அண்ணமார் சாமி கதை

Posted: Saturday, April 2, 2011 | Posted by no-nononsense | Labels:
சில நாட்களாக பொன்னர்-சங்கர் திரைப்பட புகைப்பட காட்சிகள் கண்ணில் விழுந்து கவனத்தை கவர்ந்து வருகின்றன. பிரசாந்த் அழகான உடையலங்காரங்களில் இரட்டை வேடம் பூண்டிருக்க, வடநாட்டு வெண்சரும அழகிகள் அவரைச் சுற்றி ஆடி பாடிக் கொண்டிருக்கின்றனர்.

பொன்னர்-சங்கர் கதை - கொங்கு பிரதேசங்களில் 'குன்னடையான் கதை’ என்று வழிவழியாகப் பாணர்களால் பாடப்பட்டு வரும் ஒரு வீர காவியம். கொங்கு வேளாளர்களுக்கும் வேட்டுவர்களுக்கும் இடையே நடந்த போர் ஒன்றை பற்றிய கதை. அவர்கள் உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்த ஒன்று. ஒரு எளிய உதாரணம் சொன்னால் எந்தளவு அது ஒரு மரபு சார்ந்த ஒரு கதையாடல் என்பது புரியும்:

கொங்கு வேளாளர்களின் பெயர்களில் வழங்கப்படும் பொன்னான், பொன்னுசாமி, சின்னசாமி, பெரியசாமி, பெரியண்ணன், சின்னண்ணன், சங்கரன், பொன்னையன், சின்னையன்...,

பெண் குழந்தைகளின் பெயர்களில் இருக்கும் அருக்காணி, தங்கம்மாள், முத்தம்மாள், முத்தாயி, பவளாயி...,

போன்ற பெயர்கள் எல்லாம் அண்ணமார் சாமி கதை அல்லது குன்னடையான் கதை அல்லது பொன்னர்-சங்கர் கதையில் வரும் கதாப்பாத்திரங்களின் பெயர்களே.

வெகுளியான ஒரு ஆளை பார்த்து ‘மசையன்’ என்று கேலி செய்யும் வழக்கம் உண்டு. பொன்னர்-சங்கர் சகோதரர்களின் தந்தை குன்னடையான் பங்காளிகளின் சூழ்ச்சிகளைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அவர்களை நம்பி விடுவதாக வரும் இடத்தில் அவர் குணத்தை சுட்டிக்காட்ட இந்தச் சொல் கையாளப்படுகிறது.

கொங்கு வட்டாரத்தில் போடப்படும் பின்வரும் விடுகதையை கேள்விப்பட்டிருக்கலாம்:

‘பெரியண்ணன் வேட்டிய மடின்னாலும் மடிக்க முடியாது
சின்னண்ணங் காச எண்ணுனாலும் எண்ண முடியாது’

இதற்கு வானம், விண்மீன்கள் என்று விடை. இதில் வரும் பெரியண்ணன், சின்னண்ணன் போன்ற பெயர்களும் அண்ணமார் சாமிகளையே குறிக்கின்றன. இது போல பல பழமொழிகளும், விடுகதைகளும், கொங்கு வட்டார வழக்கில் வெகு இயல்பாக ஊடாடுவதை கவனிக்கலாம்.

குல தெய்வங்களின் கோவில்களுக்குச் செல்வதற்கு இணையாக வீரப்பூர் அண்ணமார் சாமி கோவிலுக்குச் செல்வதையும், அங்கே நடைபெறும் படுகளத் திருவிழாவில் பங்குகொண்டு வழிபடுவதையும் தம் கடமையாக கொண்டிருக்கும் குடும்பங்கள் பல உண்டு.

இப்படி பல தலைமுறைகளாக ஒரு இனத்தின் சரித்திரத்துடன் ஒட்டி உறவாடி வரும் அவர்களின் நாட்டார் வழக்காற்றை, அதன் பண்பாட்டு அடையாளத்தை எவ்வளவு சினிமாத்தனம் செய்து பாழடிக்க முடியுமோ அவ்வளவு செய்திருப்பதாக வெளியாகும் புகைப்படங்களை காணும்போது தெரிகிறது.

சினிமாவில் நேட்டிவிட்டி என்பதன் அர்த்தம் வேறுதான் எனினும், ஒரு மண்சார்ந்த மரபு கட்டிக் காத்து வரும் சரித்திர நிகழ்வின் கலை வடிவம் ஒன்றை படமாக்கும்போது, அதற்கு எந்தளவு நேர்மையாக இருக்கிறோம் என்பது முக்கியம். இந்தப் படம் அதை செய்யத் தவறியிருந்தால், கடுமையான கண்டனங்களை சந்திக்க நேரிடும்.

