2009 - கற்றதும் பெற்றதும்

Posted: Monday, December 28, 2009 | Posted by no-nononsense | Labels:
ஒவ்வொரு வருடமும் வருட இறுதியில் கொஞ்சம் ஆயாசமாக சாய்ந்தமர்ந்து இந்த ஒரு வருடத்தில் நடந்தவைகளை பரிசீலித்துக் கொள்வதையும் திருத்த வாய்ப்புள்ளவைகளை குறித்துக் கொள்வதையும் ஒரு வழக்கமாகவே செய்துவருகிறேன். கேட்பதற்கு சம்பிரதாய செய்கை போல தோன்றலாம். முழுமையாக இல்லாவிடினும், ஓரளவு இதனால் பலனுண்டு என்பதே இதுவரையான என் அனுபவம். நமது நாளையைப் பற்றி எப்போதும் ஒரு திட்டத்துடன் இருப்பது வாழ்க்கையைப் பற்றிய ஒரு குறைந்த பட்ச தெளிவை கொடுக்கிறது. கால் போன போக்கில் விட்டேத்தியாக வாழ்ந்து நிதமும் விதியை நொந்து சோர்ந்தவர்களின் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தால் கிடைக்கும் விடை இதுவாகவே இருக்கும்.

2009 பிறந்தபோது நான் திருச்சியில் வேலையில் இருந்தேன். உறையூரில் மேன்சன் வாழ்க்கை. வாரம் இரண்டு நாட்கள் மட்டும் நாமக்கல் விஜயம். என் பிற்கால வாழ்வில் நான் மிகவும் விரும்பி தேடிய தனிமை எனக்கு அங்கேதான் கிடைத்தது. கிட்டத்தட்ட solitary. இருந்தும் கொண்டாட முடியாதபடி - தத்தி நடக்க ஆரம்பித்து, மழழையில் திக்கி பேச ஆரம்பித்து, ஓய்வாக கிடைப்பது ஒரு அரை நாளாக இருப்பினும், அதையும் கூட அவளுடனே செலவளிக்கும்படி அவளை நோக்கி ஈர்த்துக் கொண்டாள் என் அன்பு மகள். குழந்தையின் இந்த பருவத்தை தவறவிடக்கூடாது என்ற நோக்கில் மூன்று மணி நேரம் பயணம் செய்து அடிக்கடி நாமக்கல் வந்துபோனதில் பயணங்களே வாழ்க்கை என்றாகிப் போனது.

ஒரு கட்டத்தில் திருச்சிக்கே போய்விடலாம் என்று சுந்தர் நகரில் வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்துவிட்ட நிலையில், ரிசசனில் பங்கு சந்தை வீழ்ந்ததினால் ஏற்கெனவே நொண்டியடித்துக் கொண்டிருந்த என் கம்பெனி, dollar hedging-இலும் கை வைத்து நன்றாக சுட்டுக் கொண்ட செய்தி வந்தது. இனி இது நீண்ட நாட்கள் தேறாது என்பது அவர்களின் பேலன்ஸ் ஸீட்டை கவனித்துவரும் யாருக்கும் வெள்ளிடைமலை. திருப்பூர், மதுரை போன்ற சில கிளைகள் மூடப்பட்டு பிங்க் ஸ்லிப் கொடுக்கப்பட்டது வயிற்றில் புளியைக் கரைத்தது. பயந்தபடி ஒரு நாள் திருச்சி கிளையும் மூடப்பட்டது.

