முதுமை

Posted: Sunday, June 12, 2011 | Posted by no-nononsense | Labels:
சில முதியவர்களின் அந்திம கால வாழ்க்கை நிலையை காணும் போது நம் இறுதி காலம் எந்த விதமான கஷ்ட காலத்தை எதிர்நோக்கியுள்ளதோ என்று அச்சமாக உள்ளது. எங்கள் தெருவின் இறுதியில் ஒரு ஆயாம்மா தன்னந்தனியாக வசிக்கிறார். வீடு என்ற பெயரில் இருக்கும் ஒரே ஒரு அறையில்தான் அவர் வாசம். துணைக்கு யாருமில்லை. இவருக்கும் 70+ வயது. முதுமையில் பீடிக்கும் நோய்களை எதிர்கொண்டு, தனக்கான உணவுகளை தானே சமைத்து அவர் வாழும் கோலத்தை பார்த்தபடியே தினமும் கடந்து செல்வது முதுமை காலத்தைப் பற்றி நினைவூட்டியபடியே இருக்கிறது.

இவர் ஒரு காலத்தில் அதே இடத்தில் பண்ணையம் பார்த்து பெரிய வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதுதான் நெஞ்சை தழுவும் வருத்தத்துக்கு காரணம். இவரின் ஒரு மகள் தூக்கு மாட்டி இறந்துவிட்டார். இரண்டு மகன்களில் ஒருவர் விபத்திலும், இன்னொருவர் பெருநோயிலும் இறந்து போயினர். ஒரு பேத்தி மட்டும் தன் சொந்த வாழ்க்கையை பார்த்துக்கொண்டு, ஒரே ஊரில் ஆனால் கண்டு கொள்ளாமல் வாழ்கிறார். இத்தனையும் ஒரு பத்தாண்டுகளில் நடந்து முடிந்துவிட்டன. அவர்கள் எல்லோருக்கும் முன்னால் போயிருக்க வேண்டிய இவர், இன்று தனிமையில் மரணத்தை எதிர்நோக்கி தினமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாழ்க்கையில் இப்படி பல விசித்திரமான ஜீவிதங்களுக்கு எல்லாம் சாட்சியமாக வாழ வேண்டியுள்ளது.

இதேபோல - 3 சின்ன பெண் குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பம் 10*15 சதுர பரப்பிலான குடிசையில் வாழ்வதை தினமும் பார்க்கிறேன். மலஜலம், குளியல் எல்லாமே வீட்டுக்கு(!) வெளியேதான் அவர்கள் அவர்கள் வாழ்க்கையில் சந்தோசமாகவே இருப்பதையும் கவனிக்கிறேன். வாழ்க்கையின் உயரம் எவ்வளவு மேலே கீழே என்ற போதிலும், ஒவ்வொரு நாளும் வாழ்ந்து தானே தீர வேண்டும். அவரவர் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கான விஷயங்களை கண்டுபிடித்துக் கொள்ள வேண்டியதுதான் இதில் பொதிந்துள்ள சூட்சமம்.

0 comments:

Post a Comment