-0-

படித்தவர்களுக்கு நன்றி. மீண்டும் தலைப்புக்கு வருவோம்.

இங்கே நான் எழுதியுள்ளது மிகவும் மேலோட்டமான அலசல். இது வெறும் சினிமா சம்மந்தப்பட்டது மட்டுமே.

குன்னடையான் கதை எனப்படும் அண்ணமார் சாமி கதையைப் பற்றி எழுத நிறைய உண்டு.

அக்கதை -

அக்கதையின் பின்புலம் -

அக்கதையின் இருவேறு வெர்சன்கள் -

ஆய்வு ரீதியாக நுணுகிப் பார்க்கும்போது இரண்டில் ஏற்புடையதாக இருப்பது எது என்பது -

அக்கதைப்பாடலின் இன்றைய நிலை -

அதைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் -

என்று நிறைய உண்டு.

காலம் காலமாக கூத்து மேடையின் வழி கசிந்து காதில் நுழையும் கதைப்பாடலின் பின்னுள்ள கதையே பெரும்பாலும் யாருக்கும் தெரியாது எனும்போது மற்ற கேள்விகளுக்கெல்லாம் வேலையே இருப்பதில்லை.

-0-

இட்டுக்கட்டப்படும் கதையில் மெய்யென்ன பொய்யென்ன? இரண்டுமே புனைவுதான்.

விநாயகர் வழிபாடு என்பது நம்முடைய தமிழ் மரபில் கிடையாது. பழந்தமிழ் பாடல்களில் அதற்கான சான்று கிடையாது. பிற்காலத்தில் வட இந்தியாவில் கிளைத்திருந்த காணாபத்ய வழிபாட்டு நம்பிக்கையிலிருந்து இந்து மதத்தின் சைவப் பிரிவு உள்வாங்கிக் கொண்ட ஒரு தெய்வம் இந்த விநாயகர் aka கணேசா aka பிள்ளையார் (தமிழில்). பல்லவர் காலத்தில் ஏழாம் நூற்றாண்டளவில்தான் அது நடந்தது. பின்னர் ஒன்பதாம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் ஸ்மார்த்த சமய மரபை கட்டமைக்கும்போது ஆறு கடவுள்களுள் ஒருவராக பட்டியலிட்டு வைத்தார். அதன் பிறகே விநாயக வழிபாடு பல்கிப் பெருகியது. பன்னிரண்டாம் நூற்றாண்டு வாக்கில் கணேச புராணம் உருவானது. அதற்கு முன்னும் பின்னும் பல முரணான கதையாடல்கள் தோன்றின. சிலவற்றில் விநாயகர் பிரம்மச்சாரி. சிலவற்றில் ஒன்றுக்கு இரண்டு மனைவிகளையுடைய பெரும் குடும்பஸ்தர். இதில் அவரவருக்கு எது பிடிக்கிறதோ அதை ஏற்றுக்கொண்டு மற்றதை விட்டு விடலாம். அந்தளவில் இந்து சமயம் சௌகரியமானது.

இன்று பரவலாகவும் பதட்டம் தருவதாகவும் நடத்தப்படும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களும் ஊர்வலங்களும் தமிழ் சமூகத்தில் உள்நுழைந்து எவ்வளவு காலம் ஆகிறது என்றுச் சொல்ல முடியுமா? மிக மிக அண்மை காலம் வரை அப்படி ஒரு கொண்டாட்டமே இங்கு கிடையாது என்பதுதான் உண்மை.

இதேபோல் தமிழர்களின் தொனமையான தெய்வமாக விளங்கிய முருகன், இன்று சிவனின் மகனாக திரிந்து தனித்துவம இழந்து ஸ்கந்தன்(இதன் பொருள் பலானது!), கார்த்திகேயன் என்றெல்லாம் அழைக்கும் நிலையை அடைந்திருப்பது ஒரு தனி சோக வரலாறு.

ஆனால் அதிலெல்லாம் தமிழர்களில் எத்தனை பேருக்கு அக்கறை? டிவியில் சீரியல்களாக காட்டப்படுவதையும், பக்கத்தை நிரப்ப பக்தி மலரில் எழுதபடுவதையும், கோவில்களில் ஓதப்படுவதையும் மட்டுமே தங்களின் பக்தி மரபு என்றும், பண்பாட்டு அடையாளம் என்றும் நம்பி வாழ்ந்துகொண்டும், தங்களின் கொழுந்துகளுக்கு சொல்லிக் கொடுத்து கொண்டும் இருக்கும் ஒரு மூடப்பெருங்கூட்டம் இது. இதை மறுப்போர் என்னுடன் வாதிடலாம்.

0 comments:

Post a Comment