குழலும் யாழும் குரலினில் தொனிக்க

Posted: Wednesday, June 29, 2011 | Posted by no-nononsense | Labels: ,
இன்று மாலை பேருந்தில் ஏறியமர்ந்ததும் மூளையின் ஏதோ ஒரு நியூரானில் சேமிக்கப்பட்டிருந்த இந்தப் பாடலின் ஞாபகத்திற்கு உயிர் வந்துவிட்டது. அப்போதிருந்து முணுமுணுத்துக் கொண்டு இருக்கிறேன்.

யேசுதாஸின் குரல் ஒரு அமானுஷ்யம் போல மனதிற்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

வீடு வந்து அடங்கியதும் இணையத்தில் கிடைக்கிறதா என தேடிப்பார்தேன். இந்த இணையத் தொடர்புதான் எத்தனை அற்புதமான சாதனம்! யாரோ ஓர் அன்பர் வலையேற்றி வைத்திருந்த பாடல் கேட்கக் கிடைத்தது. இதோ கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

“குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!”

http://www.youtube.com/watch?v=c9P-G0ICzbE

திருச்சி வானொலி நிலையத்தின் காலை 6 மணி பக்திமாலையில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்ட இந்தப் பாடல் போல இன்னும் பல பாடல்கள் நினைவில் நீங்கா இடம் பிடித்தவையாக உள்ளன. ஏசு, அரவிந்தர்-அன்னை, அல்லா என்று பல கடவுள்கள் குறித்தும் பாடப்பட்ட அவைகளின் இசையமைப்பும், வரிகளும் என் உணர்வுகளில் கலந்தவை. இன்று போல எப்போதாவது அவைகள் ஞாபகத்திற்கு மீளும் போது உடன் பால்யத்தின் நினைவுகளையும் சுமந்து வந்து நெஞ்சில் பாரம் ஏற்றி வைத்துவிடுகின்றன.

“மலர் போல மலர்கின்றன் மணம் வேண்டும் தாயே
பலர் போற்றிப் பாராட்டும் குணம் வேண்டும் தாயே
வரம் தரும் அன்னையே
வணங்கினோம் உன்னையே”

கங்கை அமரனின் குரலில் ஒலிக்கும் இப்பாடல் சில நாட்களுக்கு முன்னால் ஒரு நள்ளிரவு வேளையில் என்னை தாலாட்டிக்கொண்டிருந்தது. உடன் துண்டு துண்டாய் அக்காலத்தின் அதிகாலைப் பொழுதின் மிச்சம் மீதியான சில நினைவுகளும்...

இவைகள் ஒரு நீண்ட பட்டியலின் இரு உதாரணங்கள் மட்டுமே. இவைகளை நான் வானொலியில் கேட்டது தவிர்த்து வேறு எங்குமே கேட்டதில்லை. இதுபோல் டி.எம்.எஸ்ஸின் பல முருகன் பக்தி பாடல்களும் உள்ளம் உருக வைக்கின்றன. ஏகாந்தமாக வீற்றிருந்து அவற்றைக் கேட்கும் பொழுதுகளில் ஏதோ ஒரு கரம் என் உள்ளங்கையை அழுத்திப் பிடித்து ஆறுதல் சொல்வது போலவே இருக்கிறது. சில நொடிகளாகவது பழைய வீட்டின் சிதிலமடைந்த தாழ்வாரத்தின் கட்டிலில் கண்ணை கசக்கி படுத்துக் கிடந்து பழைய வாழ்க்கையை வாழ்கிறேன்.

உண்மையில் இவைகளில் மனம் லயிக்கக் காரணம் இப்பாடல்கள் தானா? இல்லை, இவைகளில் ஊறிக் கிடக்கும் பால்யத்தின் வாசனையா? சொல்லத் தெரியவில்லை. அனுபவிக்க முடிகிற எல்லாவற்றையும் விவரித்துவிட முடிந்துவிட்டால் மொழியின் தேவை என்றோ முடிந்து போயிருக்கும்.

0 comments:

Post a Comment