நாமக்கல் கலெக்டரின் பணிகளில் பங்கெடுத்தல் - ஓர் பார்வை

Posted: Wednesday, December 9, 2009 | Posted by no-nononsense | Labels: ,
My viewpoints on helping collectors initiatives by funding it and so on:

ஊருக்கு உபகாரம் செய்ய ஒருவர் இருக்கிறார் என்றதும் அவருக்கு தோள் கொடுக்க ஓடோடி வரும் நல்லுள்ளங்களுக்கு என் வந்தனங்கள். இக்கடிதத்தை படித்ததிலிருந்து நாமக்கல் கலெக்டர் தேசத்தின் எல்லைகளைத் தாண்டியும் கூட செய்தியாகி இருக்கிறார் என்பது தெரிகிறது. நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு பெய்யென பெய்யும் மழை என்பது இதுதானோ?!

நிற்க. நீங்கள் துவங்க நினைக்கும் இயக்கத்தின் முதன்மை நோக்கம் என்ன என்பது முதலில் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் கடிதத்தின் தொனியில் இருந்து அது — கலெக்டர் அவர்களின் நற்பணிகளுக்கு துணை நிற்பது மற்றும் கலெக்டர் அவர்களின் பணிக்கு இடமாற்றம் நேராமல் காப்பது — என்பதாக உங்களின் வார்த்தைகளின் வாயிலாகவே அறிகிறேன். அப்படியாகின், இவற்றில் கலெக்டர் இடமாற்றம் ஆகாமல் காப்பது என்பது எந்த விதத்திலும் சாத்தியமில்லை என்பதுவே நடைமுறை யதார்த்தம். நல்ல கலெக்டர்களை / காவல்துறை அதிகாரிகளை கழக ஆட்சிகள் ரொம்ப நாட்கள் பணியில் நீடிக்க அனுமதித்ததில்லை. ஏதாவது வாரியப் பணிக்கு தூக்கியடித்து விடுவார்கள். அதுவும் நம் ஊரிலுள்ளது போன்ற ஆதிக்கமும், செல்வாக்கும், அதிகாரமும் நிறைந்த மத்திய அமைச்சர் உள்ள மாவட்டத்தில், எந்த நல்ல கலெக்டருக்கும் ஆயுசு அல்பம்தான். மாநில அரசால் மேற்கொள்ளப்படும் கலெக்டர்களின் இடம் மாறுதலை தடுத்து நிறுத்த நீதிமன்றங்களுக்கே அதிகாரம் கிடையாது எனும்போது, நம்மால் மட்டும் என்ன செய்துவிட முடியும்? கொஞ்சம் பேர் கூட்டம் கூடி கோஷம் போடலாம். அல்லது முதல்வரின் தனி செல்லுக்கு பெட்டிஷன் போடலாம். அடுத்தநாள் பத்திரிக்கைகளில் பெட்டி செய்தியாக அது வெளியாவது மட்டுமே நாம் காணப்போகும் பலனாக இருக்கும்.

அடுத்தது, கலெக்டரின் சமுதாயப் பணிகளுக்கு நம்மாலான உதவிகளை நல்குவது.

ஒரு கலெக்டரின் அதிகாரத்திற்குட்பட்டுத்தான் மாவட்டத்தின் அனைத்து முக்கிய நிர்வாகங்களும் நடைபெறுகின்றன (இதனுடன் இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தைக் காண்க). இத்தகு வானளாவிய அதிகாரம் கொண்ட கலெக்டர், தன் அதிகார எல்லைகளுக்கு உட்பட்டு தானே பல சிறப்பான காரியங்களைச் செய்ய முடியும். அதைத்தான் சகாயம் போன்ற சிறப்பாக ‘செயல்படும்’ கலெக்டர்களும் செய்கிறார்கள். பெயரும் கிடைக்கிறது. என்றாலும், இவர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் திட்டங்களில் நம்மாலியன்றவரை நாமும் துணை நிற்கலாம் என்று தன்னார்வத்துடன் முன்வருவது நல்ல விசயம் தான். மாற்று கருத்தே இல்லை. ஆனால் அவர்கள் முன்னெடுக்கும் திட்டங்களின் ஆயுசு, அவர்களின் பதவி காலத்தைப் போலவே குறுகியதாக இருப்பதையே நாம் இதுவரைக் கண்டுவருகிறோம்.

