திண்ணைப் பேச்சு: மின்வெட்டு, நாடுகளின் வரலாறு

Posted: Friday, April 29, 2011 | Posted by no-nononsense | Labels: ,
கடந்த ஒரு மணி நேரத்தில் நான்கு முறை கரண்ட் போய் வந்துவிட்டது. ட்ரான்பார்மர்கள் லோடு தாங்காமல் திணறுகின்றன. மின்சார பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. அரசாங்கத்திடம் மாற்று ஏற்பாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இனியும் இதற்கெல்லாம் பழகிக்கொள்ள வேண்டியதுதான் என்பது புத்தியில் உறைத்தாலும், மின்சார சாதனங்களுடன் வாழ்ந்து பழகிவிட்டதை சட்டென்று விலக்கிக் கொள்ள முடியவில்லை.

இதனாலேயே நான் ஒரு லேப்டாப் வாங்கும் நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறேன். பல ஆண்டுகளாக நான் கட்டாயமாக தவிர்த்து வந்த ஒன்று அது. தவிர்க்க காரணம், வீட்டில் மேசைக் கணினி இருக்கிறது. எப்போதும் பிரியாமல் உடன் என் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அதிலேயே இணையதளங்களை படித்துக்கொள்ளவும், சின்ன சின்னதாக எழுதியனுப்பவும் முடிகிறது. ஆனால் சீரியஸாக சில விஷயங்களை எழுத அமரும்போதுதான், கரண்ட் போவதன் வலியும், கையடக்க போன்களின் கையறு நிலையும் உறைக்கிறது.

உதாரணமாக, ஜனகனமன சர்ச்சைப் பற்றி இரண்டு பகுதிகள் எழுதி அனுப்பி விட்டேன். அதன் மூன்றாவது பகுதியை வெகுசிரத்தையாக எழுதிக்கொண்டு இருந்தபோது திடீரென்று கரண்ட் போய்விட்டது. என்னுடைய யூபிஎஸ் சில நேரங்களில் பேக்கப் நிற்காமல் அப்படியே அணைந்துவிடும். அதுதான் அப்போது நடந்தது. என்னுடய பல மணி நேர உழைப்பு ஒரு நொடியில் வீணாய் போனது. சேமித்துக் கொள்ளவெல்லாம் அவகாசமே கிடைக்கவில்லை. வெறுத்து போய் விட்டு விட்டேன். மீண்டும் எழுத மனம் வரவேயில்லை. (ஆனால் எழுதுவேன்). ஒரு மணி நேரத்தில் நான்கைந்து முறை மின்சாரம் தடைபட்டால் எந்த யூபிஎஸ் தான் தாங்கும்? அதனால் அதனிடம் நான் குறைபட்டுக் கொள்வதில்லை.

அரசாங்கம் செய்து தந்திடாத மாற்று ஏற்பாட்டை நாம் நம் சொந்த செலவில் செய்துகொள்ள வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம். வீட்டில் நம்மை ஆக்கிரமித்து கிடக்கும் இயந்திரங்களின் எண்ணிக்கையில் சிலவற்றை கூட்ட வேண்டியுள்ளது. வீட்டுக்கு வீடு அவரவர் வசதிக்கு தக்க ஏஸி, ஜெனரேட்டர், இன்வெர்ட்டர், யூபிஎஸ், லாப்டாப் என்று சில இயந்திர சாதனங்களை வாங்கிப்போடும் அவசியம் ஏற்பட்டுவிட்டது. ஆடம்பரம், அத்தியாவசியமாகிவிட்டது.

முடியாதவர்கள் வாழ்க்கையில் இயந்திரங்கள் இன்றி வாழ்ந்த முற்கால மனநிலையை சாத்தியப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.
ஆனால், இந்த கொளுத்தும் கோடையில் காற்றாடி இயங்காததால் தூங்க முடியாமல் தவிக்கும் என் குழந்தையின் முகம் பார்த்து ‘பொறுத்துக்கொள்’ என்று எப்படி நான் சொல்லமுடியும்? விரைவில் என் பட்ஜெட்டையும் மீறி சில செலவினங்கள் அதிகரிக்க உள்ளன.
-0-

நான் தற்சமயம் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார சரித்திரம் பற்றி படித்து வருகிறேன். அதைப் படிக்கப் படிக்க, இந்தியாவின் பின்தங்கிய நிலை, பொதுவெளி/அரசியல் நாகரிகங்களின் தேக்க நிலை குறித்து சில புரிதல்களை அடைய முடிகிறது.

யூ.எஸ், கனடா, சிங்கப்பூர் போன்ற குறுகிய அரசியல் வரலாறு கொண்ட நாடுகளை இந்தியா, இந்தோனேஷியா, பாரசீகம் போன்ற நெடும் வரலாறு கொண்ட நாடுகளின் அரசியல் பொருளாதார வரலாறுகளுடன் ஒப்பாய்வு செய்வதன் மூலம் (comparative study), நெடும் வரலாறு நாடுகளின் வளர்ச்சிக்கு அந்த தொன்மையே தடையாக இருந்துள்ளது என்பதை நிரூபிக்க முடியும். வேறுவிதமாக சொன்னால் காலனி நாடுகளின் அபார வளர்ச்சியுடன், பழம்பெரு நாடுகளின் பின்தங்கிய சமூக பொருளாதாரத்தை ஒப்புநோக்குதல் என்றும் சொல்லலாம்.

சீனா, ஜப்பான் போன்ற சில விதிவிலக்குகள் இதற்கு உண்டு. ஆனால் சீனாவுக்கு அதன் கறாரான பொதுவுடமை கொள்கையும், ஜப்பானுக்கு அதன் isolationism-ம் வளர்ச்சியை சாதித்துக் கொடுத்துள்ளன.

இது குறித்த விவாதத்தில் மையக்கருத்திலிருந்து விலகாத எடுகோள்களை முன்வைத்து அலசுவதன் மூலம் இந்திய வளர்ச்சிக்கு தடையாக இருந்துவரும் காரணிகளை பிரித்துப்பார்த்து இனங்காணலாம் எனத் தோன்றுகிறது. எழுத்தில் முடியாவிட்டாலும் நேர்பேச்சிலாவது ஆர்வமுள்ள நண்பர்களுடன் விவாதித்து பார்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment