Mooladee: ஒரு மதிப்புரை

Posted: Tuesday, April 19, 2011 | Posted by no-nononsense | Labels:



சடங்குகள் என்பன மனிதன் வாழ்வில் தொன்று தொட்டு இருந்து வரும் மரபு சார்ந்த ஒரு நடைமுறை வழக்கம். பெரும்பாலும் சமய நம்பிக்கைகள் அதற்கு காரணமாக இருக்கின்றன. இனம், மதம், கலாச்சாரங்களைப் பொறுத்து சடங்குகள் பலவிதமான மாறுபட்ட வழக்கங்களை கொண்டிருக்கின்றன. சமயங்களுள் சடங்குகள் இல்லாத சமயம் என்று ஒன்று இருக்கவியலுமா என்று எனக்குத் தோன்றுவதுண்டு. ஒரு நம்பிக்கை, மதமாக பரிணாம வளர்ச்சி காண்பதில் சடங்குகளின் பங்கு மகத்தானது. மதங்களை சடங்குகள் நிறுவனமயமாக்கி நிலைபெறச் செய்கின்றன.

சடங்குகள் நாம் நன்கறிந்த மதமான இந்து மதத்தின் ஆதாரமான ஒரு விஷயம். எல்லாவற்றுக்கும் அதில் சடங்குகள் உண்டு. பின்பற்றப்படும் சடங்குகள் போதாதென்றால், நாமாக நம் மெய்யுணர்வின் பால் உந்தப்பட்டு இஷ்டப்படியாக ஒரு சடங்கை உருவாக்கிக் கொள்ளலாம். உருவாக்க மட்டுமன்றி சடங்குகளை மறுதலிப்பதற்கும்கூட அதில் அனுமதியுண்டு என்பதுதான் அதன் தனித்துவமான அம்சம். ஆனால் இந்த வசதி எல்லா மதங்களிலும் கிடையாது. சில மதங்கள் தங்கள் மாந்தர்களின் வாழ்வியலை சட்டங்கள் கொண்டு வரையறுத்து வைத்துள்ளன. அதை மீறி நடந்து கொள்வது தன்னை அதிலிருந்து சுய பிரஷ்டம் செய்துகொள்வதற்கு சமமானதாக கருதப்படுகிறது.

உதாரணமாக இந்து மதத்தில் பிராமணர்கள் பின்பற்றும் உபநயனத்தைச் சொல்லலாம். அதை பிள்ளைகள் எல்லோருக்கும் செய்துவிட வேண்டியது ஒரு மதக் கடமையாக கருதப்படுகிறது. உண்மையில் அது ஒரு கொண்டாட்டமான சம்பவமாக இருக்கும். கிட்டத்தட்ட ஒரு கல்யாணம் போல ஏற்பாடுகள் தடபுடல் படும். தன்னை அந்த சடங்குக்கு உட்படுத்திக் கொள்ளும் சிறுவர்களும் அதை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார்கள். அதற்கு பூணூல் கல்யாணம் என்ற மங்களகரமான பெயர் கூட உண்டு.

ஆனால் சில மதங்களில், இனக் குழுக்களில் கட்டாயமாக்கப்பட்டிருக்கும் மதச் சடங்குகள் - அவற்றை எதிர்கொள்பவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சிகரமானவை அல்ல. இஸ்லாம் உள்ளிட்ட ஆப்ரகாமிய மதங்களில் புனித சடங்காக பின்பற்றப்படும் சுன்னத் (அ) விருத்த சேதனம் அந்த வகையிலானது.

சுன்னத் என்றால் நமக்கு அதன் செய்முறை தெரியும். பூணூல் கல்யாணம் போலவே அதற்கும் ‘... கல்யாணம்’ என்ற கொண்டாட்டமான சொல் வழக்கமும் உண்டு. நாம் அறிந்தவரை ஆண்களுடைய பிறப்புறுப்பின் முன்தோல் நீக்கப்படும். சில நாட்களில் புண் ஆறிய பிறகு பெரிதாக எந்தவித மாறுதலும் இன்றி வாழ்க்கை சகஜநிலைக்குத் திரும்பி விடும். இது ஆண்களுக்கு. இதுவே பெண்களுக்குச் செய்யப்படும் சுன்னத்தில்...?

