அவன் இவனும் உவனும்

Posted: Monday, June 20, 2011 | Posted by no-nononsense | Labels:

எச்சரிக்கை: இந்த விமர்சனத்தை படிப்பதால் படத்தில் நீங்கள் இழக்கப்போவது ஒன்றுமில்லை.


Avan%2BIvan%2BSongs%2BDownload.jpg


‘அவன் இவன்’ திரைப்படத்தை நேற்று சேலம் கீர்த்தனாவில் நானும் சுரேஷும் பார்த்தோம். நல்ல கூட்டம். காட்சிகள் ரிசர்வேசனில் போய்க்கொண்டிருந்தன. ஷங்கர் போல பிரம்மாண்டம், கலர்ஃபுல் ஃபாண்டஸி, நூறு கோடி பட்ஜெட் எல்லாம் இல்லாமலே ஒரு இயக்குநரால் இவ்வளவு மக்களை தியேட்டருக்கு கவர்ந்திழுக்க முடிவது தற்கால திரைச்சூழலில் அரிதான ஒன்று.

கதாப்பாத்திர உருவாக்கத்தை (characterization) பொறுத்தவரை வழக்கம் போல பாலா ஒவ்வொரு பாத்திரத்தையும் நேர்த்தியாக செதுக்கியிருக்கிறார். திரையில் அவர்களின் நடிப்பை வியந்து பார்த்துக்கொண்டே இருக்கிறோம். விஷாலுக்கு கூடுதலான மேக்கப்; மற்றும் முக்கியத்துவம். அவரும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு காட்சிக்கு காட்சி கைத்தட்டல் வாங்குகிறார்.


போலவே, ஹைனஸாக வரும் இயக்குநர் ஜி.எம்.குமாருக்கும் நல்ல பாத்திரம். மனிதர் புகுந்து விளையாடியிருக்கிறார். இவருக்குதான் உண்மையில் அவார்டுக்கான வாய்ப்பு இருக்கிறது எனலாம்.

ஆர்யாவுக்கு சிறிது underplay பாத்திரம். அதை அவர் நன்றாகவே செய்துள்ளார்.

இவர்களைத் தவிர படத்தில் வேறு யாருக்கும் பெரிதாக வேலை இல்லை. இரு நாயகர்களுக்கும் ஜோடி தேவை என்பதால் இரு பெண் பாத்திரங்கள் திணிக்கப்பட்டுள்ளன. கதையின் போக்கில் அவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

உண்மையில் படத்தில் கதை என்றே ஒன்று பெரிதாக கிடையாது. Thin line story ஒன்றை இரண்டரை மணிநேர திரைக்கதையாக திரித்து நீட்டிக்க பெரிதாக பிரயத்தனப் பட்டிருக்கிறார்கள். அதற்காக பல இடங்களிலும் சம்மந்தமில்லாத காட்சி செருகல்கள். கதைக்கு துளியும் சம்மந்தமில்லாமல் சூர்யாவின் அகரம் விழா காட்சியை முடிந்தவரை இழுத்து அதில் கால்மணி நேரம் ஓட்டி விடுகிறார்கள். அதுபோல ஒரு கிடாவெட்டு காட்சி! சில போலீஸ் ஸ்டேசன் காட்சிகள்!


துண்டு துக்கடா நகைச்சுவை தோரணங்களாக மட்டுமே அமைந்துவிட்ட திரைக்கதையின் போக்குக்கு சீரியஸ்னெஸ் சேர்க்க வில்லன் என்று ஒருவர் தேவைப்பட்டார் — ஆர்.கே பாத்திரம் திணிக்கப்பட்டது. பார்வையாளர்களிடம் எவ்வித அழுத்தமான உணர்வையும் ஏற்படுத்தாத ஒரு தட்டையான பாத்திர படைப்பு அது.