எனினும், ஒரே கம்பெனியில் ஆறு வருடங்கள் பணியாற்றியதன் ஆகப்பெரும்பயனாக எனக்கு வேலை போகவில்லை. ஆனால், சென்னை கார்ப்போரேட் ஆபீஸுக்கு மாறிக் கொள்ளும்படி கேட்க ஆரம்பித்தார்கள். சென்னை என்ற பெயரைக் கேட்டதும் வேப்ப எண்ணையாக கசந்தது. ஓரிரு நாட்களுக்கு மேல் சென்னையை ரசிக்க கொண்டாட சென்னைக்கு வெளியே பிறந்தவர்களால் முடியாது. குறைந்த பட்சம் என்னால் முடியவில்லை. மதுரை, சேலம் பிறகு திருச்சி என்று சற்றே பெரிய ஊர்களில் இதற்குமுன் வாசம் செய்திருக்கிறேன். சொந்த ஊர் இல்லை என்பது தவிர, ஒருநாளும் அவை மாறுபாடாக தெரிந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் நாமக்கல்லுக்கு அடுத்து திருச்சி எனக்கு ரொம்ப பிடித்த ஊராகிப் போனது. மாறாக வேலை, பயணம், பிழைத்தல் என்று எல்லா அம்சங்களிலும் சென்னை வாழ்க்கையை பெருமளவு இயந்திரத்தனமானதாகவும், பிரயத்தனங்கள் நிறைந்ததாகவும் கருதுகிறேன். சென்னை, பணம் இருப்பவனின் சொர்க்கம்; பணத்தை துரத்துபவனின் நரகம். எனவே மாறுதலுக்கு மறுப்பு தெரிவித்துவிட்டேன்.

சரியாக அதே நேரத்தில் கரூரிலிருந்து வேலை வாய்ப்பு ஒன்று கதவைத் தட்டியது. பல வருடங்கள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுவதால் அதனுடன் உண்டாகும் பிணைப்பு(bond) எளிதில் விடுவித்துக் கொள்ள இயலாதது. இதைவிட்டு போனால் எதிர்காலம் என்னாகுமோ என்று கழுத்துக்கு மேலே எப்போதும் கத்தி தொங்குவது போல ஒரு உணர்வு உறுத்தும். வேலை மாறுவதும் ஒரு விதத்தில் சாகசம் தான். தற்கால இந்தியச் சூழலில் அதற்கு நிறைய துணிபு தேவைப்படுகிறது. ஒருவேளை புதிய வேலை சரிவரவில்லை எனில் செய்ய ஏதுவாக ஒரு மாற்றை கையில் வைத்துக் கொள்ளாமல் துணியக் கூடாது. அப்படி ஒரு மாற்று தொழிலை ஏற்பாடு செய்து கொண்ட பின்பே கம்பெனி மாறினேன். (பேசாமல் துணிந்து அந்த தொழிலிலேயே இறங்கியிருக்கலாம் என்று இப்போது தோன்றுவது மனித மனதின் oxymoron)

இது நடந்து இப்போது ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. இன்றுவரை வியாபாரத்தில் ஏற்படும் சிற்சில சுணக்கங்கள் தவிர புதிய வேலை பிரச்னை இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. சீரான சாலையில் ஒரு மணி நேர பயணமே என்பதால், நாமக்கல்லை விட்டு நீங்க வேண்டிய அவசியமும் இல்லை. வேலையைப் பற்றிய ஒரு நிச்சயமின்மையுடன் துவங்கிய 2009, எனக்கு நல்லதொரு வேலையை கொடுத்திருக்கிறது. இருப்பினும், சுய தொழில் செய்ய வேண்டும் என்னும் என் கனவு மாற்றமில்லாமல் தொடர்கிறது.

குழந்தை பேசி விளையாட ஆரம்பித்த பிறகு தனிப்பட்ட வாழ்க்கையில் முன் எப்போதையும்விட சந்தோசங்கள் கூடியிருக்கின்றன. அடுத்த வருடம் பள்ளியில் சேர்க்க வேண்டும். இன்னும் சில தனிப்பட்ட குடும்ப பொறுப்புகள் தோளேற காத்திருக்கின்றன.

அடிப்படையில் நான் ஒரு introvert. இருந்தும் நண்பர்கள் கூடி வருகிறார்கள். அதனால் வாழ்க்கையும் கூட நிறம்கூடி தெரிகிறது. அதேசமயம் படிக்க சுகிக்க கிடைத்துவந்த நேரம் சுருங்கிவிட்டது. எண்ணிப் பார்க்கையில் உருப்படியாக படித்த மொத்த புத்தகங்களின் எண்ணிக்கை இரண்டு கை விரல்களைக் கூட தாண்டாது. படித்ததில் பொ.வேல்சாமியின் “பொற்காலங்களும் இருண்ட காலங்களும்” மிக முக்கியமானது. கவிதாசரணில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகிய இந்நூல் ஆழ்ந்தாய்தளிக்கும் கருத்துக்கள் அறிவுதளத்தில் வைத்து விவாதிக்க உகந்தவை. இலக்கிய விமர்சக தளத்தில் மதிப்பு மிக்க பொ. வேல்சாமி நாமக்கலில்தான் குடியிருக்கிறார். ஆனால் இன்றுவரை அவரைப் போய் சந்திக்க முயலவில்லை என்பது என் மேல் எனக்கேயுள்ள கோபம். இதற்கு முன் சில எழுத்தாளர்களை சந்தித்தது அவர்கள் எழுத்துக்களைப் போல் உவப்பாக இல்லாததால் ஏற்பட்ட மனத்தடை இன்னும் நீடிக்கிறது.