-0-

முதலில் பெண்களுக்கு சுன்னத்தா என்னும் வியப்பை விலக்கி வைக்க சில விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. இஸ்லாமில் ஆண்களுக்கு விருத்த சேதனம் செய்யப்படுவது போலவே பெண்களுக்கும் செய்யப்படும் ஒரு மத ரீதியான நடைமுறை வழக்கம் (religious practice) உண்டு. பெரும்பாலும் அராபியர்களிடமும், ஆப்பிரிக்க நாடுகளின் இஸ்லாமிய பழங்குடிகளிடையேயும் அது வழக்கத்திலுள்ளது. சிறுமிகளாக இருக்கும் பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்து விட்டால் அவர்களை ஊர் பொதுவில் அதற்கென இருக்கும் கலாச்சார குழுவினரிடம் கொண்டு விட்டு விடுவார்கள். அவர்கள் அந்தப் பெண்களுக்கு விருத்த சேதனம் செய்து (female circumcision), புண் ஆறும் வரை ஒரு கொட்டிலில் விட்டு விடுவார்கள். அதை அவர்கள் ‘புனிதப்படுத்தல்’ (purification) என்று அழைக்கிறார்கள். அப்படி விருத்த சேதனம் செய்துகொள்ளும் பெண்களுக்கே திருமணம் நடைபெறும். செய்துகொள்ளாதப் பெண்களை மணமாக தகுதியற்றவர்கள் (bilakoro) என்று கூறி விலக்கி வைத்து விடுவார்கள். Bilakoro என்றால் புனிதமடையாதவள் என்று அர்த்தம்.

அது ஒருபுறம் இருக்க, ஆண்களுக்கு விருத்த சேதனம் எப்படி செய்யப்படும் என்று ஒருவாறு அறிவோம். ஆனால், பெண்களுக்கு அதை எப்படி செய்வார்கள்?

_241230_circumcision150.jpg

படத்திலுள்ளது போல மல்லாக்க படுக்க வைத்து, இருவர் அழுத்திப் பிடித்துக் கொள்ள, பிளேடு, கத்தி, அல்லது கூரான கண்ணாடி சில்லு போன்றவைகளைக் கொண்டு பெண்ணுறுப்பின் மேல் தோல்கள் முழுவதையும் கிளிடோரியஸ் உட்பட வெட்டி எடுத்துவிட்டு தையல் போட்டு விடுவார்கள். முடிவில், சிறுநீர் துளை, கீழ்புற துளை இரண்டு மட்டுமே மீதம் இருக்கும்.


அதாவது பெண்களுக்கு பாலுணர்ச்சியை தூண்டும் மேல்புறத் தோலுறுப்பு சுத்தமாக அகற்றப்பட்டு விடும். விளைவாக, அவர்களால் என்றுமே உடலுறவு இன்பத்தை துய்க்க முடியாது. அதாவது அவர்களுக்கு என்றுமே orgasm கிடையாது. உடலில் அதுவும் மற்றொரு உறுப்பாக இருக்கும். அவர்களின் கணவனுடைய பாலியல் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு துளையாக பயன்பட்டுக் கொண்டிருக்கும்.

‘அந்த சடங்கை செய்துகொள்ளா விட்டால் பெண்கள் பாலுணர்ச்சியால் தூண்டப்பட்டு கணவனுக்கு துரோகம் இழைத்துவிட வாய்ப்புண்டு. அவர்களுடைய பாலுணர்வு உறுப்புகளை சிதைத்து விடுவதன் மூலம் அவள் கணவனிடம் யோக்கியமாக இருப்பாள்’ - என்பது அவர்களின் நம்பிக்கை.


