உள்மன சித்திரம் ஒன்றின் குறிப்பு

Posted: Saturday, July 10, 2010 | Posted by no-nononsense | Labels:
அப்போது நான் சேலத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். ஒரு வேலை நாளில் ஒரு அலுவலாக வெளியே கிளம்பும்போது ஓரிடத்தில் அவரை காண்கிறேன். அவர் என் பால்ய கால சிநேகிதர். என்னை விட வயதில் மூத்தவர். பெயர், பாலு. அவ்வளவு அந்நியோன்யமாக சிறு வயதில் சேர்ந்து சுற்றியிருக்கிறோம். மீசை முளை விட்ட பருவத்தில் சில லௌகீக விஷயங்களின் உட்பொருள்களை அவர் வாயிலாகவே அறிந்து கொண்டிருந்தேன். பிறகு காலம் வேறு வேறு திசைகளில் இருவரையும் கரை சேர்த்து விட்டது. நீண்ட நாள் கழித்து கண்டதும் மகிழ்ச்சியுடன் பல விஷயங்களை இருவரும் பேசிக் கொள்கிறோம். இத்தனை ஆண்டுகளில் வாழ்க்கை என்னை எப்படியெல்லாம் புடம் போட்டு வருகிறது என்பதை சம்பவ கோர்வையுடன் அவர்க்கு விலாவரியாக விளக்குகிறேன்.

பேசிக்கொண்டே அவருடைய சைக்கிளில் இருவரும் ஒரு ஒதுக்குப்புறமான டீக்கடைக்குச் செல்கிறோம். அக்கடையின் முன்னால் விநோதமான ஒரு ஸ்டேண்ட் L-ஐ கவிழ்த்து போட்டது போல் இருக்கிறது. அவர் சென்று அதில் தன் சைக்கிளை பாதுகாப்பாக கப்ளிங் போட்டு இணைக்கிறார். இதென்ன சைக்கிளை பூட்டிச் செல்ல புதுமுறையாக இருக்கிறதே என்று வியக்கிறேன். உள்ளே சென்று டீ சாப்பிடுகிறோம். அக்கடை, நண்பருக்கு ஏற்கெனவே பழக்கமான கடை போல தெரிகிறது. டீக்கும் கடைக்கும் சம்மந்தமில்லாத தடி தடியான ஆள்கள் உள்ளே ஒருபுறம் அமர்ந்திருக்கிறார்கள். பார்க்க புதுப்பேட்டை பட ரவுடிகள் போன்று ஒரு தோற்றம். அவர்களைக் கண்டதும் நண்பர் என்னிடம் இங்கே வேண்டாம், நாம் போகலாம் என்று அவசரப்படுத்துகிறார்.

வெளியே வருகிறோம். அதற்குள் எங்களை கவனித்து விட்ட அந்த ரவுடிகள், வெளியே வந்து நண்பருடன் மல்லுக்கு நிற்கிறார்கள். ஏதோ பழைய பிரச்னை என்று புரிகிறது. அவருக்கு பரிந்து பேசிய என்னை இன்னும் பேசினா இப்பவே வெட்டி விடுவேன் என்கிறான் கரடு முரடான முக லட்சணம் கொண்ட ஒரு ரவுடி. எனக்கு உதறல் எடுக்கிறது. தான் பேசி விட்டு வருவதாகவும் என்னை சைக்கிளை எடுத்துக்கொண்டு போகவும் நண்பர் சொல்கிறார். சாவியுடன் வெளியே வரும் நான், வெளியே அந்த L வடிவ கப்ளிங் பூட்டை திறக்க முயற்சிக்கிறேன். மக்கர் செய்கிறது. தொடர்ந்து போராட்டம்; ம்ம்ஹூம், எதுவும் வேலைக்கு ஆகவில்லை. உள்ளே சென்று அவரையே அழைத்து வந்து திறந்து தரச் சொல்லலாம் என்றால் உள்ளே செல்லவும் பயம். அவர்கள் மிரட்டிய தொனி அப்படி. கொலை வெறியை கண்களில் கண்ட பிறகே பயந்து வேகமாக வெளியே வந்திருக்கிறேன்.