சில காலம் முன்பு ஜூவியில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. கலெக்டர், எஸ்பி போன்ற மாவட்டத்தின் முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்படும் அதிகாரிகள் தங்கள் பதவிகாலத்தில் தனிச்சிறப்புடன் செயல்படுத்திய திட்டங்கள், அவர்கள் மாறுதலாகிய பிறகு எவ்வாறு நலிவடைகின்றன என்பதுதான் அக்கட்டுரையின் சாராம்சம். அவர்களுக்கு பின்னர் பதவிக்கு வருபவர் தன் பெயர் பிரபலமடையும் வகையில் தன்போக்கில் தனியாக திட்டங்களை வகுத்துக் கொள்கிறாரே தவிர, தனக்கு முன்னாள் பதவியிலிருந்தவர்கள் செயல்படுத்திய திட்டங்களின் மேல் ஆர்வம் காட்டுவதில்லை என்பது அக்கட்டுரையின் கருத்து. ஒருவேளை நாளை இந்த கலெக்டர் மாறுதலாகிறார் என்றே வைத்துக் கொள்வோம், அப்பொழுதும் இவர் உதவியுடன் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்கள் தங்கு தடையின்றி தொடருமா? தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உதவி அதற்கு கிடைக்குமா? - என்பதெல்லாம் அதிகாரிகளின் பின்னால் அணிவகுப்பதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்கள்.

மேலும், கலெக்டரிடம் பேசியதன் சாராம்சமாக குறிப்பிடப்படும் விசயங்களில்,

>> 1 ) கிராமங்களின் முன்னேற்றம்
2 ) நகரமயமாக்களை தடுத்து கிராமங்களை அழகிய கிராமங்களாகவே இருக்க விடுவது - நகரத்தின் வசதிகளை கிராமங்களுக்கு கொண்டு செல்வது <<


நாற்பது வருடங்களுக்கு முன், அதாவது 1961 இல் நாமக்கல் மக்கள் தொகை 8.9 லட்சம். 2001 கணக்கெடுப்பின்படி 15 லட்சம். கிட்டத்தட்ட இருமடங்கு. அதற்கு பிறகு இப்பொழுது 9 வருடங்கள் கடந்திருக்கிறது. தொகையில் இன்னும் சில லட்சங்கள் கூடி இருக்கும். இங்ஙனம் வளர்ந்து வரும் மக்கள் பெருக்கத்தினிடையே கிராமங்கள் நகரமயமாதல் என்பது தவிர்க்க இயலாதது. இந்நிலையில் ’நகரமயமாதலை தடுத்தல்’ என்பது இங்கே என்ன பொருளில் கூறப்படுகிறது என்பது குறித்து விளக்கம் தேவைப்படுகிறது.

சொல்லப் போனால் நாமக்கல் இன்னும் கூட விரிவடைய வேண்டியுள்ளது. அவ்வளவு போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தினமும் ஆளாகி வருகிறோம். ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த அதே சாலை வசதி. ஆனால் இரு மடங்காகி நிற்கும் மக்கள் தொகை. அத்தனை பேரிடமும் ஆளுக்கொரு டூ வீலர். பஸ் ஸ்டாண்டை இடம் மாற்றுவதும், ரிங் ரோடு அமைப்பதும் உடனடி தேவை. அப்போது தான் நகரம் இன்னும் விரிவடைந்து இன்று இருக்கும் deadly traffic குறையும். ஊரில் வாழ்பவர்களுக்கு நான் சொல்வது நன்கு புரியும்.

நகரத்தின் வசதிகளை கிராமங்களுக்கு கொண்டு செல்வது என்பது, சாலை போடுதல். பள்ளிகள் கட்டுதல், மருத்துவ வசதி உண்டாக்கித் தருதல் போன்ற அதன் அடிப்படை வசதிகளை முதலில் நிறைவு செய்வதாக இருக்கும். அதாவது கிராமங்களை தத்தெடுத்தல் என்றும் இதனைக் குறிப்பிடலாம். இதற்கெல்லாம் பெரும் நிதியும், அரசு அனுமதியும் தேவைப்படும். அரசு அனுமதி வாங்கி விடலாம். பெரும் நிதி சுமையை தாங்கும் அளவிற்கு இந்த இயக்கம் பெருமளவு கொடையாளர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.

>> நீர்நிலைகளை சுத்தப்படுத்தி நீர் வளம் பெருக்குதல் <<


ஏரி குளம் குட்டைகளை தூர் வாற ஒவ்வொரு நிதியாண்டும் நிறைய பணம் ஒதுக்கப்படுகிறது. அத்தனையும் வேலை நடந்ததாக கணக்குக் காட்டி ஏப்பம் விடப்படுகின்றன. குறிப்பாக ஊராட்சி தலைவர்களின் முக்கிய வருமானமே இது தான். என்னுடைய நண்பன் ஒருவன் ஊராட்சி தலைவராக ஆன உடனே அவன் செய்த முதல் காரியமே ஒரு புக்ளின் வாகனம் வாங்கியதுதான். அதனால் ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவிடப்பட்டாலே இக்குறை நீங்கும் என்பதால் கலெக்டர் தான் இதில் கவனம் கொள்ள வேண்டும்.