அதனை செய்து கொள்வதால் ஏற்படும் பாதிப்பு பாலுணர்வு இழப்பு என்பதுடன் மட்டும் முடிந்து விடுவதில்லை. முறையற்ற இரண சிகிச்சையினால் ஆறாத ரணங்கள் ஏற்பட்டு நாள்பட்ட வலியையும் வேதனையையும் கொடுத்துவரும். சரியாக தைக்கப்படாமல் மிகச் சிறியதாக மாறிவிடும் சிறுநீர் துளைகளில் எவ்வளவு அவசரம் என்றாலும் சிறுநீர் சொட்டு சொட்டாக மட்டுமே வெளியாகி கடும் வலியை ஏற்படுத்தும். இது போன்ற நீண்ட கால பாதிப்புகள் பல உண்டு.

-0-


மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலைச் சேர்ந்த Moolaade என்னும் படத்தை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. அது ஏற்படுத்திய தாக்கமே மேற்சொன்ன female circumcision பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் ஆவலை தந்தது.



அது செனகலில் உள்ளடங்கி அமைந்திருக்கும் ஒரு குக்கிராமம். ஒரே வளாகத்தில் அமைந்துள்ள மூன்று வீடுகளில் ஒரே நபருக்கு வாழ்க்கைப்பட்ட மூன்று மனைவிகள் வசிக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை முறையில் கணவனுக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும், அனைவரும் அவனுடைய சொல்லுக்கு கட்டுப்பட்டு, அடுத்ததாக தங்களுடைய மூத்தாளுக்கு கட்டுப்பட்டு ஒற்றுமையாக வாழ்கிறார்கள். அவர்களுள் இரண்டாம் தாரமாக இருப்பவளே கதையின் நாயகி ‘கோலி’.


ஒருநாள் கோலி வீட்டில் மும்முரமாக வேலையில் இருக்கும் போது நான்கு பெண் குழந்தைகள் அவள் பெயரை அழைத்த வண்ணம் ஓடி வந்து அவள் காலடியில் விழுந்து உதவி கேட்கிறார்கள். அவர்களின் வயது சராசரியாக ஐந்து முதல் ஏழு இருக்கலாம். அவர்களின் இடுப்புகளை மறைத்திருக்கும் அரையாடைகளை காணும் போதே தெரிகிறது அவர்களெல்லாம் உறுப்பை வெட்டித்தள்ளும் சுன்னத் புனித சடங்கிலிருந்து பாதியில் தப்பி வந்தவர்கள் என்பது. அவர்களின் நிலையறிந்து கோலி அவர்களுக்கு அடைக்கலம் தருகிறாள்.


அவர்கள் ஏன் கோலியிடம் அடைக்கலம் தேடி வந்தார்கள் என்பதற்கும் ஒரு பின்னணி இருக்கிறது. கோலி ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் தன்னுடைய மகளுக்கு சுன்னத் செய்ய மறுத்துவிட்டாள். அது ஒன்றும் அவ்வளவு இலகுவான காரியமல்ல. ஆனாலும் சாதித்திருந்தாள். எதிர்ப்புகளுக்கு அஞ்சவில்லை. அதற்கு முன் அப்படி எந்த பெண்ணும் மத சடங்கை நிராகரித்து கலகம் செய்ததை அந்த ஊர் கேள்விப்பட்டிருக்கவும் இல்லை. அதனால்தான் புனித சடங்கு நடக்கும் கொட்டிலில் இருந்து தப்பிப்பது என்று முடிவு செய்ததும் அந்த சிறுமிகளுக்கு ஞாபகம் வந்த ஒரே இடம் கோலியின் இல்லம் தான். அதை பின்னர் அவள் ஆற அமர விசாரிக்கும் போது அந்த சிறுமிகளே சொல்கிறார்கள்.


