இரண்டு கற்களும் சில சொற்களும்

Posted: Monday, February 8, 2010 | Posted by no-nononsense | Labels: ,
நேற்று அதிகாலை 4 மணி இருக்கும். அடிவயிற்றுக்கும் கீழே உயிர்நிலையில் ஊசி துளைப்பது போல் ஒரு வலி. சிறியதாக ஆரம்பித்து சிறிது நேரத்தில் அடிவயிறு முழுவதும் வலி பரவியது. வலி என்றால் அப்படியொரு கடுமையான வலி. என்னவென்று எனக்கே புரிந்தது - சிறுநீரக கல். ஐந்து மாதங்களுக்கு முன்பும் இதேபோன்ற வலியால் அவதியுற்று மருத்துவரை நாடியிருந்தேன்.

நம் ஊரில் எல்லா நோய்களுக்கும் எல்லா மருத்துவர்களும் வைத்தியம் பார்க்க தயாராக இருக்கிறார்கள். MBBS படித்தவரே ENT பிரச்சினைக்கும் பிரிஸ்கிரிப்ஸன் தருவார். ENT டாக்டரிடமே பல் வலிக்கும், வயிற்று வலிக்கும்(வேறென்ன ஜெலூஸில்தான்) மாத்திரை வாங்கிக்கொள்ளலாம். கேஸ் வேறு எங்கும் போய்விடக்கூடாது. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அவ்வளவுதான். இதற்கு நீங்கள் இன்ன ஸ்பெஷலிஸ்டைத்தான் அணுக வேண்டும் என்று சுலபத்தில் நம்மிடம் சொல்லிவிட மாட்டார்கள். இரண்டு மூன்று முறையாவது பீஸை கறந்துகொண்டு மெல்லதான் முத்தை உதிர்ப்பார்கள். அதுவரை அந்நோய் வளராமல் இருப்பது அவரவர் பூர்வஜென்ம புண்ணியத்தை பொருத்தது.

விவரம் புரியாமல் நானும் அப்படிப்பட்ட ஒரு பொது மருத்துவரை அணுகினேன். அவர் இல்லாததால் அவரின் மகன் - இவர் ஒரு குடல்புண் மருத்துவர் - கேஸை எடுத்துக்கொண்டார். விரிவாக ஸ்கேன் பார்த்து கிட்னி ஸ்டோன் என்று அறிவித்தார். அதற்குள் நான்கு மணி நேரம் ஆகியிருந்ததால் வலியின் தீவிரம் தானே கொஞ்சம் குறைந்திருந்தது. இரண்டு பெயின் கில்லர் ஊசிகளும், சில வலி நிவாரணி மாத்திரைகளும் கொடுத்தார் (எப்படி தெரியும் என்றால் எதற்கு இருக்கிறது இண்டர்நெட்?). அன்றைய பிரச்சினை நிவர்த்தியானது. பிறகு வலையில் மேய்ந்து இதற்கு எந்த மாதிரி வைத்தியம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்து ஒரு யூராலஜி டாக்டரைப் பிடித்தேன். உள்ளே நுழைந்தவனிடம் மூன்று ரெடிமேட் கேள்விகள் மட்டும் கேட்டார். படுக்க வைத்து சம்பிரதாயத்துக்கு சில உடல் பரிசோதனைகள்; பிறகு விறு விறுவென்று பிரிஸ்கிரிப்ஸன் எழுதி நீட்டினார். எல்லாம் அதிகபட்சம் ஐந்து நிமிடங்களில் முடிந்தது. வெளியில் வரும்போது அவர் கையில் திணித்த அட்டையில் இவர் பேச வேண்டிய விவரங்களெல்லாம் தயாராக அச்சில் இருந்தது. அதில் சாப்பிடக் கூடாது என்றிருந்த உணவு பொருள் லிஸ்டை அப்படியே கடைபிடித்தால் ஆறே மாதங்களில் ஆள் பாதி ஆகிவிடுவேன் என்று தோன்றியது.

