பொன்னியின் செல்வனும் மணிரத்னமும்

Posted: Saturday, April 30, 2011 | Posted by no-nononsense | Labels: ,
பொன்னியின் செல்வனை முன்வைத்து... :

மணிரத்னம் பற்றி பேசி நேரத்தை வீணடித்துக்கொள்ள வேண்டுமா என்று யோசிக்கிறேன். இங்கே ஏற்கெனவே ஒருமுறை அவர் தலை எனக்கும் நவலடிக்கும் இடையே உருண்டிருக்கிறது. அப்போதாவது ஒன்றிரண்டு உரோமங்கள் அதில் ஒட்டிக்கொண்டிருந்தன. ராவணன் என்னும் த்ராபைக்கு பிறகு அவையும் உதிர்ந்து விட்டன. இப்போது முற்றிலும் முனை மழுங்கிய மனிதராக காட்சியளிக்கிறார். இராமாயணம் என்னும் காவியத்தையே திரைக்கதையில் சரிவர கையாளத் தெரியாமல் சொதப்பிய ஒருவரால் எப்படி பொன்னியின் செல்வன் போன்ற ஒரு வெகுசன இலக்கியத்திற்கு காட்சி வடிவம் கொடுக்க முடியும் என்பது சந்தேகமாக இருக்கிறது.

மணிரத்னம் படைப்பூக்கத்துடன் செயல்பட்ட ஆரம்பகால படங்களை மட்டும் வைத்துக்கொண்டு இன்று வரை அவரை எடை போட்டுக்கொண்டு இருப்பது சரியான மதிப்பீடாக இருக்காது. கடந்த பத்தாண்டுகளில் அவரின் படங்களில் தொழில்நுட்பம் மேம்பட்டிருக்கும் அளவுக்கு படைப்பின் தரமும், அது பார்வையாளன் முன் முன்வைக்கும் மொழியும் மேம்படவில்லை என்பதற்கு ஆய்வெல்லாம் அவசியமில்லை. பத்தோடு பதினொன்றாக அவை கரைந்து எந்த வித அழுத்தமான தடங்களையும் தனக்கென பதிவு செய்துகொள்ளாமல் காணாமல் போனதே போதுமானது.

அவருடைய படங்களில் ஆரம்ப காலங்களில் தென்பட்ட குறைந்த பட்ச எதார்த்த வடிவம் சிதைவடைந்து விட்டது. சேரிகளை காட்டும்போது கூட அதில் ஒரு மேட்டிமைத்தனமான பாசாங்கை எதார்த்தம் என்று படம் பிடித்துக் காட்ய முயல்கிறார். யாரை நம்ப வைக்க? யாருக்காக? நிச்சயமாய் அவரை இந்தளவு உயர்த்திய நல்ல சினிமாவின் ரசிகர்களுக்காக அல்ல. நிச்சயமாக பத்தாண்டுகள் முன்பு வரை ‘சி’ சென்டரிலும் கூட அவரின் படத்தை நூறு நாட்கள் ஓட்டிக்காட்டிய கடைமட்ட ரசிகனுக்காக அல்ல [அலைபாயுதே வெளியான வருடம் 2000].

அவரின் உலகம் வேறு மாதிரி ஆகிவிட்டது. படைப்பூக்கம் திரிந்து, ஹிந்து, தமிழ், தெலுங்கு என்பதான மூன்று மொழிகளுக்கான வியாபார கணக்குகள்தான் இன்று அவரின் சினிமாவை நிர்ணயம் செய்துகொண்டு இருக்கின்றன. ‘மணிரத்னம்’ என்னும் brand name-ஐ மும்மொழிகளில் திறம்பட மார்க்கெட் செய்யத் தெரிந்த ஒருவராக, சமரசங்கள் நிறைந்த சரக்குகளை உற்பத்தி செய்து தள்ளிவிட்டுக்கொண்டு இருக்கிறார். இன்று மணிரத்னம் வெறும் முகமூடி மட்டுமே. அதன் பின்னால் இருந்து எல்லாவற்றையும் முடிவு செய்வதும் இயக்குவதும் அவரின் அறிவுஜீவி மனைவி என்று கேள்வி. இப்படி நீர்த்துபோய்விட்ட ஒரு மனிதரிடம் இருந்து என்ன ஒரு நல்ல காட்சியாக்கத்தை பொன்னியின் செல்வனில் எதிர்பார்த்துவிட முடியும்? எனக்கு நம்பிக்கை இல்லை.

ஜெயமோகன் இலக்கியத்தில் ஜாம்பவானாக இருக்கலாம். ஆனால் சினிமா உலகம் என்பது வேறு. கவிஞர் வாலியின் வார்த்தைகளில் சொன்னால் அங்கே யாரும் துட்டுக்கு முட்டையிடும் பெட்டை கோழியாகத்தான் இருக்கமுடியும். இதுவரை அவர் பங்கெடுத்துக் கொண்ட ஆக்கங்களில் அவரின் ஆளுமை நிரூபிக்கப்பட்டதில்லை. அண்மையில் தான் எழுதிய கதை என ஜெயமோகன் ஜபர்தஸ்தாக மார்தட்டிக்கொண்ட ‘சிந்துசமவெளி’ சந்தி சிரித்துவிட்டது. இவர்கள் இருவரும் சேர்ந்து கிண்டப்போகும் கூட்டாஞ்சோறு சுவையாக இருந்துவிட்டால் மகிழ்ச்சிதான். மாறாக, வேறு மாதிரி அமைந்துவிட்டால் அங்கே கூறுபோடப்படுவது கல்கியின் காவியமாக இருந்துவிடும் என்பதுதான் எம் கவலை. இதுவே அவர்களின் சொந்தக் கதையாக இருந்திருந்தால் இவ்வளவு பதற்றம் நமக்கு அவசியமில்லை. ஆனால், அமரர் கல்கியின் அந்த குறிப்பிட்ட காவியத்துடன் தமிழ் வாசகன் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மனதளவிலான நெருக்கம் அப்படிப்பட்டதல்லவே.

0 comments:

Post a Comment