சிறுமிகளுக்கு தான் அடைக்கலம் தந்தது விடிந்ததும் ஊரில் எந்த மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கோலி அறிவாள். அதனால் அந்த ஊரில் பாரம்பரியமாக வழக்கத்தில் இருக்கும் 'moolaade' என்னும் அடைக்கல பிரகடனத்தை வெளியிடுகிறாள். அது ஒரு மந்திர சக்தி கொண்ட பிரகடனம் என்பது ஐதீகம். அதன்படி அவள் வீட்டு வாயிலை மறைத்து குறிப்பிட்ட வண்ணங்கள் கொண்ட கயிறு கட்டப்படும். அதைத்தாண்டி அந்த சிறுமிகளை கவர்வதற்காக யாரும் உள்ளே வரக்கூடாது. அப்படி வர முற்படுபவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள் என்பது அவர்களின் அமானுஷ்ய நம்பிக்கை. அதனால் அச்சிறுமிகள் நாடி வந்த பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.


ஆனால், எதிர்பார்த்தப்படி ஊரில் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது.

கோலி, புனித சடங்கு கொட்டிலை விட்டுத் தப்பிச் சென்ற நான்கு குழந்தைகளுக்கு Moolaade தந்துள்ளச் செயல் ஊரில் பரபரப்பை ஏற்படுத்துகிறது. ஊர்த்தலைவனின் தலைமையில் பஞ்சாயத்து கூடி விவாதிக்கிறது. முடிவில் வெளியூர் சென்றுள்ள அவள் கணவன் வந்ததும், அவனைக் கொண்டு கோலியை வழிக்கு கொண்டு வர முடிவு செய்கின்றனர். அதற்கு மும் முக்கியமாக ஒரு பொருளை ஊர் முழுவதும் தடை செய்கின்றனர். அது, ரேடியோ!


அந்த ஊர் பெண்களுக்கு வெளியுலகுடன் இருக்கும் ஒரே தொடர்பாக சமீப காலமாக ரேடியோ இருந்துவருகிறது. அதில் எப்போதும் பாடல்களை ஒலிக்கவிட்டவாறு வேலைகளை செய்வது வழக்கமாகி இருந்தது. அவர்களுள் கோலி வெளியுலக செய்திகளை மிக விருப்பமாக கேட்பாள். அதன்மூலம் தான் சுன்னத் செய்வது இஸ்லாமில் கட்டாயமில்லை என்பதை தெரிந்து வைத்திருந்தாள். அதுதான் அவளை நெருடலின்றி தன் மகளை சுன்னத் செய்வதிலிருந்து தடுத்து காக்கச் செய்திருந்தது.


கோலி ரேடியோ கேட்டுதான் இப்படி கலகக்காரியாகி ஊர் கட்டுப்பாட்டை மதிக்க தவறுகிறாள் என்று ஊர் கணவன்மார்களெல்லால் தத்தம் மனைவிகள் வைத்திருக்கும் ரேடியோக்களை பிடுங்கி வந்து ஊர் பொதுவில் இட்டு எரிக்கின்றனர். இச்செயல் ஊர் பெண்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இரவெல்லாம் ரேடியோ கேட்டு தூங்கிப் பழகிய அவர்கள் தூக்கம் வராமல் நடுநிசியில் கூடி அலுத்துக் கொள்கின்றனர். அதுவன்றி அவர்கள் மேற்கொண்டு செய்யக்கூடியது வேறொன்றுமில்லை. அவர்கள் தம் கணவன்களிடம் காட்டும் பக்தி அப்படிப்பட்டது.

இந்தப் பிரச்னையினால் கோலியின் மகளுக்கும் ஊர்த்தலைவனின் மகனுக்கும் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்த திருமணம் தடைபடுகிறது. பிரான்ஸில் படித்து வேலையில் இருந்து சம்பாதித்து ஊர் திரும்பும் ஊர்த்தலைவனின் மகன் இப்ராஹிம், தன் தந்தை மற்றும் ஊர் மக்களின் பிற்போக்குத்தனம் கண்டு பொருமுகிறான். சிறு வயது முதல் தான் விரும்பும் கோலியின் மகளையே திருமணம் செய்ய விரும்புகிறான். ஒரு bilakoro தன் மருமகளாக வரமுடியாது என்கிறார் தந்தை.