அவர் எழுதிக்கொடுத்த மருந்து மாத்திரைகளை ஒழுங்காக சாப்பிட்டு வந்தேன். ஒரு வாரம் வரைப் பார்த்தேன். அன்று வாட்டிய உபத்திரம் மீண்டும் வரவில்லை. அதுவரை அலுங்காமல் குலுங்காமல் நடந்து கொண்டிருந்தவன் ஆடி ஓட ஆரம்பித்தேன் - கைவசம் வலி நிவாரணி இருக்கும் தெம்பில். அப்படியும் ஒன்றும் ஆகவில்லை. பிறகு வலி வந்ததையும் மருத்துவம் பார்த்ததையும் அப்படியே மறந்துவிட்டேன். சில நாட்கள் முன்பு அதைப்பற்றி கேட்ட தோழி ஒருவரிடம் கூட அதெல்லாம் தானாக சரியாகி விட்டது என்று ஏகாந்தமாய் சொன்னேன்.

அதுதான் ஐந்து மாதம் கழித்து இப்போது மீண்டும் தலை காட்டுகிறது.

வலி நிவாரணி என்று முன்பு அந்த யூராலஜி டாக்டர் கொடுத்த மாத்திரையை சாப்பிட்டுவிட்டு நின்றேன்;படுத்தேன்;புரண்டேன்; நடந்தேன். எதற்கும் வலி அசைந்து கொடுக்கவில்லை. இரண்டு கால்களையும் விரித்து வைத்து பலம் கொண்ட மட்டும் ஓங்கி உதைத்தால் எப்படி வலிக்குமோ அப்படி இருந்தது. விடியற்காலை ஐந்து மணி ஆகியிருந்தது. இந்நேரத்தில் எந்த டாக்டரிடம் ஓடுவது என்பது வலியை விட பெரும் துன்பமாக இருந்தது. காரணம் நாமக்கல்லின் ஆகப்பெரும் குறை ஆத்திர அவசரத்திற்கு என்று சென்று அட்மிட் ஆக ஒரு நல்ல மருத்துவமனை கிடையாது. மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் டிஸ்பென்ஸரிகளும் இருக்கின்றன. ஆனால் உயிர் போகும் அவசரம் என்றாலும் அர்த்த ராத்திரியில் கதவு திறக்காது. திறந்தாலும் இரவு நேரத்துக்கு என்று டியூட்டி டாக்டர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அங்கேயிருக்கும் நர்ஸ்களே ஏதாவது மேல்பூச்சு வேலை செய்ய முனைவார்கள். இத்தனைக்கும் அவர்களின் வீடு, கிளினிக் எல்லாம் ஒரே கட்டிடமாகத்தான் இருக்கும்.

எனக்கும் அதேதான் நடந்தது. முன்பு பார்த்த அதே குடல்புண் மருத்துவரிடமே ஓடினேன். சென்ற முறை அவர் போட்ட பெயின் கில்லர் ஊசியில் வலி சட்டென்று நின்றிருந்தது. இந்த க்ஷணத்திற்கு எனக்கு தேவையெல்லாம் அதுதான். வலி முதலில் நிற்க வேண்டும். மற்றதைப்பற்றியெல்லாம் பிறகு சிந்தித்துக்கொள்ளலாம். ஆனால் தட்டிப் பார்த்தும் முட்டிப் பார்த்தும் குடல் மருத்துவரின் கதவு திறக்கவில்லை. காம்பவுண்ட் கேட்டருகே காலிங்பெல் கூட இல்லை. அவரின் செல்போன், லேண்ட்லன் எல்லாம் அன்அவைலபிள். அதே ரோட்டில் இருக்கும் இன்னொரு பிரபல மருத்துவரின் ஆஸ்பத்திரிக்கு ஓடினேன். பத்து நிமிடம் கதவைத் தட்டிய பின் சாவகாசமாக தலையை வெளியே நீட்டிப்பார்த்த நர்ஸ், டாக்டர் 11 மணிக்குத்தான் வருவார். வேண்டுமானால் டிரிப்ஸ் போடுகிறேன் என்றார். இத்தனைக்கும் அவர் இருந்தது ICU வார்டில். அம்மருத்துவரின் வீடும் அங்கே மேல் மாடியில்தான். இதற்கு எதற்கு சலைன்; அட்மிட் பண்ணி பில் தீட்டவா.. எனக்கு வேண்டியதெல்லாம் பெயின் கில்லர் ஊசி மட்டும்தான் என்று அங்கேயும் கவைக்குதவாமல், வேண்டாம் என்று தவிர்த்து வந்த என் உறவினரின் மருத்துவமனைக்கே சென்றேன். மணி 6 ஆகியிருந்தது.

