தமிழின காவலர் விஜய்!

Posted: Thursday, July 22, 2010 | Posted by no-nononsense | Labels: ,

நண்பர்: 
//இங்ஙனம் வருங்கால தமிழனக் காவலரை நீ அவமதிக்கிறாய்//
யாரு விஜய்யா? அடப்பாவி இதை சொல்ல உன்னால் முடிந்தது.அதுவும் நன்றாக தமிழ் அறிவு,கவிதை,கதை,இப்படி பல தமிழ்பற்றிய விசயம் தெரிந்த நீ இப்படி சொல்வது கண்டனத்திற்க்குறியது.இதை நான் இரும்புககரம் கொண்டு வன்மையாக கண்டிக்கிறேன்.அவர் மேடையில் ஒரு பக்கம் தடுமாறாமல் தமிழில் பேசட்டும் அப்புறம் நாம் உயிரோடு இருந்தால் பார்ப்போம்....
(தமிழனக் காவலரை) 
அப்படி ஒரு நிலை வந்தால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.சத்தியம்

இதற்கு இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டுமா? தமிழறிவுக்கும் தமிழினக் காவலர் ஆவதற்கும் என்ன தொடர்பு? இது ஸ்டாலினையும், அழகிரியையும் ஏன் ஜெயலலிதாவையுமே கூட அவமதிக்கும் சொல். பின்னே, கருணாநிதிக்குப் பிறகு இவர்களில் ஒருவர் தானே அடுத்த தமிழினக் காவலராக வரப் போகிறார்கள். அல்லாமல் சீட் காலியாகவா இருக்கப் போகிறது??

தமிழ்தான் பிரச்னையென்றால் ஒரு செம்மொழி மாநாடு நடத்தி அடிபொடி கவிஞர்களை விட்டு கவிபாட செய்து விட்டால் போச்சு. “நீ தமிழ்த்தாய்க்கே தமிழப்பா, தமிழ்க்கடவுளின் தாத்தா” என்றெல்லாம் பாடி பட்டம் தந்துவிட மாட்டார்களா? ஜெயலலிதா தஞ்சையில் நடத்திய உலகத்தமிழ் மாநாட்டின் பரப்புரைகளைத் தேடி படித்து பார். அப்போதே அவர் தமிழினக் காவலராக ஆகிவிட்ட கதையெல்லாம் தெரியும்.

அப்புறம் விஜய்....,

விஜய் ஏன் வரமுடியாது என்று நினைக்கிறாய்? நேற்று களவானி படம் பார்க்க போயிருந்தேன். அருமையான அப்படத்துக்கு மொத்தம் 15 பேர் தான் வந்திருந்தார்கள். இதே விஜயின் ஏதோ ஒரு மாஹாக் கடிப் படமாக இருந்திருந்தாலும்கூட கூட்டம் 50-க்கும் கீழே குறைந்திருக்குமா? அதுதான் தமிழர் போற்றும் விஜய்யின் மகத்துவம். தமிழக அரசியலில் நாளை வெற்றிடம் ஒன்று ஏற்படுமானால் இந்த மகத்துவம் நாளை மகசூலாக மாறி ஓட்டுக்களை அள்ளாமல் போய் விடுமா என்ன? 


தமிழனை நாடாள சினிமாக்காரனை விட்டால் ஏது கதி? ரஜினி, விஜயகாந்த், விஜய், சீமான் போன்ற சினிமாக்காரர்கள் தானே தமிழர் உரிமைக்கு கடைசிப் புகழிடம்? ரஜினி வாய்ஸ் என்றால் என்ன என்று நீ பார்த்ததில்லையா? தமிழனுக்கு ஒரு பிரச்னையா.. ரஜினி என்ன சொல்லப் போகிறார், கமல் என்ன முற்போக்கு கருத்து வைத்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளாமல் தமிழனுக்கு தூக்கம் தான் வந்துவிடுமா? நேற்று எம்ஜிஆர், இன்று ரஜினி, நாளை விஜய். இப்படி யாராவது நடிகர்கள் நம்மை இந்த மாபாவியான மானுட ஜென்மத்திலிருந்து கடைத்தேற்ற கட்டாயம் தேவை. நடந்தவைகளையும் நடப்பவைகளையும் பரிசீலித்து பார். சாத்தியங்கள் புரியும்.

சுரேஷ், உன் அரசியல் அறிவு அவசியம் அப்டேட் செய்துகொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. கவனிக்க.

அப்புறம் தற்கொலை அது இது என்று என்னவோ சொல்லியுள்ளாய். அதைத்தானே விடாமல் பாடாவதி சினிமாக்களாகப் பார்த்து அடிக்கடி செய்து வருகிறாயே, இன்னும் என்ன? யார் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நடப்பது நடந்து கொண்டுதான் இருக்கும். அதற்கெல்லாம் சாக வேண்டும் என்றால் எத்தனை முறை சாக?

உளவியல் ரீதியாக உனக்கு ஏன் இந்த எண்ணம் வந்தது என்று கொஞ்சம் சிந்தித்து பார்த்தேன். உனக்கு இன்னும் கல்யாணம் ஆகாததால்தான் தற்கொலை எண்ணம் வந்திருக்கிறது. கல்யாணம் செய்து விட்டாயேயானால் பிறகு வரவே வராது. ஏன், எப்படி என்றெல்லாம் இடக்காக கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அதெல்லாம் கணவன்மார் ரகசியம். செய்து பார். தன்னால் விளங்கும். வாழ்த்துகள். 

0 comments:

Post a Comment