அப்போது உள்ளே இருந்து தள்ளுமுள்ளு, அலறல் சத்தங்கள். எனக்கு முதுகு தண்டு சில்லிட ஆரம்பிக்கிறது. இனி சைக்கிளை நம்பி பிரயோஜனம் இல்லை என்று நடக்க எத்தனிக்கும்போது, கடையின் பக்கக் கதவு திறந்துகொண்டு ஒரு மீன்பாடி வண்டி வெளியே வருகிறது. அதில் வெட்டபட்டு உயிரிழந்த நிலையில் நண்பர் உட்பட நான்கு பிணங்கள். நான் நடுநடுங்க ஆரம்பித்து விட்டேன். இன்னும் கிளம்பாமல் நின்று கொண்டிருக்கும் என்னை கண்டவர்கள், பிணத்தை பார்த்து விட்டதால் அவனையும் வெட்டுங்கடா என்று என்னையும் துரத்த ஆரம்பிக்கிறார்கள். ஓட்டம்.. ஓட்டம்.. மரணபயம் தந்த அசுர ஓட்டம். எனக்கும் அவர்களுக்குமான இடைவெளி குறைந்தது அரை கிலோ மீட்டர் இருக்கும்படியான தொலைவில் இருக்கும்போது இனியும் என்னால் ஓட முடியாது என்று சோர்ந்து ஒளிந்துகொள்ள இடம் தேடும்போது, அங்கே ஓர் இடத்தில் பந்தல் போட்டு கும்பலாக ஒரு இழவு வீடு தெரிந்தது. அங்கே சென்று கும்பலில் கலக்க முடிவுசெய்கிறேன். அருகில் சென்று பார்த்த பிறகே தெரிந்தது அது ஒரு பாய் வீட்டு வஃபாத் (முஸ்லிம் இழவு). அதை பொருட்படுத்தாமல் அங்கே சென்று கலந்து விடுகிறேன்.

இங்கேயிருந்து எப்படி தப்பிக்க.. கிலி பிடித்து ஆட்டிக்கொண்டிடுருக்கும் அந்த வேளையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வஃபாத் வீட்டுக்கு அருகிலுள்ள வீடுகளின் முன்னாள் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்களை எல்லாம் உதைத்து பார்க்கிறேன். எதுவும் ஸ்டார்ட் ஆகவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தால் மெயின்ரோடை தவிர்த்து குறுக்காக செல்லும் சிறிய ரோடு ஒன்று கண்ணில் படுகிறது. அங்கே சென்று நின்று, போகும் வரும் வண்டிகளில் எல்லாம் லிஃப்ட் கேட்கிறேன். ஒரு பயலும் நிறுத்தவில்லை. கொஞ்சம் ஒதுங்கி நிற்கவில்லை என்றால் வெட்டுபட்டு போக இருந்த உயிர் அடிபட்டு போய்விடும் என்று பயந்து விலகிவந்து வேறு என்ன செய்யலாம் என்று யோசிக்கிறேன். அப்போதுதான் என் பாக்கெட்டில் இருந்த செல்போன் நினைவுக்கு வந்தது. அதை எடுத்து பார்த்தால் சிக்னல் பிரச்னையில் டவர் விட்டு விட்டு ஒளிர்ந்தது. அருகிலிருந்த வீட்டின் மாடிக்கு ஏறி என் அலுவலகத்திற்கு போன் செய்து என் பணியாளரிடம் இடம் சொல்லி சீக்கிரம் வந்து அழைத்து போகச் சொல்கிறேன். பைக் வரும் வரை இனி காத்திருக்க வேண்டும். இப்போதைக்கு இந்த மொட்டை மாடியே பாதுகாப்பு; ஆசுவாசம்; அப்படியே கால்களை மடக்கி பால்கனி சுவர் ஓரமாக உட்கார்கிறேன். அங்கேயிருந்து பார்த்தால் ரோடு தெரியும். நாம் தெரிய மாட்டோம். ஓ.. இதென்ன.. நான் சாய்ந்துள்ள மொட்டை மாடி சுவர் அப்படியே சாய்கிறதே.. அய்யய்யோ விழுகிறேனே..!