அம்மருத்துவமனையில் எனக்கு உடனடியாக இன்ஜக்‌ஷன் போடப்பட்டது. வலி நிற்கவில்லை. நர்ஸை கடிந்துகொள்ள ஆரம்பித்தேன். இரண்டாவதாக ஒரு ஊசியும் போட்டார்கள். இதற்கு பலன் இருந்தது. அரை மணி நேரத்தில் வலி குறைய ஆரம்பித்தது. 1 மணி நேர ஓய்விற்கு பின் வீடு வந்து சேர்ந்தேன். அதற்கு பிறகு இப்போது வரை வலியில்லை. ஆனால் வந்துவிடுமோ என்று உள்ளூர ஒரு அச்சம் இருந்து கொண்டே இருக்கிறது. சிறுநீரக கல் வலி, பிரசவ வலிக்கு இணையாக இருக்கும் என்பார்கள்.

இதையெல்லாம் இங்கே எழுத வேண்டுமா என்றுதான் முதலில் யோசித்தேன். எனினும் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது எப்போதாவது யாருக்காவது பயன்படலாம் என்பதால் எழுத்தில் பதிவு செய்கிறேன்.

இன்றைய நாமக்கல்லில் மருத்துவத்தின் நிலை என்ன?

1. மருத்துவ வசதிகளை பொருத்தவரை நாமக்கல் மிக ஆபத்தான ஊராக இருக்கிறது. ஒரு சளி, காய்ச்சலுக்கு வைத்தியம் செய்ய வேண்டும் என்றாலே எந்த டாக்டரிடம் போவது என்று யோசனையாக இருக்கிறது. பழம் தின்று கொட்டைப் போட்ட பழம் பெரிசு டாக்டர்கள் எல்லாம் வாரிசுகளிடம் வைத்தியத்தை ஒப்படைத்து விட்டு ஏற்கெனவே ஓய்வுபெற்றுக்கொண்டு விட்டார்கள். தொடர்ந்து கேஸ் பார்க்கும் ஒரு சிலரும் நவீன மருத்துவங்களைப் பற்றிய அறிதல் இல்லாமல் இருபது வருடங்கள் பின் தங்கியே இருக்கிறார்கள். போதாதகுறைக்கு இவர்கள் மாதிரி மருத்துவ சேவையில் ஆயாசம் கண்டுவிட்ட, முதலீடு செய்திருக்கும் வெவ்வேறு தொழில்களில் கவனம் சென்று விட்ட நபர்களை கெடுக்க என்றே இருக்கவே இருக்கிறார்கள், மெடிக்கல் ரெப்புகள்! மூட்டு வலி என்று போனால் அதனுடன் சேர்ந்து முதுகு வலிக்கும் நாலு மாத்திரை எழுதுவது எதிரில் இருக்கும் ஆளைப் பொருத்து சர்வ சாதாரணமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. எந்த நோயானால் என்ன; ரெப் விற்கும் மாத்திரைகளில் எவ்வளவு சேல்ஸோ அவ்வளவுக்கு வருமானம். இதனை நான் வாய்ப்பேச்சாக இல்லை - ருசுப்படுத்திக்கொண்டுதான் சொல்கிறேன். மேலும், புதிதாக திறக்கப்பட்ட மருத்துவமனைகளில் பெரும்பாலானவை பிரசவ ஆஸ்பத்திரிகள். நல்ல ஒரு பொது மருத்துவர் என்று எனக்கு வைத்தியம் செய்துகொள்ளவே இன்று வரை தேடிவருகிறேன். வேறு வழியில்லாமல் சமீபமாக நம்ம குடலிடமே சரணடைகிறேன். அவர் தன் எண்டாஸ்கோபி பயாஸ்கோப்புகளையெல்லாம் முடித்து விட்டு நம்மிடம் வருவதற்குள் நோவால் தாவு தீருகிறது.

