எனக்கான குறிப்புகள் (2): கல்கி, ராஜேஷ்குமார்

Posted: Wednesday, March 24, 2010 | Posted by no-nononsense | Labels: , ,
கல்கி ஆசிரம வீடியோக்களைப்பற்றி என் வாடிக்கையாளர்கள் இருவர் என் அலுவலக முன்னறையில் பேசிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது. அதில் ஒருவர் கல்கியின் தீவிர பக்தர். இன்னொருவர் அவரின் நண்பர். இருவரும் அந்த வீடியோக்களையும் சன் டிவியையும் திட்டிக் கொண்டிருந்தார்கள். 'கடவுளின் காலடியில் இருப்பவர்களையும் சாதாரண பக்தனையும் எப்படி ஒன்றாக ஒப்பிட முடியும். அவர்கள் இருந்ததுதான் பரவச நிலை’ என்பதாக கல்கி பக்தர் ஆவேசமாக பேசியபடி, கல்கியின் அற்புதங்களாக சிலவற்றை வரிசைப்படுத்திக் கொண்டிருந்தார். அவரைக் காண எனக்கு பரிதாபமாக இருந்தது. சாமியார்களின் வண்டவாளம் வெளிச்சத்திற்கு வரும்போது இம்மாதிரி உண்மை பக்தர்கள்தான் மிகவும் சங்கடப்பட்டு போகிறார்கள்.

தாசஜிக்கள் என்னும் கல்கியின் சீடர்களின் செய்கையையெல்லாம காணும்போது அது உச்சக்கட்ட போதையாகத்தான் தெரிகிறது. ஆனால் எது அவர்களுக்கு இவ்வளவு போதையை தருகிறது என்பது குறித்தெல்லாம் இந்த வீடியோ விளக்கவில்லை. சில பக்தர்களுக்கு மனதிற்குள் தாண்டவமாடும் பித்துநிலை, இவர்களிடம் புறவயமாக வெளிப்பட்டிருக்கிறது. சுயசிந்தனையை மலுங்கடிப்பதுதான் சாமியார்கள் செய்யும் முதல் வேலை. அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிமுறையை கையாளுகிறார்கள். கல்கிக்கு போதை போலும்.

ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால் இந்த கல்கி என்னும் விஜயகுமாரின் மேல் அவருடன் பணிபுரிந்த அவரின் முன்னாள் நண்பர் என்று சொல்லிக்கொண்ட ஒருவர் போலீஸில் புகார் கொடுத்து, அது பத்திரிக்கைகளில் பரபரப்பாக இருந்தது. அந்த புகாரெல்லாம் என்ன ஆனது, புகார் கொடுத்த நபர் என்ன ஆனார் என்பதெல்லாம் துருவினால் நிறைய வெளிவரலாம்.


கல்கி ஆரம்பத்தில் இந்த கெட்டப்பில்தான் பல சீடர்களையும் கவர்ந்தார். பிறகு அவர் மனைவியையும் ‘அம்மா பகவான்’ ஆக்கி, அவருக்கென்று ஒரு தனி பிஸினஸை ”oneness” என்ற நாமகரணத்தில் வைத்துக் கொடுத்தார். அவருக்கென்றும் தனியாக பக்தர்கள் குழாம் உருவாகியது.

சாமியார்களைப்பற்றி பேசவும் எழுதவும் கூடாது என்று நினைத்தாலும் முடியாது போலிருக்கிறது. நேற்று அதே சன் டிவில் இன்னொரு சாமியாரைப்பற்றிக் காட்டிக் கொண்டிருந்தார்கள். இவர் பெயர் புருஷோத்தமன். சிவில் டிரெஸில் இருந்த இவரும் தன்னைத் தானே கடவுள் என்று சொல்லிக் கொள்கிறார். அவர் பக்தர்கள் கல்கியின் தாசாஜிக்களுக்கு குறைவில்லாமல் பித்து பிடித்தது போல ’சக்ரா’ என்று ஏதோ கத்துகிறார்கள்; உளறுகிறார்கள்; ஆடுகிறார்கள். ஒரு கல்லூரி மாணவி இங்கே வந்து ’மந்த்ரா’ கற்றுக்கொண்ட பிறகே வாழ்க்கை நன்றாக இருப்பதாக பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.

இத்துடன் சாமியார்கள் பற்றி தொடர்ந்து நான் பிரஸ்தாபிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். நாட்டில் பேசவும் எழுதவும் மற்ற எத்தனையோ விஷயங்கள் இருக்க, என் நேரத்தை நாய் வால் நிமிராமல் இருப்பது குறித்து ