-3-

இப்போது ‘திடீர்’ குடும்ப சமாதானப் படலம். காட்சிகள் மாறுகின்றன. அழகிரியும், மாறன் சகோதர்களும் மாமா-மாப்ளே என்று சிரித்தபடி போஸ் கொடுக்கின்றனர். பிரிந்த உறவுகள் மீண்டும் சேர்ந்து கொள்கின்றன. மக்கள் பணம் 50 கோடி வாரியிறைத்த அரசு கேபிள் கிடப்பில் போடப்படுகிறது. அரசு கேபிளை நம்பி அணி திரண்ட கேபிள் ஆபரேட்டர்கள் த்ராடில் விடப்படுகின்றனர். ராயல் கேபிள் விஷன் மட்டும் தொடர்ந்து சக்கைப் போடு போடுகிறது. ஜாக் கம்யூனிகேசன்ஸ் என்ற பெயரில் அது சென்னையிலும் தொழிலை விரிவுபடுத்துகிறது.

குடும்பத்தில் குடுமிப்பிடி என்றதும் கருணாநிதிக்கு தமிழக மக்களெல்லாம் அதிக கேபிள் கட்டணம் செலுத்துவது குறித்து உடனே கவலையும் அக்கறையும் ஊற்றெடுத்தது. அதே, பங்கு பாங்காக பிரித்துக் கொள்ளப்பட்டதும் தமிழக மக்கள் மீண்டும் அநாதைகளாகி விட்டனர். கருணாநிதியின் அக்கறையெல்லாம் புஸ்வாணமாகி விட்டது.


0 comments:

Post a Comment