இதனிடையே, வியாபாரம் விஷயமாக வெளியூர் சென்றிருக்கும் கோலியின் கணவன் ஊர் திரும்புகிறான். அவனை வழிமறித்து ஊரே அவன் மனைவியின் மதவிரோதச் செயல் குறித்து முறையிடுகிறது. அவன் கோபம் கொண்டு அவளை பலவாறாக Moolaade-யை முறிக்கும் பிரகடனத்தை உடனே வெளியிட நிர்பந்திக்கிறான். அவள் அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொள்வது தவிர, வேறு எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. ஊர் மேலும் அவன் பலவாறாக அவனைத் தூற்றி, அவன் ஆண்மையை பரிகசிக்கிறது. அவனின் கோபம் பல மடங்காகி, கோலியை ஊர் பொதுவில் அழைத்து வந்து சவுக்கால் விளாசுகிறான்.

இப்போது ஊர் பெண்கள் கோலியின் செயலில் இருக்கும் நியாயத்தையும் பொது நன்மையையும் உணர்ந்தவர்களாக அவள் பக்கம் நின்று ‘செய்யாதே... சவுக்கடிக்கு அசைந்து கொடுக்காதே..’ என்று குரல் கொடுக்கின்றனர். சவுக்கு அடித்து களைக்கிறது. கோலி ரத்தம் காயங்களுடன் சாய்கிறாள். ஆனால், அவள் வாய் மட்டும் Moolaade-யை முறிக்கும் பிரகடனத்தை வெளியிடவேயில்லை.

கோலியை ஊர் மத்தியில் சவுக்கு பதம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவளிடம் அடைக்கலமாகி இருந்த நான்கு பெண்களில் ஒருவளின் தாய் மட்டும் அவள் வாசலில் நின்று ஆசை வார்த்தை பேசி தன் மகளை Moolaade-யை விட்டு வெளியே வரவழைத்து கவர்ந்து செல்கிறாள். நேரே சென்று அவளை purification செய்ய அதற்கென இருக்கும் பெண்களிடம் ஒப்படைக்கிறாள். அங்கே அவசரம் அவசரமாக நடக்கும் உறுப்பு சிதைப்பு வேலையில் அந்த சிறுமி உயிரிழக்கிறாள்! தப்பி ஓடி வந்த நான்கு பெண்களில் அவள்தான் வயதில் சிறியவள்.

இதைக் கேள்விப்படும் கோலி மனம் நொந்து Moolaade இத்துடன் முடிந்தது என்று அறிவிக்கிறாள். கயிற்று அகற்றப்படுகிறது. எஞ்சியுள்ள பெண்கள் அவர்களின் தாயார் வசம் ஒப்படைக்கப்படுகிறார்கள். எனினும், இப்போது அவர்களெல்லாம் தத்தம் அளவில் சுன்னத் சடங்கை நிராகரிப்பவர்களாக மாறியிருக்கின்றனர். கோலியின் தியாகம் ஏற்படுத்திய தாக்கம் அது!

இதன் பிறகு கதை - ஆண்களுக்கு எதிராக பெண்கள் ஒன்று திரள்வது, கோலியின் மகளை இப்ராஹிம் ஏற்றுக் கொள்வது என்று சென்று முடிவில் purification-யை இனி இல்லாமல் செய்கிறது. அதற்காக நடக்கும் சம்பாஷணைகளும், பெண்களின் நடிப்பும் கதையின் போக்குக்கு வலுவூட்டுவதாக அமைந்து நம்மை காட்சிகளுடன் கட்டிப் போடுவதாக இருக்கும்.

