ஈழப்போராட்டமும் சர்வதேச இன மோதல்களும்

Posted: Sunday, February 28, 2010 | Posted by no-nononsense | Labels: , ,
நிறைய பேர் ஆயிரத்தில் ஒருவன் கதையை ஈழ நிகழ்வுகளோடு ஒப்பிட்டு சொன்னார்கள். ஆனால் ஈழப்போராட்டத்தை பிரதிபலிக்கும் கதை அம்சம் கொண்ட படம் 300 என்னும் ஆங்கிலப்படம்.

300, ஆ.ஒ.தான் என்றில்லை, உலகின் பெரும்பாலான காலனியாதிக்க, ஆக்கிரமிப்பு போர்கள் மற்றும் இன மோதல்கள் சம்மந்தப்பட்ட கதைகளும் படங்களும் கூட உனக்கு ஈழப் பிரச்சினையைத்தான் ஞாபகப்படுத்தும். அனைத்தின் பின்புலமான காரணங்களும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

சமகாலத்திலேயே ஈழப் பிரச்சினையோடு ஒப்பிடக்கூடியதாக டார்பர், பாலஸ்தீனம், திபெத், ருவாண்டா, கொசோவோ போன்ற பலவற்றைக் குறிப்பிடமுடியும்.

இவற்றில் கொசோவோவை ஈழத்துடன் நெருங்கி வரக்கூடிய ஒன்றாக பார்க்கமுடியும். அவர்கள் செர்பியாவின் இன அழிப்புக்கெதிராக ஆயுதம் ஏந்திய அதேசமயத்தில், அதை சர்வதேச அளவில் அரசியல் ரீதியாகவும் முன்னெடுத்து, 2008-ல் தங்களை தன்னிச்சையாகவே சுதந்திர நாடாகவும் அறிவித்துக் கொண்டார்கள். அதற்கு அமெரிக்க, ஐரோப்பிய கூட்டமைப்பின் அங்கீகாரமும் கிடைத்தது.

அந்த அரசியல் சாமார்த்தியம்தான் ஈழப்போராட்டத்தில் புலிகளிடம் இல்லாமல் போனது. பாரிய இழப்புகளை சந்தித்து அடைந்த unofficial தமிழீழ அரசை தங்களின் மூர்க்கத்தன; அதீத ஆயுதப் போராட்ட தன்னம்பிக்கையால், திரண்டிருந்த வெண்ணையுடன் பானையை போட்டு உடைத்து விட்டார்கள். அதன் வலியை இன்னும் பல காலத்திற்கு ஈழம் அனுபவிக்க போகிறது.

கொசோவோவின் சுதந்திர நாடு பிரகடனத்தை சர்வதேச சமுதாயம் அங்கீகரித்த போது அதனைக் கண்டு எங்கே ஈழப் பிரச்சினையிலும் அதுவே நடந்து விடுமோ என்று நடுநடுங்கிய இலங்கை அரசு, கொசோவோவுக்கு எதிராக எப்படியெல்லாம் கண்ட குரல் எழுப்பியது என்பதை பழைய ஏடுகளை புரட்டிப் பார்த்தால் புரியும்.

*

மேலே ருவாண்டா பற்றி குறிப்பிட்டிருந்தேன். அங்கே 1994-ல் நடந்த இனமோதல்தான் அண்மை கால மனித குல வரலாற்றிலேயே, கொடூரமானதும் கொடுமையானதுமான ஒன்று ஆகும். டுட்சி, ஹூடு என்கிற இரு இனங்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மூன்று மாத காலத்திற்குள் ஐந்து முதல் பத்து லட்சம் பேர் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு இறந்தார்கள். (பத்து லட்சம் என்பது சாதாரண எண்ணிக்கை அல்ல). இறந்தவர்களில் அதிகம் பேர் அங்கே சிறுபான்மையினராகிய டுட்ஸி இனத்தினர். இலங்கையில் சிங்களவன் போல அங்கேயும் பெரும்பான்மையினராகிய ஹூடுவின் ஆட்சிதான் அப்போது நடந்து கொண்டிருந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு Hotel Rwanda என்றுகூட ஒரு படம் வந்தது. பலரும் பார்த்திருக்கலாம்.

திருச்சியில் நான் பணிபுரிந்தபோது எங்கள் அலுவலகத்திற்கு நிறைய ருவாண்டா மாணவர்கள் பணம் மாற்ற(Forex) வருவார்கள். Hotel Rwanda படம் பார்த்த அனுபவத்தில் அவர்களிடம் அந்த இனப்படுகொலைகளைப்பற்றி சிலவேளைகளில் நான் பேச்சுக் கொடுப்பதுண்டு. ஆள் தராதரம் பார்க்காமல் இனம் ஒன்றை மட்டுமே வேறுபடுத்தி பார்த்து கணவன் மனைவியையும், அப்பா பிள்ளையையும்கூட வெட்டித்தள்ளியதாக அவர்கள் கூறினார்கள். அதில் ஒருவன் என்னுடைய மின்னஞ்சல் முகவரியை பெற்றுச் சென்று, கர்ம சிரத்தையாக அது சம்மந்தமான பல புகைப்படங்களையும் கட்டுரைகளையும் கூட அனுப்பி வைத்தான்.

- ஈழத்தை நினைவுபடுத்தும் திரைப்படங்கள் மற்றும் இன மோதல்கள் மீதான விவாதத்தின் ஒரு பகுதி..

0 comments:

Post a Comment