ஆங்கிலத்தில் படித்ததில் best narrative novel என்று புகழப்படும் ’Papillon" என்னை, என் சிந்தையை, என்னுடைய எல்லா ஓய்வு நேரங்களையும் சில மாதங்களுக்கு வெகுவாக ஆக்கிரமித்துக் கொண்டது. ஒரு பழைய புத்தகக் கடையில் 12 ரூபாய்க்கு வாங்கிய இதனை பாதி படித்த நிலையில் ஒரு பஸ் பயணத்தில் தொலைத்துவிட்டு, பிறகு எத்தனை நூறு ரூபாய் ஆனாலும் எங்கே கிடைத்தாலும் வாங்க தயாராக இருந்தேன். அதிர்ஷ்டவசமாக அதன் ebook இணையத்தில் கிடைத்தது. பத்து பத்து பக்கமாக பிரிண்ட் எடுத்து படித்துமுடித்தேன். இனியும் பலமுறை மீள்வாசிப்பு செய்வேன் என்றே தோன்றுகிறது. அந்தளவு ஒரு adventurous நாவல். தமிழில் இதன் மொழிபெயர்ப்பு “பட்டாம்பூச்சி’ என்ற பெயரில் ரா.கி.ரங்கராஜனால் எழுதப்பட்டு இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் குமுதத்தில் தொடராக வெளிவந்தது. இதன் டிவிடியை டோரண்ட்களில் தேடி எடுத்தேன். ஆனால் நாவல் அளித்த வாசிப்பனுபவத்தை அதன் காட்சிப் படமோ அல்லது இதன் sequel ஆன “Banco" -வோ அளிக்கவில்லை.

சேகரித்து வைத்திருக்கும் சில நல்மாணிக்கங்கள் இன்னும் புரட்டப்படாமலே கிடக்கின்றன. அடுத்த மூன்று மாதங்களில் படித்து முடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

”The Shawshank Redemption” உள்ளிட்ட சில கிளாஸிக்குகள், டோரண்ட்களில் கிடைக்கும் Kim -ki-duk இன் சில படங்கள் ஆகியவற்றை பார்க்க சேர்த்துவைத்து கைபடாமலே கிடக்கின்றன. இந்த நான்கு நாள் விடுமுறையில் சிலவற்றை பார்த்துமுடித்தேன். மற்றவற்றையும் அடுத்துவரும் மூன்று நாள் விடுமுறையில் பார்த்துவிட எண்ணுகிறேன். நண்பர் ஒருவர் பலமாக சிபாரிசு செய்யும் சில ஈரானிய சினிமாக்கள் இப்போதே கவனத்தை கவர்கின்றன. இம்மாதிரி சில Connoisseur-களின் சங்காத்தம் கிடைத்ததிலிருந்து வாழ்க்கையில் ரசனையின் வீச்சு கூடியிருக்கிறது. ஈடு கொடுக்கத்தான் முடியவில்லை. பாற்கடலை நக்கி குடிக்க நினைக்கும் பூனையின் நிலையில் நிற்கிறேன். எல்லாவற்றையும் அறிந்து அனுபவித்திட மனம் துடித்திட்டாலும் இந்த ஜென்மத்தில் முடியாது.

அலுவலகம் சார்ந்த பயணங்களைத் தவிர வேறு தனிப்பட்ட பயணம் எதுவும் மேற்கொள்ளாதது இந்த வருடத்தின் பெரும் குறை — எனக்கு மட்டுமல்ல என் குடும்பத்தினருக்கும். (இதில் பழநிக்கு மொட்டை போட போனதெல்லாம் கணக்கில் வராது). அதை அடுத்த வருடத்திலாவது நிவர்த்தி செய்ய வேண்டும்.

