தமிழ் திரைச்சூழல் - தொடரும் உரையாடல்

Posted: Saturday, February 27, 2010 | Posted by no-nononsense | Labels:
எப்பவுமே கதை இல்லையென்றால் பெரிய ஆக்டரோ சின்ன ஆக்டரோ படம் ஓடாது

அந்த கதையும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கதையாக இருந்தால் மட்டுமே படம் ஹிட்டடிக்கும். உ.ம்: நாடோடிகள்.

இல்லையென்றால், ஒரு சிறிய வட்டத்தில் மட்டும் ரசிக்கப்பட்டு பெட்டியில் சுருண்டு விடும். கிளாஸிக் கதைகளை பொறுத்தவரை அந்நிலையில்தான் இன்றைய தமிழ் ரசிக சூழல் இருக்கிறது. அதற்கு நல்ல உதாரணம்: காஞ்சிவரம். பார்த்த எல்லோராலும் பாராட்டப்பட்டு, தேசிய விருதும் வாங்கிவிட்ட அப்படத்தை தைரியமாக வாங்கி வெளியிட இன்றுவரை எந்த விநியோகஸ்தரும் முன்வரவில்லை. காரணம் அதில் கதை மட்டுமே இருக்கிறது. ’சதை’ இல்லை.

இதில் விநியோகஸ்தர்களையும் மட்டுமே குற்றம் சொல்லிவிடவும் முடியாது. அப்படி வாங்கி தைரியமாக வெளியிடப்பட்ட ஒரு சில படங்களையும் தோல்வியுறச் செய்துவிட்டது மக்களின் குற்றம்தான். உ.ம்: அச்சமுண்டு அச்சமுண்டு, பூ, பசங்க(நல்ல படம் என்று இதற்கு டாக் இருந்த அளவிற்கு வசூல் கிடையாது), யாவரும் நலம். அதற்கு மக்கள் சொல்லும் காரணம் எண்டர்டயிண்மென்ட் இல்லை. போரடிக்கிறது என்பதுதான். கதை நல்லாயில்லை என்று ஒருவராலும் சொல்லமுடியாது.

கந்தசாமி, வில்லு போன்ற சில மசாலா படங்கள் த்ராபைகளாக இருந்தும் போட்ட காசுக்கும் மேலேயே முதல் இரண்டு வாரங்களில் மட்டுமே வசூலித்து தள்ளிய விந்தையையும் இங்கே கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் ஏன் தமிழில் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வருவதில்லை என்பது புரியும். (கந்தசாமியின் வசூலுக்கு தாணு செய்த விளம்பர யுக்திகள்தான் காரணம்).

ஒரு படத்தை தயாரிப்பதன் முக்கிய அம்சமாக, முதற்கண் வேலையாக ஹீரோக்களின் கால்ஷீட்டை பெறுவது இருக்கும்வரை இந்நிலை மாறாது. மலையாள சினிமாக்களில் முதலில் கதைகளைத்தான் உரிமம் பெறுவார்கள். பிறகுதான் அதற்கு எந்த ஹீரோ என்று தேடுவார்கள். அங்கே தகழி.சிவசங்கரன் பிள்ளை, எம்.டி.வாசுதேவன் நாயர் போன்ற எழுத்தாளர்கள்தான் ஹீரோக்களை விடவும் பிரபலம்.

ஆனால் அச்சூழல் இங்கே இல்லை. எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றவர்களின் நல்ல பல நாவல்கள் இருக்க, அதை விடுத்து தங்களின் மசாலா கதைகளுக்கு அவர்களிடம் வசனம் மட்டும் எழுதி வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள் இங்கே. நான் கடவுளாக மலர்ந்த ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ மற்றும் சொல்ல மறந்த கதையின் மூலமாகிய நாஞ்சில் நாடனின் ‘தலைகீழ்விகிதங்கள்’ போன்றவை ஒரு சில விதிவிலக்குகள்.

சில உரையாடல்களில் இப்படி நல்ல எழுத்தாளர்களின் நல்ல கதைகள் படமாக்கப்பட வேண்டும்; நல்ல கிளாசிக் கதையம்சம் கொண்ட படங்கள் ஓடவேண்டும் என்பதையெலாம் வலியுறுத்தி பேசினால், உடனே பொழுதுபோக்கு படங்களை மறுதலிப்பதாக எடுத்துக்கொள்கிறார்கள். அதுவும் தேவை. இதுவும் ஆராதிக்கப்படுவது அவசியம். அப்படியொரு சமநிலையிலான ரசனை சூழல் இங்கே இல்லாமல் இருப்பதுதான் நம் கவலை.

0 comments:

Post a Comment