இங்கே சொல்லாமல் விடுபட்ட ஒரு சுவாரஸ்யமான கேரக்டரும் உண்டு. மிலிட்டரியில் வேலை செய்து பாதியில் வேலையை விட்டு பலசரக்கு வியாபாரம் செய்ய அந்த கிராமத்து மரத்தடியில் கடை விரித்திருக்கும் மெர்சனைர் என்பவன் அவன். அந்த ஊர் பெண்களிடம் சரசமாடுவதும் போது நகைச்சுவையை தெறிக்கும் அந்த பாத்திரம், கோலியை ஊர் கூடி சவுக்கால் அடிக்கும் போது தடுக்க ஓடி வரும் ஒரே ஆண் மகனாக உயர்ந்து நிற்கும். முடிவில் அதற்காக ஊர்த்தலைவன் உத்தரவின்படி கொல்லவும் படுகிறான்.

படம் முழுக்கவே மிகையில்லா யதார்த்த நடிப்பை காண முடிகிறது. இப்படத்தின் இயக்குநர் ஓஸ்மெனே செம்பெனே நல்ல படங்கள் தருவதில் ஏற்கெனவே முத்திரை பதித்திருக்கிறார் என்று தெரிகிறது. கிடைத்தால் அவரின் வேறு படங்களையும் பார்க்க வேண்டும்.

இன்னொன்று குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் இசை. தன் மகளே தானே கவர்ந்து சென்று கொன்று விட்டதை எண்ணி துயரம் தாங்காமல் அழுது அரற்றி துவண்டு விழும் அந்த தாயிடம் மற்றொரு கைக்குழந்தையை கொடுத்து இதை தன் மகளாக இனி வளர்த்து வருமாறு அந்த ஊர் பெண்கள் கூறுகின்றனர். மனதை பிசையும் அந்தக் காட்சியில் அந்த தாய் அந்தக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு ஒரு பாடலை பாடியவாறு நடக்கிறாள். அந்த பாஷை புரியாவிட்டாலும் நம்முடைய அவளின் துயரத்தை உணர்வு நாளங்களுக்கும் கடத்தி நம்மையும் கண் கலங்கச் செய்கிறது அந்த குரலும், அதில் இழையும் லயமும்.

நல்ல ஒரு படத்தை பார்த்த திருப்தி!

-0-

இந்தப் படம் பின்தங்கிய ஆப்பிரிக்க கிராமங்களில் நிலவும் கலாச்சார சூழலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எனக்கு அதில் தனிப்பட்டு கவனிக்கத் தோன்றியது அவர்களுடைய குடும்ப வாழ்க்கை முறையை. ஒரு கணவன் - பல மனைவி. ஆனால் சேர்ந்து வாழ்வதில் அவர்களுக்குள் ஒரு சிக்கலும் இல்லை. உண்மையில் ஒருவருக்கு ஒருவர் அன்பை பொழிகின்றனர். யாருடைய பிள்ளையாக இருந்தாலும் அதன் மீதான பாசம் பொதுவானது. ஒரு காட்சியில் இளையாள் கணவனுடன் சம்போகம் செய்துவிட்டு களைத்து போய் நீராடிக் கொண்டிருக்கும் போது, மூத்தாள் அவளுக்கு தண்ணீர் சொரிகிறாள்.

கலாச்சாரம், பண்பாடு என்பதெல்லாம் அவரவர் வாழ்க்கை முறைகளின் வசதிகளின் பாற் பட்டது. ஓரிடத்தில் கூட்டுக்கலவி என்பதும், அதன் காரணமாக தாய்வழி சமூகம் என்பதும் அமைதியாக வாழ்க்கை முறையை வழிகாட்டிக் கொண்டிருக்க, உலகின் வேறொரு மூலையில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கலாச்சாரமாக பொதுமைப்படுத்தி முச்சந்தியில் நிற்க வைத்து உயிர் போகும் வரை கல்லெறிந்து கொண்டிருக்கிறார்கள்.

விசித்திரமான உலகம்!


0 comments:

Post a Comment