வளைகுடா நாடுகளின் கொத்தடிமைத்தனம்

Posted: Monday, July 19, 2010 | Posted by no-nononsense | Labels: ,
அரபு நாடுகளில் கொத்தடிமைகளாக வாழும் இந்தியர்களை பற்றிய விவாதத்தில் என் கருத்து:

நம் அரசாங்கத்துக்கும் சௌதி அரேபியாவின் கொத்தடிமைத்தனத்துக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. இது அவரவராக விரும்பி ஏற்றுக்கொள்ளும் பாடு. நம் அரசாங்கம் செய்ய வேண்டியது தன் குடிமக்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது. சும்மா பெயரளவில் இல்லாமல் அதன் பயன் கடைமட்டம் வரை சென்று சேரும்படியான ஒரு திட்டம். அல்லது அதை நோக்கிய நடவடிக்கைகள். அவ்வளவு துன்பங்களைச் சுமந்து சம்பாதிக்கும் 10 முதல் 15 ஆயிரம் ரூபாய், இங்கேயே கிடைக்கும் என்றால் யாரும் போக மாட்டார்கள்.

இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம், துபாய் போயிட்டா(எல்லா அரபு நாடுகளும் நமக்கு துபாய் தான்) நல்லா பிழைச்சிக்கிடலாம் என்னும் மாயை மற்றும் ஏஜெண்டுகளின் மிகையான தகவல்களை நம்பி செல்பவர்கள் தான் அதிகம். அங்கே போனாலும் சொற்பத் தொகைதான் கிடைக்கும் என்பது தெரிந்திருந்தால் இங்கேயே இருந்து விடுவார்கள்.

மேலும், இங்கே எழுதப்பட்டுள்ளது லேபர்கள் எனப்படும் கூலித் தொழிலாளிகளைப் பற்றி. தொழில்நுட்பம், பொறியியல் போன்றவற்றில் அனுபவமும் கல்வித் தகுதியும் கொண்டிருப்பவர்கள் அரபு நாடுகளில் நல்ல வேலை மற்றும் வாழ்க்கைத் தரத்துடன் இருப்பதும் நாம் கண்டு வருவதுதான்.

இந்த விஷயத்தில் நம் அரசாங்கத்தால் மேலதிகமாக செய்யக்கூடியதெல்லாம் ஏஜெண்டுகளை முறைப்படுத்தி கண்காணிப்பதுதான். ஆனால் பதிவுசெய்து கொண்டு இயங்குபபர்களை விட பதிவு செய்துகொள்ளாமல் ஆள் பிடித்து அனுப்பி கமிஷன் சம்பாதிப்பவர்களே அதிகம் என்பதால், பெரிதாக எந்த வேலை தரம், உறுதி, பாதுகாப்பு உத்தரவாதங்களையும் பெற முடியாது.

இந்தியாவில் அம்பானிகள் உருவாகியிருக்கலாம். ஆனாலும் இது அன்றும் இன்றும் ஏழை நாடுதான். அன்று ஃபிஜி, மொரீஸியஸ், கரீபியன் கரும்புத் தோட்டங்களுக்கும் இலங்கையின் தேயிலை தோட்டங்களுக்கும் கொத்தடிமைகளாக சென்றார்கள் என்றால், பிற்காலத்தில் அரபு நாடுகளுக்கும் கீழை நாடுகளுக்கும் சென்றார்கள். காலம் மாறினாலும் காட்சி மாறவில்லை. ஏழையின் வாழ்க்கைத் தரம் மாறவில்லை.

ஆனால் எப்போதாகிலும் நாம் ஒரு ஐரோப்பியனோ, அமெரிக்கனோ, ஆஸ்திரேலியனோ லேபர் வேலைக்கு கப்பல் ஏறியதாகப் படித்திருக்கிறோமா? இதற்கான காரணங்களை பட்டியலிட்டால் அது சமூக பொருளாதாரத்தின் அத்தனை கூறுகளை அடியொட்டி ஆராய்வதாக அமையும். ஒன்றிரண்டு என்பதாக இருக்காது. மேலை நாடுகளில் அரசாங்கம் தன் குடிமகனுக்கு கைகொடுத்து உதவுகிறது. இங்கே உன் பெற்றோர் உதவுகிறார்கள். அதனால் இந்தியா போன்ற நாடுகளில் குடிமகனாக அவதரிப்பதில் ஆகமுக்கியம் - ஏழைக்கா? பணக்காரனுக்கா? நீ யாருக்கு மகனாக பிறக்கிறாய் என்பதைப் பொறுத்தது.

ஏழையின் மகன், ஒடுக்கப்பட்ட ஜாதியின் பிள்ளை, பழங்குடியினத்தில் பிறப்பு என்றால் அதற்கேற்ப இங்கே அமைந்திருக்கும் சமூகத்தடைகளை தகர்த்து எறிந்து வர ஒரு போராட்டம் தேவைப்படுகிறது. சமூகப் போராட்டங்களின் முடிவாக வாழ்பவர்களை விட வீழ்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதுதான் வரலாறு நமக்கு காட்டுவது. அப்படிப்பட்டவர்களில் சிலர்தான் இப்படி கொத்தடிமைகளாக தங்களை வருத்திக்கொண்டு தன் குடும்பங்களை வாழ வைக்க போராடுபவர்கள்.

0 comments:

Post a Comment