கழைக்கூத்து

Posted: Monday, December 7, 2009 | Posted by no-nononsense | Labels: ,
”வயிற்றுக்காக மனுசன் இங்கே
கயிற்றில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சி இறங்கி வந்தா
அப்புறந்தாண்டா சோறு..”

நல்லநேரம் திரைப்படத்தில் எம்ஜிஆர் கழைக்கூத்தாடியபடி ஆடிப்பாடும் இப்பாடல் என் குழந்தைக்கு ரொம்பப் பிடிக்கும். அதில் வரும் யானைகள் காட்டும் வித்தையையும் நாகேஷின் சேஷ்டைகளைக் காட்டி பமுறை சோறு ஊட்டியிருக்கிறோம்.

குழந்தைகளுக்கு மட்டுமா, கழைக்கூத்து நமக்கும் கூட பிரமிப்பைத் தரவல்லது. கயிற்றில் பேலன்ஸ் செய்து நடப்பதும், சிறிய வளையம் ஒன்றில் இருவர் உள்ளேச் சென்று வெளியே வருவதும் எல்லோராலும் எளிதில் செய்யக் கூடிய காரியம் அல்ல. எனக்கு இதைப் பார்க்கும்போதெல்லாம் இப்படி கஷ்டபட்டு வித்தைக் காட்டி தட்டு நீட்டி எவ்வளவுதான் இவர்களெல்லாம் சம்பாதித்துவிட முடியும் என்று ஆச்சரியமாக இருக்கும். காரணம், பார்க்கும்வரை நன்றாகப் பார்த்துவிட்டு காசுக்குத் தட்டு நீட்டப்படுவது தெரிந்ததும் கம்பி நீட்டிவிடும் ஆட்கள்தான் நம்மில் அதிகம். இதைவிட ரோட்டோரம் ஒரு சலூன் கடை போட்டாலும் கூட நன்றாக பிழைக்க முடியும்.

இந்த மாதிரி கழைக்கூத்தாடிகளை நான் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். வடக்கத்திய சாயல் படிந்த முகங்களே பெரும்பாலும் தென்படும். அவர்களிடம் கம்பி வளையத்தில் புகுந்து வெளிவர என்றே ஐந்து வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று நிச்சயம் இருக்கும். இதற்காகவே பெற்றுக் கொள்வார்களோ என்று கூட சமயத்தில் தோன்றும். ஊர் ஊராகச் சென்று கும்பல் கூடும் இடங்களில் வித்தை காட்டி பிழைப்பதே இவர்களின் வாழ்க்கைமுறை என்று நினைக்கிறேன்.

இவர்களிடம் ஒரு நேர்மை இருக்கிறது. தங்களை வருத்திக்கொள்வதன் மூலம் பார்வையாளர்களுக்கு பிரமிப்பைத் தந்து பணம் பெறுகிறார்கள். எந்த பயமுறுத்தலும், வற்புறுத்தலும் இல்லை. ஆனால் வேறு சில வித்தைகாட்டிகள் இருக்கிறார்கள். அதாவது கண்கட்டு வித்தை; மோடி மஸ்தான் வேலை. பாம்புக்கும் கீறிக்கும் சண்டை விடுறேன் என்று சொல்லிக் கொண்டே இருப்பான். விடவே மட்டான். ஓர் ஆளைப் படுக்க வைத்து போர்வையால் மூடி வெளியே கூட்டத்தில் இருப்பவர்களின் சட்டைப் பையில் இருப்பதையெல்லாம் சரியாக சொல்ல வைப்பான். எல்லாமே செட்டப் என்பது தெரியாதவாறு நம் கவனத்தை அவன் பேச்சில் கட்டி வைத்திருப்பான். பணம் தராமல் செல்பவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள் என்று பயமுறுத்துவான். திரைப்படத்தில் தற்சமயம் நகைச்சுவைக்காக வைக்கப்படும் இக்காட்சிகள் நிஜத்திலும் நடந்தவைதான்.