0 0

நன்கு ஸ்கிரிப்ட் எழுதப்பட்டது போல தோன்றும் இந்த சம்பவம் அல்லது கதை அல்லது கற்பனை உண்மையில் இன்று அதிகாலை நான் கண்ட கனவு. சுவர் சாய்வதுபோல் உணர்ந்ததும் ‘ஆ..வ்வூ..ஊ..’ என்று பயத்தில் நாக்கு குழற விநோதமாக கத்திக்கொண்டு எழுந்த என்னை என் மனைவி தூக்கத்திலிருந்து தலையை தூக்கி விசித்திரமாக ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் படுத்துக் கொண்டார். எனக்கு போன தூக்கம் போனதுதான். புரண்டு புரண்டு பார்த்தும் பிறகு தூக்கமே வரவில்லை. சிறிது நேரம் அந்தக் கனவையே எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தேன். பல விஷயங்கள் அதில் விசித்திரமாக இருந்தன. பாலு, என்னும் அந்த அண்ணனை நான் கடந்த பத்தாண்டுகளில் சிலமுறையே சந்தித்திருக்கிறேன். ஆனால் எல்லாமே அவசரகதியில். அவர் தற்சமயம் ஆட்டோ ஓட்டுகிறார் என்பதால் அவசரமாக சில சமயங்களில் அவரிடம் சென்று ஆட்டோ சொல்வேன். நிறைய பேசணும், அப்புறமாக வர்றேன் என்று அப்போது சொல்வேன். ஆனால் அந்த அப்புறம் அவருக்கும் எனக்கும் பிறகு வரவேயில்லை. இன்று கனவில்தான் வந்திருக்கிறது. அவர் ஆட்டோ ஓட்டுவதும்கூட உள்ளபடியே சேலத்தில் அல்ல நாமக்கல்லில்தான்.

அந்த டீக்கடை இருப்பதாக கனவில் வந்த இடம் சேலம் ஜான்சன்பேட்டை சினிமா தியேட்டர் ஒன்றின் எதிர்புறமுள்ள குறுக்கு சந்து. பதிமூன்று வருடங்களுக்கு முன்பு அங்கே சிலமுறை உலவியிருக்கிறேன். அந்த தியேட்டரில் என்னை காண சேலம் வந்த மணிகண்டன், பண்டாரி நண்பர் குழாமுடன் ஏதோ பாடாவதி சினிமா பார்த்த ஞாபகம் இருக்கிறது. அதற்கு பிறகு அந்த ஏரியாவுக்கும் எனக்கும் ஸ்நான ப்ராப்தியும் இல்லை. ஆனால் கனவில் ஸ்கெட்ச் போட்ட மாதிரி துல்லியமாக அந்த இடங்கள் அப்படியே வந்தன.

அந்த L -ஐ கவிழ்த்து போட்ட ஸ்டாண்டிங் லாக் - சைக்கிளை பிணைத்து பூட்டி வைக்க அது ஒரு நல்ல யோசனை. ஆனால் அப்படி ஒன்றை இதற்குமுன் நான் எங்கேயும் கணடதில்லை.

அதெப்படி நான்கு பிணங்கள்?!

இந்த கனவின் நீளம் எவ்வளவு இருக்கும்? காலை 5.30-க்கு எழுந்தேன். சிறிது நேரம் நியூஸ் வெப்சைட்களை மேய்ந்து விட்டு சில பாடல்களை டவுன்லோடு போட்டு விட்டு, ஒரு குட்டி தூக்கத்துக்காக 6 மணியளவில் மீண்டும் படுத்து தூங்கினேன். திடுக்கிட்டு எழுந்தபோது சுவர் கடிகாரத்தின் முள் 7-ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்குள் ஆழமான தூக்கத்தை எட்டி, கச்சிதமான சம்பவகோர்வைகளுடன் இப்படி ஒரு கனவா? வியக்கிறேன்!