நீர்நிலைகளை தூர் வாறுவதில் நாம் எவ்விதம் உதவ முடியும்? அரசாங்கத்தைப் போலவே நாமும் நிதியளிக்கலாம் அல்லது நாமே களத்தில் இறங்கி தூர் வாறலாம். ஆனால் இது ஏதோ ஒருமுறை மட்டும் செய்து விட்டு விட்டுவிடும் விசயம் அல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அதற்கு பதில், நீர்வளம் பெருக மழைநீர் சேகரிப்பு மிக அவசியம் என்பது குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தலாம். கண்காணித்து வரலாம். பயன் இருக்கும். (இதுபற்றி முன்பு இண்டியன் எஸ்பிரஸில் ஒரு அருமையான கட்டுரைப் படித்தேன். ராஜஸ்தானில் நிலத்தடி நீர் வரண்டு போன ஒரு கிராமத்தை மழைநீர் சேகரிப்பின் மூலம் எப்படி மீட்டெடுத்தார்கள் என்பது குறித்து விரிவாக எழுதப்பட்ட கட்டுரை. தேடிப் பார்க்க வேண்டும்)

>> கழிவறை திட்டம் <<

பயனுள்ள யோசனை

>> விளையாட்டு துறையில் சிறந்த இடத்தை அடைவது <<


இன்னும் இரண்டு கலெக்டர் இவர் போல வந்தாலும் நாமக்கல்லில் உள்ள இளைஞர்கள் விளையாட என்று ஒரு பொது மைதானம் அமையாது போலிருக்கிறது. இருக்கும் ஒரே ஒரு சவுத் ஸ்கூல் கிரவுண்டிலும் பெரும்பாலான நாட்களில் விளையாட அனுமதி கிடையாது. முதலில் விளையாட இடம் தேவை. பிறகு விளையாட்டு துறையில் சிறந்த இடத்தை அடைவதைப் பற்றி யோசிக்கலாம். இதற்கு கலெக்டர் தான் ஆவண செய்ய வேண்டும்.

>> காடு வளர்ப்பு மற்றும் மரங்கள் நடுவது <<

இதுவும் நல்ல யோசனை. பொறுப்பேற்று பராமரித்து வரக் கூடிய சாத்தியக்கூறு கொண்டது.

மற்ற யோசனைகளில் கிராமங்களில் கணினி என்பது மட்டுமே பரிசீலனைக்கு உகந்தது என்பது என் கருத்து. வார இறுதிகளில் கிராமங்களுக்குச் சென்று அங்கேயுள்ளவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கலாம்.

ஒரு மாவட்டத்தின் முழு அதிகாரத்தை கையில் வைத்துள்ள கலெக்டரால் இந்த லிஸ்டில் உள்ள அளவுக்கு பரந்துபட்ட காரியங்களில் ஈடுபட முடியும். அதுதான் அவரது அன்றாட வேலையும் கூட. ஆனால் ஒரு தன்னார்வ இயக்கத்தால் இவற்றில் ஏதாவது சிலவற்றில் மட்டுமே கவனம் கொள்ள முடியும் என்பது என் கருத்து. அது எதுவென இனம் காணுவது மிக முக்கியம்.

அரசுடன் / கலெக்டருடன் இணைந்து செயல்படும் தன்னார்வ குழுக்களை அவர்கள் எப்படி பயன்படுத்திக் கொள்வார்கள் என்றால், மரம் நடு விழாக்கள் நடத்தினால் நாமும் அங்கே மரக்கன்றுகளுடன் சென்று பங்கு பெற வேண்டும். போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு அவர்கள் போய் விடுவார்கள். பிறகு நட்டு பராமரித்து வருவது அனைத்தும் நம் முயற்சி தான். மேலும், மாதிரி கிராமத் திட்டப் பணிகளில் அரசு அதிகாரிகளுக்கு அடிபொடியாக இருக்க அழைப்பார்கள் (மாதிரி கிராம பணிகள் என்பது என்ன என்று அறிந்து கொள்ள இங்கே சுட்டுங்கள்: http://tinypaste.com/b4429). இதுபோலத்தான் அரசுடன் இணைந்து செயல்படும் தன்னார்வ குழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதுவும் பெரும்பாலும் அவர்களின் வேலை நேரமாகிய வார நாட்களில் தான் இம்மாதிரி திட்டப்பணிகள் நடைபெறும். அதில் என்னைப் போன்ற தனியார் நிறுவன ஊழியர்கள் பங்குபெறுவது சாத்தியமில்லை.

