அரசியல் சீர்கேடுகளுக்கு எதிராக நாம் செய்யக்கூடியது என்ன?

Posted: Wednesday, July 7, 2010 | Posted by no-nononsense | Labels:

//எத்தனை உதாரணங்கள் கொடுத்தும் எவ்வளவு அப்பட்டமாகவும், மறைமுகமாகவும், நக்கலாகவும், நகைச்சுவையாகவும் திரும்ப திரும்ப எழுதினாலும் அடிப்படை செய்தி என்னவென்றால்  நம்மை ஆளுகிற மற்றும் அதற்கு மாற்றாயிருக்கிற யாருக்கும் மக்கள் நலனில் எந்த அக்கறையும், தொலை நோக்கு பார்வையும் இல்லை என்பதே. இதற்கு நாமெல்லாம் என்ன செய்ய தயாராக இருக்கிறோம் அல்லது தயாராக இருக்கிறோமா என்பதே கேள்வி//

இதற்கு நாமெல்லாம் என்ன செய்ய தயாராக இருக்கிறோம்

உடனடியாக ஒன்றும் செய்யமுடியாது. அதற்காக எதையும் செய்யாமலும் இருந்துவிடக் கூடாது. 

கருணாநிதி-ஜெயலலிதா போன்ற அரசியல் வியாபாரிகளின் ஊழல், ஆடம்பரம், துக்ளக்தனமாக ஆட்சிமுறை பற்றியெல்லாம் மக்களிடம் போதுமான விழிப்புணர்ச்சி இல்லை என்பதே இவை அனைத்திற்கும் காரணம். ஒரு புரட்சிக்கு/மாற்றத்துக்கு வித்திடும் விழிப்புணர்ச்சியை நோக்கி தொடர்ந்து கருத்துக்கள் மொழியப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். விமர்சனங்கள் தைரியமாக முன்வைக்கப்பட வேண்டும். சோர்ந்துவிடக் கூடாது. பேசிப் பேசி என்ன ஆகப்போகிறது என்று சலிப்படையக் கூடாது. 

இது தொடருமானால், இந்த தலைமுறையில் கைகூடாத அரசியல் தூய்மை அடுத்தடுத்த தலைமுறைகளில் எட்டப்படலாம். அதற்கு நம் இன்றைய விமர்சனங்கள் அடித்தளமாக அமைந்து உதவலாம். இதற்கெல்லாம் சரித்திரம் நெடுக பல முன்னுதாரணங்கள் உள்ளன. அதையெல்லாம் எழுதி போரடிக்க விரும்பவில்லை.

சுருக்கமாக: நம்மை போன்ற சமூகத்தின் மேல் அக்கறை கொண்டவர்கள் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து இயங்க வேண்டும். களத்தில் முடியாவிட்டாலும் விமர்சன தளத்திலாவது. 

அல்லது தயாராக இருக்கிறோமா என்பதே கேள்வி

நடப்புகள் மீது விமர்சனப்பூர்வமான கருத்துக்கள் கொண்டவர்கள் நிச்சயமாக தயாராக இருக்கவேண்டும். தெருவில் இறங்க வேண்டாம், கொடி பிடிக்க வேண்டாம், கோஷம் போட வேண்டாம், ரத்தம் சிந்த வேண்டாம். ஆனால் அப்படி ரத்தம் சிந்தி பொதுநன்மைக்காக போராட முன்வருபவர்களுக்கு நம்முடைய ஆதரவை இருந்த இடத்தில் இருந்துகொண்டே நல்கவாவது தயாராக இருக்கவேண்டும். இது ஒரு சிந்திக்க தெரிந்த மனிதராக நம்முடைய கடப்பாடு. 

0 comments:

Post a Comment