என்னை தெரியலையா?

Posted: Sunday, June 12, 2011 | Posted by no-nononsense | Labels:
ஒரு அலுவலாக கடைவீதியிலுள்ள நகைக்கடை ஒன்றில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது வாத்சல்யமாக ஒரு கை கண்ணை பொத்தியது. ‘அட, இன்னும் என்னுடன் கண்ணை பொத்தி விளையாடவும் ஆளுண்டா’ என்று எண்ணியபடி கையை விலக்கிப் பார்த்தால் தெரிந்த முகமாக இருந்தது. ஆனால் பெயர் சட்டென ஞாபகம் வரவில்லை. ‘தெரியலைங்களே..’ என்ற அசடு வழிதலுக்குப் பிறகு அவன் வெங்கட்ராமன் - சௌத் ஸ்கூல் கிளாஸ்மேட் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். ‘அட பயலே, இப்போது ஞாபகம் வந்துவிட்டது’ என்று பிறகு ஷேமநலன்கலை விசாரித்து பேசிக்கொண்டிருந்தேன். ஆனால், அப்போது என் நெஞ்சை அரித்துக் கொண்டிருந்த ஒரு கேள்வி - ‘வெங்கட்ராமன் என்று நினைத்துதானே அன்று ஒருநாள் புரோட்டா கடையில் ஒருவனிடம் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம்... அப்போது அவன் யாராக இருக்கும்?!’.

இது அடிக்கடி எனக்கு நிகழும் ஒரு விஷயமாக இருக்கிறது. எங்கேயாவது யாராவது எதிர்பட்டு, என் பெயரை சரியாக குறிப்பிட்டு என்னுடன் உரையாடுகின்றனர். ஆனால், அவர்களைப் பற்றிய ஞாபகங்களை நான் முற்றிலுமாக இழந்து விட்டிருக்கிறேன். அல்லது மசமசவென்று ஒரு தெளிவில்லாத பிம்பங்களாய் சில விஷயங்கள் நிழலாடுகின்றன. பெயர் என்ன யோசித்தும் நினைவுக்கு வருவதில்லை. ஆரம்பத்தில் நானும் தெரிந்த மாதிரி நடித்து ஹிஹி என்று பேசிக்கொண்டிருந்திருக்கிறேன். இப்பவெல்லாம் நாகரிகமாக ‘மன்னிக்கவும், மறந்துவிட்டேன்’ என்று முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

நேற்றும் அப்படித்தான் - ஒரு அலுமினிய டெகரேசன் வேலையாக ஒருவரைக் காணச் சென்றிருந்தேன். அவர் என் பக்கத்து தெருவில் குடியிருப்பவர் என்பதால் அதை சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளலாமே என்று ‘நான் உங்க வீட்டு பக்கத்துல தாங்க குடியிருக்கேன்..’ என்று ஆரம்பித்து ஆரம்பிக்கும் முன்னாலேயே அவர் புன்னகைத்தவாறு, என் வாழ்க்கை வரலாற்றில் ரகசிய பக்கங்களை தவிர அத்தனையையும் சொல்ல ஆரம்பித்து விட்டார் - ஒரு கைகலப்பில் நானும் என் மாமாவும் இறங்கி பின்னர் கொஞ்சிக் கொண்ட குடும்ப ரகசியம் முதற்கொண்டு!

சமூகத்தை நாம் உதாசீணப்படுத்தி நம் போக்கில் சென்றாலும், மனிதர்கள் நம்மை உற்று கவனித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment