திரைநாயகிகள்; திரக்கதா - சில எண்ணங்கள்

Posted: Wednesday, February 10, 2010 | Posted by no-nononsense | Labels: ,
In reply to the discussion on actresses married life:

அதிகம் சம்பாதிக்கும் முன்னணி நடிகைகளைப் பற்றி பிரச்சினையில்லை. ஒன்றில்லா விட்டால் இன்னொன்று என்று பொருந்திப்போகும் வரை உறவை புதுப்பித்துக் கொண்டே இருக்கலாம். உதாரணமாக ராதிகா, லட்சுமியை சொல்லலாம். ஆனால் கனகா போன்ற மார்க்கெட் நிலையில்லாத நடுவாந்தர நடிகைகளின் நிலைதான் சினிமா, தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலுமே நிர்கதியானது.

அவர்கள் எப்போதும் தங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பற்றத்தன்மையை உணர்வார்கள். பெரிய நடிகைகளைப் போல பரிசோதனை முயற்சிகளில் எல்லாம் அவர்களால் இறங்கமுடியாது. ஒரே வாழ்க்கை; அதுவும் தங்களின் மேல்தட்டு வர்க்க செலவுகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய ஒன்றாக இருக்கவேண்டும். இந்த criteria-க்கு பொருந்தும் வரன்களையோ ஆண்களையோ ஏற்றுக்கொண்டு செட்டில் ஆகிவிடுகின்றனர் (தேவயானி போன்ற ஓரிருவர் விதிவிலக்கு).

இவர்களும் கிட்டத்தட்ட மற்ற மிடில் கிளாஸ் பெண்களைப் போலத்தான். எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமைந்தால் அமையும். மாறாக வந்தவன் இருப்பதையும் பிடுக்கப் பார்த்தால் மணமுறிவில் முள் வந்து நிற்கும். இதற்கு உதாரணம் எண்ணிலடங்காதவை. ஒன்றே ஒன்றை மட்டும் சொல்வது இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும். அது ஸ்ரீவித்யாவின் காதல்; கல்யாணம் மற்றும் விவாகரத்து.

எனக்கு கனகா பற்றிய செய்திகளைப் படித்ததும் ஒரு வருடம் முன்பு மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘திரக்கதா’ படம்தான் உடனே நினைவுக்கு வந்தது. ஸ்ரீவித்யா - கமல் கதை என்றும் அதனைச் சொல்வார்கள். திரை வாழக்கையின் மென்மையான ஒரு பக்கத்தை மேல்பூச்சுகளற்று சொல்லிச் செல்லும் திரைச்சித்திரம் அது.

திரைவானின் உச்சத்தில் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திர நடிகை மாளவிகா. அவர் திடீரென்று பொதுவெளியில் இருந்து ஒருநாள் முகவரியற்று போகிறார். அவரைப்பற்றி எந்த தகவலும் யாருக்கும் தெரியவில்லை. இந்த மர்மத்தின் முடிச்சிகளை அவிழ்த்து, அந்த உண்மை கதையைக் கொண்டு தனது அடுத்தப் படத்திற்கு திரைக்கதை அமைக்கும் நோக்கில் அவரைத் தேடியலைகிறான் இளம் இயக்குநன் அக்பர்.

மாளவிகாவின் ஆரம்பகால வாழ்க்கை, தன்னுடைய சக நடிகர் அஜய்சந்திரனுடன் அவருக்கு மலர்ந்த காதல்;கல்யாணம், பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட மணமுறிவு எல்லாவற்றையும் அந்த நட்சத்திர தம்பதிகளுக்கு நெருக்கமான டைரக்டர் ஒருவர் தன் மனைவிக்கு எழுதிய பழைய கடிதங்களின் மூலம் அறிகிறான் அக்பர். பலவாறு கஷ்டப்பட்டு, காணாமல் போன மாளவிகா தமிழ்நாட்டின் ஒரு சிற்றூரில் இருப்பதாக கண்டறிந்து, அவளை சந்திக்கப்போனால், அவளோ புற்று நோயால் பாதிக்கப்பட்டு, உடல் நலிவுற்று, மெலிந்து, தலைமுடியெல்லாம் கொட்டி அழகுபோய், அதனாலேயே வெளியுலகிலிருந்து தன்னை துண்டித்து கொண்டு, நாட்களை எண்ணிக்கொண்டு மருத்துவமனை ஒன்றின் தனியறையில் ஒரு நடைபிணமாக காட்சியளிக்கிறாள்.

