நாமக்கல்லின் இலக்கிய முகம் (1)

Posted: Sunday, December 27, 2009 | Posted by no-nononsense | Labels: ,
எனக்கு நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தின் மீது ஒரு விஷயத்தில் மாளாத பொறாமை உண்டு. அன்று முதல் இன்றுவரை சுந்தரம் ராமசாமி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், அ.கா.பெருமாள் போன்ற பல இலக்கிய எழுத்தாளர்களை தமிழுக்கு நல்கிய மாவட்டம் அது. இந்த வரிசையில் உள்ள முதல் மூன்று பெயர்களை தவிர்த்து நவீன தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை எழுதுதல் சாத்தியமில்லை. என் மனதுக்கு நெருக்கமான கவிஞர் தொ.சூசைமிக்கேலும் அதே மாவட்டத்துக்காரர் தான்.

அது போல், நாமக்கல்லின் இலக்கிய முகம் யாது என்று சிந்தித்துப் பார்த்திருக்கிறேன். புத்தகப்பிரியர்களான சில நண்பர்களை வினவியும் இருக்கிறேன். நாமக்கல் கவிஞரை தாண்டி வேறு ஒருவரை சுட்டிக்காட்ட ஒருவராலும் இயலவில்லை. நாமக்கல் கவிஞர் தீவிரமான இலக்கியப் பணி ஆற்றியது சுதந்திரப் போராட்ட கால கட்டத்தில் - கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்பு. அதற்கு பிறகு நாமக்கல்லில் இலக்கியம் படைக்க
ஒருவருமே இல்லையா என்பதுவே என் ஆரம்ப கால தேடலாக இருந்தது. சோகம் என்னவென்றால், அங்கொன்றும் இங்கொன்றுமாக குமுதத்திற்கு காமாசோமா ஒருபக்க கதைகள் எழுதிவிட்டு இலக்கிய அந்தஸ்துக்கு துண்டு போட்டு காத்திருக்கும் ஒரு சிலரைத் தவிர, காத்திரமான இலக்கிய படைப்பாளி என்று சொல்லிக் கொள்ள ஒருவருமே இல்லை என்பதுதான் நிதர்சனமாக இருக்கிறது. சிலம்பொலியார் இருக்கிறார் என்றாலும், அவரும்கூட பழந்தமிழ் இலக்கியத்தில் திறனாய்வு செய்தவரே தவிர, படைப்பிலக்கியமாகிய புனைவில் ஈடுபட்டவர் அல்ல என்றே நினைக்கிறேன்.

எனினும், இரண்டு எழுத்தாளர்கள் மட்டும் தமிழக இலக்கிய அரங்கில் நம் மானத்தை காத்துவருகின்றனர். ஒருவர், கு.சின்னப்ப பாரதி. மற்றொருவர், பெருமாள் முருகன். ’கூளமாதாரி’ என்னும் வட்டார வழக்கு நாவல் எழுதி புகழ்பெற்ற பெருமாள் முருகன் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர். நாமக்கல் அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில்(கரட்டு காலேஜ்) விரிவுரையாளராக பணியாற்றுகிறார். அவரை பற்றி இன்னொரு நாள். இப்போது நான் சொல்லவந்தது, கு. சின்னப்ப பாரதி பற்றி.

கு. சின்னப்ப பாரதி (பரமத்தி)வேலூர் வட்டம் பொன்னிரிப்பட்டியை சேர்ந்தவர். கொங்கு வேளாள கவுண்டர். இங்கு இனத்தைப் பற்றி வலிந்து நான் சொல்லக் காரணம் அவர் அதையெல்லாம் உதறித் தள்ளி பொதுவுடமைவாதியாக (கம்யூனிஸ்ட்) காலமெல்லாம் வாழ்ந்துவருபவர் என்பதால்தான். நாமக்கல் மாவட்ட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆனிவேராக இயங்கியவர்களில் ஒருவர் அவர். அதுமட்டுமன்றி, இயக்கத்தின் பிரபலமான செம்மலர் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். அவருடைய கம்யூனிச இயக்க செயல்பாடுகளின் இடையே ஒரு தீவிர படைப்பிலக்கியவாதியாகவும் பரிணமித்து சில அற்புத புதினங்களை தமிழுக்கு தந்திருக்கிறார். இடதுசாரி இலக்கியத்தில் முக்கியமானதாக பெரும்பான்மையான விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்படுவது அவரது தாகம் மற்றும் சங்கம் ஆகிய நாவல்கள் ஆகும். ஏனையவை, தலைமுறை மாற்றம், சர்க்கரை, பவளாயி, சுரங்கம். இவற்றில் நான் தாகம் தவிர மற்றவற்றை இன்னும் படிக்கவில்லை என்பதால் படைப்பை முன்வைத்து கருத்துகூற முடியவில்லை. இருந்த போதிலும், படைப்புகளைப் படித்த ஜெயமோகன் போன்ற மற்ற படைப்பாளிகளிடம் உரையாடிய வகையில் கு. சின்னப்ப பாரதியின் எழுத்துக்கள் பெற்றுள்ள மரியாதையை உணர்ந்து கொள்ள முடிகிறது.