சுருக்கமாக என் கருத்து என்னவென்றால், சகாயம், நாமக்கல் கலெக்டராக இருக்கும்வரை அவர் பணியை அவர் செய்யட்டும். நாம் நம் ஊருக்கு செய்ய வேண்டுமென்று நினைப்பதை உரிய செயல்திட்டங்கள் வகுத்துக் கொண்டு நாமே செவ்வன செய்யலாம். அரசு இயந்திரத்தை நம்பி அதன் பின்னால் செல்வது நம் ஊரைப் பொறுத்தவரை நல்ல வழி அல்ல என்பது என் கருத்து. நல்ல நோக்கத்திற்காக செலவழிக்கப்படும் பணமும், நேரமும், உழைப்பும் இறுதியில் விழலுக்கு இறைத்த நீராக ஆகிவிடக் கூடாது என்பது இக்கருத்தின் பின்னுள்ள என் கரிசனை.

நவலடி, நீ என்னிடம் பேச நினைத்தது இதுபற்றித்தான் என்பது என் யூகம். அவரின் கடிதத்தைப் படித்ததும் எனக்கு தோன்றிய கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். மற்றபடி ஆர்வத்தை தடை செய்வது என் நோக்கமல்ல. உங்களின் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

*

நண்பர் ஒருவரின் கருத்துக்கு என் மறுமொழி:

சிங்காரவேலு,

நாமக்கல்லில் பாப்பு ரெட்டியார் அறக்கட்டளை என்று ஒன்று செயல்படுகிறது. ஊரறிந்த பணக்காரர் ஒருவர்தான் அதன் ஸ்தாபகர் மற்றும் டிரஸ்டீ. கருப்பை வெள்ளையாக்க இப்படி ஒரு டிரஸ்ட் வைத்து நடத்துகிறார்கள் என்று ஊரில் பேச்சு உண்டு. அது நமக்கு தேவையில்லை. அவர்கள் செய்யும் பணி என்ன என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியது.

1) பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி. பயிற்சி முடிந்ததும், பயிற்சி பெற்றவர்களில் ஏழைப் பெண்களுக்கு தையல் மிஷின் இலவசமாக கொடுக்கிறார்கள். மற்றவர்களில் சில குறிப்பிட்ட பெண்களை தேர்ந்தெடுத்து 1000 ரூ மட்டும் பெற்றுக் கொண்டு அவர்களுக்கும் தையல் மெஷின் கொடுக்கிறார்கள்.

2) பெண்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி. இலவசம் என்றதும் சும்மா MS.Office தான் பயிற்சி என்றில்லாமல், TALLEY வரை சொல்லி கொடுக்கிறார்கள்.

3) ஏழை எளியவர்களின் பிணங்களை தகனம் செய்ய உதவுகிறார்கள். அதாவது நகராட்சி சுடுகாட்டில் பிணத்தை புதைக்க ரூ. 600ம், எரிக்க ரூ. 1200ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனை இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

4) கல்விக்கு உதவுகிறார்கள்.

இப்படி பல நல்ல காரியங்களை அந்த டிரஸ்ட் செய்து வருகிறது. அதன் டிரஸ்டீ ஒருவேளை நாளை ஏதாவது எலெக்‌ஷனில் நிற்பாரேயானால் ஊர் பெண்களின் ஓட்டெல்லாம் அவருக்குத்தான் என்று சொல்லும் அளவுக்கு பெண்கள் அதனால் பயன் பெற்றிருக்கிறார்கள்.

இந்த டிரஸ்ட் பின்னால் எந்த கலெக்டரும் இல்லை. அப்படியொருவரின் தேவையும் இவர்களுக்கு கிடையாது. இவர்களிடம் தெளிவான செயல் திட்டம் இருக்கிறது. அது மகளிர் மேம்பாடு. அதற்கு ஆவண செய்ய வேண்டியதை வெகு சிறப்பாக செய்து வருகிறார்கள்.