முக்கால்வாசிக்கும் மேலாக குடியும், கூத்தும், வசன நகைச்சுவையுமாக மட்டுமே படத்தை நகர்த்தியிருக்கிறார்கள். அந்தக் கணத்தில் சிரித்து வைத்தாலும் ஒரு படைப்பாக எடை நிறுத்திப் பார்க்கையில் சராசரிக்கும் கீழேயே மதிப்பிட முடிகிறது. கதையில் லாஜிக் பார்ப்பவர்களாக இருந்தால் நெளிய ஆரம்பத்து விரைவில் அதுவே பழகிவிடும். பாலாவின் படங்களிலேயே மோசமான கதை, திரைக்கதை கொண்ட படம் இதுதான் என்பேன்.


இந்த படத்தை அடுத்து, பாலாவைப்பற்றி எனக்கு ஏற்படும் ஒரு சம்சயம் - பாலா நல்ல திரைப்படம் எடுப்பதை விட்டு விட்டு, போலீஸ் நாய்களுக்கு மோப்பம் பிடிக்க பயிற்சியளிக்கும் பயிற்சியாளரைப் போல, நல்ல நடிகர்களை உருவாக்கித் தரும் ட்ரெய்னராக மாறிவிட்டாரோ என்று கவலை ஏற்படுகிறது.


இணையத்தில் வேறோர் இடத்தில் ஒரு நையாண்டியான விமர்சனம் படித்தேன். விஷால் ஆர்யாவிடம் கெஞ்சலாக, “மச்சி, நான் கடவுள்ல நீ கலக்கிட்டடா! பாலாவிடம் சொல்லி எனக்கும் அதே மாதிரி ஒரு பர்ஃபார்மன்ஸ் பார்சலேய்..!” என்றாராம். உடனே இந்தப் படத்தை துவக்கிவிட்டார்களாம். உண்மையில் அப்படித்தான் இருக்கிறது. விஷாலை நடிப்பில் அடுத்த வெர்சனுக்கு அப்கிரேடு செய்ய எடுக்கப்பட்ட படம் போலவே இதன் உள்ளடக்கம் தோன்றுகிறது.


சூர்யா முன்னால் விஷால் நடிக்கும் நவரச காட்சியை அதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். விஷால் திறமையை காண்பிக்க ஒரு வாய்ப்பு என்பதன்றி வேறு எதற்கும் பயன்படாத காட்சி அது. அவர்களுக்கே அது துறுத்தல் என்று தோன்றிவிட்டது போல.. அதை நியாயப்படுத்த அடுத்த காட்சியில் ஆர்யாவுக்கு ஒரு போதைவசனக்காட்சி வைத்துவிட்டார்கள். சகோதரனை புரிந்துகொண்டு விட்டாராம்.. ஒருமாதிரி பூசி மெழுகுகிறார்கள்.


பாலாவிடம் ரசிகர்களுக்கு என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதை அவர் எல்லா படங்களிலும் நிறைவு செய்வது கடினம்தான். அதற்காக சொதப்பல் படம் தராமலாவது இருக்கலாம். நடிகர்களை உருவாக்கும் வேலையை நிறுத்திக்கொண்டு, நல்ல படைப்பை உருவாக்கும் வேலையை ஆரம்பிக்கலாம். இதன் சில கதாபாத்திரங்களும், காட்சிகளும் அவருடைய பழைய படங்களின் மறுஆக்கமாக இருப்பதை விரிவஞ்சி எழுதாமல் தவிர்க்கிறேன்.


இந்தப் படத்தை முழுமையாக பார்க்க வைக்கும் இரண்டு விஷயங்கள் - நடிப்பும், ஒளிப்பதிவும். அதற்காக வேண்டுமானால் பார்க்கலாம். மாறாக, பாலாவின் முந்தைய படங்களை மனதில் இறுத்தி, ஒரு தரமான படைப்பை எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றமே மிஞ்சும். அந்த வகையில் எனக்கு பெரும் ஏமாற்றமான படமிது.


0 comments:

Post a Comment