இவரை நான் முதலும் கடைசியுமாக சந்திந்தது, நாமக்கல்லின் பிரபல இடதுசாரி சிந்தனையாளரும் என் உறவினருமான கே.பழனிசாமியின் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழாவில். குழுமியிருந்த கூட்டத்திற்கு இடையில் பெரிதாக பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனினும், கொல்லிமலையில் 1950 வாக்கில் நடைபெற்ற கந்துவட்டி எதிர்ப்பு போராட்ட அனுபவங்கள் பற்றி சிறிது மட்டும் கேட்டு அறிந்தேன். வரலாறு தெரியாதவர்களால் கம்யூனிஸ்ட்கள் என்றால் ஏதோ தெருமுக்கில் நின்று கோஷமிடும் கோமாளிகள் மாதிரி பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் சமூகத்திற்கு ஆற்றியுள்ள பணிக்கு நிகராக இன்னொரு இயக்கத்தை யாராலும் சுட்டிக் காட்ட முடியாது. நான் மேற்சொன்ன அந்த கொல்லிமலை சம்பவத்தை குறிப்பாக நான் கேட்டறிய காரணம் - உழைப்பதும் அதைக்கொண்டு பிழைப்பதும் அன்றி வேறொன்றும் அறியாத ஒரு பழங்குடி இனத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை, அடக்குமுறை பற்றிய ஒரு காலகட்டத்தின் உண்மை வரலாற்றை அறிந்து கொள்ளும் நோக்கத்தில்தான். நம்மை சுற்றி பல நூறு வரலாறுகள் பனி மறைக்கும் பார்வையாக காலத்தால் மறைக்கப்பட்டு கிடக்கின்றன. அவற்றை அறிதலின் மூலம் நாம் நம் உண்மையான வரலாற்றை மீட்டெடுப்பது, காலம் காலமாக நம் முன்னால் பரப்பப்பட்டுவரும் பொய்யுரைகளை கட்டுடைக்க உதவும். இதனால்தான் நான் தீராத சரித்திர காதலனாக இருக்கிறேன். பார்வை நாளுக்கு நாள் தெளிவடைந்து வருகிறது.

அந்த ஒருமுறைக்குப் பிறகு வேறு எந்த இலக்கிய கூட்டங்களிலும் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தாலும் சந்தர்ப்பவாத முகஸ்துதிகள் மட்டுமே இலக்கிய உரைகளாக பொழியப்படும் இடத்தைவிட்டு அகன்றே வருகிறேன். இதனால் கு. சின்னப்ப பாரதி அவர்களை பிறகு சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று இணையத்தை மேய்ந்து கொண்டிருந்த போது கு. சின்னப்ப பாரதிக்கு சென்னையில் நடைபெற உள்ள புத்தக கண்காட்சியில் கலைஞர் பொற்கிழி விருது அளிக்கப்பட உள்ளது என்று அறிந்தேன். எத்தனையோ செய்திகள் நம்மை கடந்து போகின்றன. நமக்கு சம்மந்தமுள்ளது என்று அறியாமலே அவற்றில் எத்தனையோ பெயர்களை நாம் கடக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு பெயராகவே கு. சின்னப்ப பாரதியினுடையதும் நாமக்கல்வாசிகளால் கடந்து செல்லப்படுகிறது. அவர்களுள் நாமும் ஒருவராக இல்லாமல் குறைந்த பட்சம் அவரை பற்றி தெரிந்து கொள்ளவாவது செய்யலாமே என்ற நோக்கத்தில்தான் இதனை எழுதினேன். வேறு சந்தர்ப்பங்களில் மற்றவர்களைப் பற்றியும் எழுதுகிறேன்.

0 comments:

Post a Comment