இப்படி சில கனவுகள் எப்போதாவது திடுக்கிட்டு எழச் செய்கின்றன. ஒரு கணநேர சிந்தனைக்கு பிறகு போர்வையுடன் சேர்த்து அதுபற்றிய நினைவையையும் இழுத்து மூடிவிடுவோம். இதையாவது பதிவு செய்து வைப்போமே என்றுதான் பல் விளக்கியபடியே இதனை தட்டச்சிக் கொண்டிருக்கிறேன்.

ஒருவேளை விழிக்காமல் இருந்திருந்தால் கனவில் தொடர்ச்சி எவ்வாறு இருந்திருக்கும்?

சாய்ந்து சரிந்த அந்த சுவரிலிருந்து ஏதாவது அதிசயம் நடந்து கீழே விழாமல் தப்பியிருப்பேனா?

அப்படி தப்பியிருந்தாலும் என்னை துரத்தி வந்தவர்கள் கையில் அகப்படாமல் நீடித்திருப்பேனா?

உண்மையில் என்னை துரத்தி வந்தது ரவுடிகளா, இல்லை Final Destination-ல் வருவது போல் மரணமா?

சொப்பன சாஸ்திரம் சொல்வதுபோல் எல்லா கனவுகளும் எதையோ சொல்லத்தான் முயற்சிக்கின்றன என்றால், இக்கனவு எனக்கு முன்சொல்வது என்ன? என்னை துரத்த போகும் மரணத்தையா?

ஐயகோ, என் இன்ஸூரன்ஸ் புதுப்பிக்கப்பட்டு விட்டதா, இல்லை எப்பவும்போல் மறந்து விட்டேனா? எதுவும் உடனே ஞாபகம் வர மறுக்கிறதே.. அதன் நாமினியைகூட இன்னும் மனைவி பெயருக்கு மாற்றவில்லையே..

முகவரியற்று போன என் முதல் காதலியின் முகம் ஏன் சட்டென்று இப்போது ஞாபகம் வர வேண்டும்? அட, இன்னும் மனதில் எங்கேயோ ஒட்டிக் கொண்டிருக்கிறாள் போலுள்ளதே!

லௌகீகத்தை லவலேசம் தானே இதுவரை அனுபவித்திருக்கிறோம். அரே பாப்ரே.. அதற்குள்ளே சாவா..

எனக்கு அடுத்து பிறக்க இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா? அதை தெரிந்துகொள்ளாமல் இறந்து விடுவோமா?

என்னை துரத்தும் மரணம் எதில் காத்திருக்கிறது. ஒருவேளை பஸ்ஸில் இருக்குமா? இனியும் இந்த பேய் வேக பஸ்களில் தினமும் போகத்தான் வேண்டுமா? காவிரி பாலத்தில் பஸ் ஓவர் டேக் ஆகும்போதெல்லாம் ஈரக்குலையை பிடிக்கிறதே.

0 0

”ஏங்க.. அப்படி என்னதான் எப்ப பாரு லொட்டு லொட்டுனு தட்டுவீங்களோ.. வீட்ல இருக்க அன்னைக்காவது கூடமாட ஏதாவது செஞ்சா என்ன..”

OOPS!.. விநாடி பொழுதில் நிஜத்திற்கு திரும்புகிறேன். இன்னும் கொஞ்ச நேரம் சொப்பன சாஸ்திரத்தை ஆராய்ந்து கொண்டிருந்தால் சமையலறையிலிருந்து ஏதாவது அஸ்திரம் வந்து தாக்க வாய்ப்புள்ளது என்பதாலும், அதை நினைக்கும்போது ஏற்படும் கலக்கம், கனவு ஏற்படுத்திய அச்சத்தை விட அதீதமானது என்பதாலும், தாற்காலிக அச்சத்தை விலக்கி நிரந்தர அச்சத்துக்கு செவிசாய்த்து தலைவணங்கி தாள்பணிய எழுந்து கொள்கிறேன்.


புஷ்பராஜ்
8.10 AM

0 comments:

Post a Comment