புராதனங்கள் குறித்த புரிதல் நிலை

Posted: Sunday, February 21, 2010 | Posted by no-nononsense | Labels: ,
இந்த கடித உரையாடல் குறித்த நண்பர்களுடனான உரையாடலில் என் சில கருத்துக்கள்:

பொதுவாக பாமர மக்களிடம் எதுவும் தமக்கு நடந்தால் மட்டுமே அதை பற்றி அலறுகிறார்கள்.மற்றவர்கள் துன்பப்படும்போது யாரும் அதை கண்டுகொள்வதில்லை

பாமர மக்கள் மட்டும்தானா? மெத்த படித்த மேதாவிகள் மத்தியில் மட்டும் நமது புராதனங்கள், சரித்திரங்கள் குறித்தெல்லாம் என்ன பெரிய புரிதல் நிலவுகிறது? தொன்மம் பற்றிய பேச்சு எழுந்தாலே ஏதோ தொழுநோயை கண்டதுபோல் பின்னங்கால் பிடரியில் அடிக்க அல்லவா ஓடுகிறார்கள். வரலாறு என்பது பள்ளியில் பக்கம் பக்கமாய் படிக்க வைத்து கழுத்தறுத்த ஒரு பாடம் என்கிற அளவில்தான் படித்தவர்களின் புரிதல் நிலையே எனும்போது, பாமரர்களை மட்டும் வைவானேன்.

நமது புராதன சின்னங்களின் முக்கியத்துவம் நமக்கு புரிய வேண்டுமானால் நமது பார்வையை கொஞ்சம் நாம் கடந்து வந்துள்ள சரித்திரத்தின் பக்கமும் திருப்ப வேண்டும். வரலாற்றின் ஏடுகளை புரட்டி பார்க்கும் பொறுமை வேண்டும். அவற்றில் கிடைக்கும் அறிதல் ஒருநாளும் இண்டர்நெட்டை இடையறாது மேய்ந்து திரிவதில் கிட்டிடாது. அதன்மூலம் அடையும் தெளிவு, தற்காலத்தின் சர்வரோக நிவாரண சரணாகதிகளாக திகழும் எந்த சத்குரு-ஸ்ரீலஸ்ரீ-பூஜ்யஸ்ரீயின் சொற்பொழிவிலும் கிடைத்திடாது.

முக்கியமாக இன்று பலரின் தலையை பாரமாக அழுத்திக்கொண்டிருக்கும் கடவுள், சமயம், மதம் போன்ற பல உள்நோக்கிய கேள்விகளுக்கான பதில் சரித்திரத்தை அறிந்து கொண்டு, அதனை ஒரு பருந்து பார்வை பார்க்கும் நிலையை ஒருவன் அடையும்போது, அப்போது அவனுக்கு கிடைக்கிறது. என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.

இக்கடிதத்தில் ராஜன் குறிப்பிட்டுள்ள சமணர் மலையில் காணப்படும் பாறைச் சிற்பங்கள் மிகவும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை. காரணம் - தென்னாட்டில், குறிப்பாக தமிழகத்தின் மேலதிகமான பகுதிகளில் கோலாச்சிய சமண மதத்தை, இன்று சைவம், வைணவம் என்ற பெயரில் நீங்களெல்லாம் தொழுது வணங்கும் வைதீகம், அழித்தொழித்ததின் மிச்சங்கள் இவை. பழம்பெருமை வாய்ந்த இந்து சமய கோவில்களாக இன்று கருதப்படும் பெரும்பாலானவை ஒரு காலத்தில் பௌத்த விகாரைகளாகவும், சமண மடங்களாகவும் இருந்தவை என்பதற்கு சான்று பகர்பவை. இவ்வளவு முக்கியத்துவங்கள் இருந்தும் இது கவனிப்பாரற்று கேட்பாரின்றி சிதிலமடைந்து கிடப்பது பதற வைக்கிறது.

இன்னும் சில இடங்களில் பழங்கால சுவர் ஓவியங்களையெல்லாம் பாதுகாக்க தவறிவிட்டு பிறகு அதை புதுப்பிக்கிறேன் பேர்வழி என்று அதன்மேல் பெயிண்டை அள்ளி பூசி பாழ்படுத்தி வருகின்றனர். தமிழகத்தின் ஒரு ஐந்து நூற்றாண்டு சரித்திரத்தின் சான்றுகளாக கூறப்படுபவை நாயக்கர்களின் சுவர் மற்றும் பாறை ஓவியங்கள். இன்று அவையெல்லாம் பெரும்பாலும் சிதிலமடைந்து விட்டன. அவை மீதெல்லாம் அவற்றை காணச் செல்பவர்கள் தங்களின் சொந்த ஓவியங்களை கிறுக்கி வைத்து விட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். மதுரை, செஞ்சியில் ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு தான் பார்த்துவிட்டு வந்திருந்த பல சுவர் ஓவியங்கள் இன்று சுத்தமாக அழிந்துவிட்டதாக முன்பு அறிஞர் ஒருவர் எழுதியிருந்தார். இதெல்லாம் இச்சமூகம் தன்னுடைய புராதனம் குறித்து கிஞ்சித்தும் புரிதலின்றி இருந்துவருவதையே காட்டுகிறது.

இவற்றை பேணுவதற்கென்றும் குறிப்பான துறைகள் கிடையாது. சில மாநில தொல்லியல் துறையின் கீழும், சில மத்திய தொல்லியல் துறையின் கீழும் வருகின்றன. மீதம் கோவில் நிர்வாகங்களின் கீழ் விடப்பட்டுள்ளன. இவையெல்லாம் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். ஆனால் இவற்றால் எந்த மேஜையடி வருமானமும் கிடையாது என்பதால் எந்த அரசும் கண்டுகொள்வதில்லை.

புராதன சின்னங்களை பொறுத்தவரை இம்மாதிரி ஒரு இழிநிலையை ஐரோப்பிய மேற்கத்திய நாடுகளில் எங்கும் பார்க்கமுடியாது. காரணம் அங்கே பாடத் திட்டங்களில் சரித்திரம் என்பது வெறும் மனப்பாட பாடமாக அல்லாது, பண்பாட்டு சின்னமாகவும் அதைக் கட்டிக்காக்கப்பட வேண்டியது ஒரு கடமையாகவும் கற்பிக்கப்படுகிறது.

இக்கடிதத்திற்கு ஜெயமோகனின் பதில் அட்சர சுத்தமான உண்மை.

0 comments:

Post a Comment