நீச்சல் கற்ற அனுபவமும் உயிர் தப்பிய கதையும்

Posted: Monday, December 28, 2009 | Posted by no-nononsense | Labels:
நண்பர்களுடன் தொடரும் மடலாடல்:

பாஸ்கரும் நானும் ஒன்றாக சேர்ந்தே நீச்சல் கற்றுக் கொண்டோம். எப்படியென்றால், வீட்டிலிருந்து ஒரு தாம்பு கயிறு எடுத்துக் கொண்டு கொசவம்பட்டியில்(சேந்தமங்கல ரோடு) இருந்த ஒரு கிணற்றுக்குச் செல்வோம். அங்கே கயிற்றை முதலில் ஒருவன் வயிற்றில் கட்டிக் கொண்டு கிணற்றினுள் இறங்கி நீச்சலடிக்கும் போது மேலேயிருந்து மற்றொருவன் அதை கையில் பிடித்துக் கொள்வோம். இப்படியே ஒரு மாதம் விடாமல் அலைந்து கற்றுக் கொண்டோம்.

அதன் ஆகப்பெரும் பயனை விரைவிலேயே அடைந்தேன். ஒரு ஆடி 18-க்கு மோகனூர் ஆற்றில் நானும் குமரேசனும் (சயின்ஸ் குரூப்) குளித்துக் கொண்டிருந்தபோது இடுப்புவரை இருந்த நீர்மட்டம் திடீரென்று கழுத்துவரை உயர்ந்து, காலுக்கு கீழே தரை நழுவியது. நடப்பது இன்னதென உணர்வதற்குள் ஒரு பத்தடிக்கு வெள்ளம் இழுத்துச் சென்றிருந்தது. நாங்களும் எதிர் நீச்சல் போட்டுக் கொண்டே இருக்கிறோம்; ஒரு அடி கூட இருந்த இடத்தில் இருந்து முன்னேற முடியவில்லை. கரையிலிருந்த ஆட்கள் “குறுக்கால அடிங்க’ என்று கூச்சல் போட்டபடி இருந்தார்கள். பிறகு குறுக்கு நீச்சல் போட்டு கரை சேர்ந்து, அடித்து போட்டது போல அரைமணி நேரம் கிடந்தோம். அப்போது கரையில் இருந்து இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எங்களுடன் வந்த பாஸ்கரும், பூபதியும். (பூபதி ஒரு வருடம் ஜூனியர் பையன். ஆனால் மற்ற எல்லா விஷயங்களிலும் எங்களுக்கு பல வருடங்கள் சீனியர் :-) )

மறக்க முடியாத அனுபவம்.

பாஸ்கர்-நான்-குமரேசன் சேர்ந்து சுற்றியதற்கு கணக்கே இல்லை.

0 comments:

Post a Comment