2. வலி கடுமையாக இருந்தாலும் சிறுநீரக கல் என்பது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய் எல்லாம் இல்லை. அதனால் எங்கேயாவது அடித்து பிடித்து அந்த நேரத்திற்கு ஒரு ஊசியை போட்டு வலியை போக்கிக்கொள்ள முடிந்தது. இதுவே ஒருவேளை ஹார்ட் அட்டாக் மாதிரி உடனடி சிகிச்சை தேவைப்படும் நோய் தாக்குதலாக இருந்து, ஆத்திர அவசரத்துக்கு டாக்டர் கிடைக்காமல் நேற்று போல காம்பவுண்ட் கேட்டுக்கும், ICU அறை கதவுக்கும் வெளியே நின்று கொண்டு பரிதவிக்கும் நிலை ஏற்பட்டிருந்தால் என் கதி என்னாவது?

இந்த இடத்தில் சேலம் லோட்டஸ் மற்றும் இதர பெரிய மருத்துவமனைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் நான் சொல்வதன் பின்னுள்ள விஷயம் விளங்கும். அங்கெல்லாம் டியூட்டி டாக்டர்கள் இருப்பார்கள். காசு, பணம் போனாலும் அந்த நேரத்துக்கு தேவையான சிகிச்சை தேவையான பொழுதில் தாமதமில்லாமல் கிடைக்கும். அவற்றை அளிக்க தேவையான உபகரணமும் இயங்கு நிலையில் இருக்கும். நாமக்கல்லில் அப்படி ஒரு மருத்துவமனையைக் காட்ட முடியுமா? ஏதாவது வாகனத்தை ஏற்பாடு செய்து கொண்டு சேலத்திற்கோ, ஈரோட்டிற்கோதான் ஓட வேண்டும்.

நாமக்கல்லில் வாழ்வதில் இப்படியும் ஒரு ஆபத்து இருக்கிறது.

30 - 40 வயதுள்ள ஆண்களில் யாருக்கும் இது வரலாம் என்பதால் உஷார்! தண்ணீர் நிறைய குடியுங்கள். (தண்ணீர் அதிகம் குடித்தால் அதற்கும் ஏதாவது நோய் வரக்கூடுமோ? காயமே இது பொய்யடா. வெறும் காற்றடைத்த பையடா!)

அப்புறம்.., என்னது GH-ஆ? மன்னிக்கவும். தமாஷ்களுக்கு சிரிக்கும் நிலையில் இன்று நான் இல்லை.

- வீ. புஷ்பராஜ்


பின்குறிப்பு 1: ஒரு சாமானியனின் அனுபவ நோக்கில் இருந்து எழுதியிருக்கிறேன். இங்கேயும் மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களை புண்படுத்தும் எண்ணமில்லை.

பின்குறிப்பு 2: பெரிய மருத்துவமனைகளின் தேவையை வலியுறுத்தி எழுதியிருக்கிறேன். அவற்றின் பின்னாலும் பெரிய பெரிய (ரமணா) கதைகள் இருக்கலாம். யாமறியேன். யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!

1 comments:

  1. no-nononsense said...
  2. This comment has been removed by the author.

Post a Comment