மாளவிகாவின் கடைசி ஆசை தன்னுடைய முன்னாள் கணவரும் இந்நாள் சூப்பர் ஸ்டாருமான அஜய்சந்திரனை ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்பது. அதை நிறைவேற்றும் விதமாக அவரைச் சென்று சந்தித்து மன்றாடி அழைத்து வருகிறான் அக்பர். அப்போதுதான் அஜய்சந்திரன் மூலம் அவர்கள் பிரிந்ததன் பின்னுள்ள காரணத்தையும், அதை மாளவிகா எந்தளவு தவறாக புரிந்து கொண்டிருக்கிறாள் என்பதையும் அறிகிறான்.

அதுவரை தவறாக புரிந்து கொண்டிருந்தது மாளவிகா மட்டுமல்ல; கதையின் போக்கில் பயணம் செய்யும் நாமும்தான். மாளவிகாவும் அஜய்சந்திரனும் சந்திப்பதும், மாளவிகாவின் வாழ்வில் இன்னும் எஞ்சியிருக்கும் ஒரு சில நாட்களையும் இருவரும் அவர்களின் ஆரம்ப கால காதல்களனான மலைவாசஸ்தல பங்களாவில் கழிப்பதுமான காட்சிகள் உணர்ச்சிகரமானவை.

இதில் மாளவிகாவாக ப்ரியாமணியும், அஜய்சந்திரனாக அனூப் மேனனும், அக்பராக பிரிதிவிராஜூம் நடித்திருந்தார்கள். 2008-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதையும் இப்படம் தட்டிச்சென்றது. சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ப்ரியாமணிக்கு இரண்டாம் முறையாக தேசிய விருது கிடைத்திருக்க வேண்டியது. ஆனால் அவர் சொந்தக்குரலில் பேசாததால் அந்த வாய்ப்பு பறிபோனது. (ராணி முகர்ஜியின் குரலுடன் ஒப்பிடும்போது இவருடையது தேவலாம்)

இது எப்படி ஸ்ரீவித்யா - கமல் கதை ஆகும் என்றால், கமலின் ஆரம்பகால காதல் கதைகளின் அத்தியாயங்களில் ஒன்றுதான் ஸ்ரீவித்யா என்று ஒரு கிசுகிசு உண்டு. அதற்கு வலு சேர்க்கும் விதமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு தன்னுடைய இறுதி நாட்களை திருவனந்தபுரத்திலுள்ள மருத்துவமனையில் ஸ்ரீவித்யா கழித்துக்கொண்டு இருந்தபோது, அவர் தன்னை சந்திக்க அனுமதித்த ஒரே நபர் கமல் மட்டுமே. இது அப்போதே செய்திகளில் தனி கவனம் பெற்றிருந்தது. அந்த சந்திப்பு முடிந்த சில நாட்களிலேயே ஸ்ரீவித்யா இறந்துவிட்டார்.

நடிகைகள் ஆகட்டும் அல்லது நம் வீட்டு பெண்கள்தான் ஆகட்டும்; ரிலேசன்ஷிப் என்பது இரு மனங்களைப் பொருத்தது. அதில் ஆளுமை அதிகம் மிக்கதும், அதே சமயம் அதிகம் பாதிப்புக்குள்ளாவதும், இரண்டுமே பெண்கள்தான்.

0 comments:

Post a Comment