இம்மாதிரி கும்பல் ஒன்றால் பல நாட்கள் நான் பேஸ்தடித்து பயந்து கிடந்த அனுபவம் ஒன்று உண்டு.

சரியாக நினைவில்லை, ஆறாவதிலிருந்து எட்டாவதற்குள் இருக்கலாம். கோட்டை ஸ்கூலின் பின்புறம் நேதாஜி சிலை அருகில் ஒருநாள் மதிய இடைவேளையில் நானும் ராஜன்பாபுவும் எதற்கோ திரிந்து கொண்டிருந்தோம். ஓரிடத்தில் கும்பலாக இருக்கவும் வழக்கம்போல் சென்று எட்டிப் பார்த்தோம். ஒருத்தன் மோடி மஸ்தான் வித்தைக் காட்டிக் கொண்டிருந்தான். அடிக்கடி ’சைத்தான்’ கலந்து பேசிய அவன் குரலே கரகரவென்று அச்சம் தருவதாக இருந்தது. ஒரு பையனை கீழேப் படுக்க வைத்து போர்வையால் மூடி நீண்ட நேரம் கூட்டத்தை நோக்கிப் பேசிக் கொண்டிருந்தவன், ஒரு கண நேரத்தில் சரேலென்று கத்தியை கீழே கிடந்தவனின் வயிற்றில் பாய்ச்சினான். போர்வையின் மேற்பரப்பில் ரத்தம் கசிந்தது சிவப்பாக தெரிந்தது. என்னென்னவோ பேசியபடி மீண்டும் அவன் கத்தியை உருவியபோது குடல் அதனோடு ஒட்டிக் கொண்டு வெளியே வந்தது. பயந்து அலறியடித்து ஓடி வந்து விட்டோம். அதற்கும் பிறகும் பல நாட்கள் அக்காட்சி கண் முன்னால் வந்து பீதியைக் கிளப்பியபடியே இருந்தது என்னால் என்றும் மறக்க முடியாதது. சமீபகாலமாக இம்மாதிரி ஆட்கள் யாரையும் காண முடியவில்லை. அநேகமாக எல்லோரும் அரசியலில் புகுந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன் :-)

சனிகிழமையன்று திருச்செங்கோடு ரோடு - சேலம் ரோடு முனையில் நான் கண்ட ஓர் காட்சிதான் இன்று என் சிந்தனையை இவர்களைச் சுற்றிச் சுழல வைக்கிறது. ஒரு நீண்ட சற்றே மொத்தமான மூங்கில் கழியில் ஏறி பேலன்ஸ் செய்தபடி ஒரு மனிதன் நிற்பதையும், பிறகு குதித்து குதித்து செல்வதையும், அவனைச் சார்ந்த பெண்ணொருவர் ஒரு கையில் குழந்தை மற்றும் இன்னொரு கையில் தட்டுடனும் பணம் கேட்டு அலைவதையும் கண்டேன். எங்கே பேலன்ஸ் தவறி விழுந்து விடுவாரோ என்று பார்ப்பவர் மனம் பதறும்படி குச்சியில் நிற்கும் அம்மனிதனை ஒட்டி உரசியபடியே கனரக வாகனங்கள் கடந்து சென்றவண்ணம் இருந்தன. வித்தைகள் பலவகை என்றால் இது ஒரு வகை போலும்.

மீண்டும் மீண்டும் என்னைக் குடைவது இந்த ஒரு கேள்விதான் - கொஞ்சமாக தட்டில் விழும் சில்லறைக்காகவா இவ்வளவு ரிஸ்க்? வேறு எந்த வேலைக்குச் சென்றாலும் இதைவிட அதிகம் சம்பாதிக்க முடியுமே?

அடுத்தமுறை சந்தர்ப்பம் கிடைத்தால் கேட்க வேண்டும்.

அக்காட்சியின் வீடியோ: http://www.dailymotion.com/video/xbem1w_pole-player-at-namakkal_creation
புகைப்படம்: http://i45.tinypic.com/fmjvdf.jpg

0 comments:

Post a Comment