நவலடி முன்மொழியும் டிரஸ்ட், இதுபோன்ற ஒன்றாக இருப்பதே அதிக பயன் தருவதாக இருக்கும் என்பதே என் கருத்து. அதை விடுத்து கலெக்டர் பின்னால் அலைவதில் ஒருவேளை நான்கு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கலாமே தவிர, வேறு ஆகப்பெரும் பயன்பாடு இருக்கும் என்று தோன்றவில்லை. எல்லா நேரங்களிலும் உன் லைனில் கலெக்டர் வரவும் மாட்டார். கலெக்டர் பி.ஏ உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் தான் நீ புழங்க வேண்டியிருக்கும். நம் அதிகாரிகளின் லட்சணம் எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உதவி செய்ய போய் உபத்திரப்பட்டுத்தான் திரும்ப வேண்டியிருக்கும்.

இளைஞர் நற்பணி மன்றங்கள், தன்னார்வ குழுக்கள் போன்றவை கறிவேப்பிலையாத்தான் பயன்படுத்திக் கொள்ளப் படுகின்றன. அவர்களின் ’மாதிரி கிராம திட்டத்தில்’ (http://tinypaste.com/b4429) நாம் பங்களித்து செய்யக்கூடிய காரியம் ஏதாவது இருக்கிறதா? அவருக்கு கீழே இருக்கும் ஒவ்வொரு துறையின் பணிகளும் ஒரே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால் அவ்வளவுதான் அத்திட்டம். மேலும், அவரின் ஒருகோடி மரக் கன்றுகள் நடும் திட்டம், கிராம தோப்பு திட்டம், உழவர் உணவகம் ஆகியவற்றில் மரம் நட்டு பராமரித்து வர மட்டுமே நாம் உதவ முடியும். மற்றவற்றில் அதிகாரிகளின் உதவியாளர்களாக அலைவதே களப்பணியாக இருக்கும்.

இனி உன் கடிதத்துக்கு வருகிறேன்.

>> நவலடி மெயிலில் நல்ல விஷயங்கள்- தனித்தனியாக சிறு குழுக்களாக செய்ய நினைப்பதை ஒருங்கிணைத்து செயல்பட நினைப்பது ஒன்று <<

இதற்கான பதிலை நீயே இறுதியாக சொல்லிவிட்டாய். ’அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் தம்பி நீயும் நானும் டோய்’ என்பது போல நானும் நீயும் சேர்ந்து செய்வதன் சௌகரியமே வேறு. புதிதாக இன்னொரு குழுவுடன் இணைந்து செயல்படுவதில் தயக்கங்கள் அதிகம் இருக்கின்றன. இருவரின் அலைவரிசையும் வேறு வேறாக இருந்துவிட்டால் தன்னார்வமே சுத்தமாக போய்விடும் அபாயமும் இருக்கிறது.

>> ஒரு டிரஸ்ட் ஆக உருவாக்கும் போது கலெக்டர் போன்ற ஒருவரின் அனுமதியும், அவரது ஈடுபாடும் இதன் நம்பகத்தன்மையை மற்றும் reach ஐ அதிகரிக்கும்.<<

மேற்கண்ட அறக்கட்டளையின் செயல்பாடுகளை உற்று நோக்கும்போது, நம்பகத்தன்மை மற்றும் ரீச் என்பதை சேவைதான் தீர்மானிக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம். மேலும், டிரஸ்டை சாரிடபிள் கமிஷனரிடம் உரிய ஆவணங்களை சமர்பிக்கும் எவரும் பதிந்து கொள்ளலாம் எனும் நிலையில், கலெக்டரின் அனுமதியெல்லாம் அதற்கு அவசியமே இல்லை.

கலெக்டரின் ஈடுபாடெல்லாம் நிதியை திரட்டும் வரைதான் இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதையும் தாண்டிய அளவிற்கு அது செல்ல காரணங்கள் குறைவு என்றே நினைக்கிறேன்.

இம்மாதிரியான சந்தேகங்களை நிவர்த்தி செய்யும்படியாக, தெளிவான திட்ட அறிக்கை ஒன்றை இவர்கள் பெற்றுத் தந்தால் அப்போது பரிசீலிக்கலாம். இல்லையென்றால், பாப்பு ரெட்டியார் அறக்கட்டளைப் போன்று நாமும் நம் போக்கில் குறுக்கீடுகளின்றி செயல்படலாம்.

சுரேஷிடம் நாமக்கல்லில் செயல்படும் அறக்கட்டளைகள் மற்றும் தன்னார்வ குழுக்களின் விவரங்களை திரட்டித் தரக் கேட்டிருக்கிறேன். ஓரிரு நாட்களில் ஏற்பாடு செய்வதாக கூறியிருக்கிறான். அதனைக் கொண்டு விவாதிப்பதன் மூலம் நம் யோசனைகளை இன்னும் சிறப்பாக செதுக்கிக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

0 comments:

Post a Comment