2000-ம் புத்தாண்டு அன்று சிகரெட் பழக்கத்தை விட்டு விடுவதாக புத்தாண்டு சங்கல்பம்(resolution) எடுத்துக் கொண்டேன். அத்துடன் விட்டும் விட்டேன். அதற்கு பிறகு அதுபோன்ற மனதை உறுத்தும் பெரும் பழக்கம் எதுவும் இன்றுவரை கிடையாது என்பதால், சங்கல்பத்திற்கு தேவை ஏற்பட்டதில்லை. ஆனால் ஒவ்வொரு வருடமும் இந்த வருடமாவது நாள் தவறாமல் ஒழுங்காக டைரி எழுத வேண்டும் என்று நினைப்பேன். 1998-க்கு பிறகு அது சாத்தியப்படவே இல்லை. ஒரு பத்து நாள் எழுதுவதோடு சோம்பேறித்தனம் கவ்விக் கொள்கிறது. எனக்கு பயன்படும் என்று பல வருடங்களாக எனக்கு புத்தாண்டு பரிசாக டைரி கொடுத்துவருகிறான் நண்பன் மணிகண்டன். அவனுக்காகவாவது எழுத வேண்டும்.

முக்கியமாக வரும் ஆண்டில் இருக்கும் பழைய வீட்டை புதுபித்துக் கொள்ள எண்ணியிருக்கிறேன். அதை முன்வைத்தே கடுமையாக உழைத்தும் வருகிறேன். பங்கு சந்தையில் புழங்குவதன் ஒரு சௌகரியம் சில முதலீட்டு வாய்ப்புகளை முதலில் நாம் அறிந்து கொள்ள முடிவது. அப்படி சிலவற்றை பயன்படுத்திக் கொண்டதில் கணிசமான லாபம் கிடைத்தது. என் சிறிய முதலீட்டை கொஞ்சம் பெருக்கவும் முடிந்தது. அதுபோல இன்னும் சில வாய்ப்புகள் கிடைத்தால் என் புது வீடு கனவு நிஜமாகும். உறு மீனுக்காக காத்திருக்கிறேன்.

இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க நிகழ்வாக நான் கருதுவது — இங்கே உங்கள் அனைவருடன் எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த தொடர்புகள்; அதன் காரணமாக புதுப்பிக்கப்பட்டிருக்கும் சில நட்புகள். அதற்கு வித்திட்ட பாலகுமார், சிங்காரவேலுக்கு நன்றி. குறிப்பாக தனி மடல்களில் மட்டும் உரையாடிக் கொண்டிருந்த என்னை இந்த பொதுதளத்திற்கு இழுத்துவந்து நிறைய எழுத வைத்து விட்டான் பாலா. இந்த குழுவை ஆக்டிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் உரையாட ஆரம்பித்து, பல வருடங்கள் விட்டு போயிருந்த எழுத்து மீண்டும் என்னை ஆகர்ஷித்துக் கொண்டுவிட்டது. எனினும் எப்போதும் நான் அடிப்படையில் வாசகன் மட்டுமே. அதை மேல்தாண்டிவரும் தகுதியை இன்னும் அடையவில்லை. எனக்கு ஆர்வமும் கொஞ்சம் அறிதலும் இருக்கும் துறைகள் அரசியல், மதம், கலை, இலக்கியம், சமூகம், வரலாறு. இவற்றைத் தவிர எனக்கு நிர்தாட்சண்யமாக தெரியாத விஷயங்கள் எதிலும் நான் கருத்து தெரிவிப்பதில்லை. மேலதிகமாக மேற்கண்டவையே இங்கு அடிக்கடி விவாதப் பொருள் ஆகிவருவதால் என் பங்களிப்பு மிகுதியாக தெரிகிறது. பிழை இருப்பின் பொறுப்பீராக!

இன்னும் சில மாதங்களுக்கு சில அலுவலக துறைசார் கல்விகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள இருப்பதால் இப்போது போல இனி அடிக்கடி இங்கே உரையாடல்களில் பங்கெடுத்துக் கொள்ள முடியாமல் போகலாம். எனினும் முடிந்தவரை தொடர்பில் இருக்க முயற்சிக்கிறேன்.

அனைவருக்கும் முன்கூட்டிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

0 comments:

Post a Comment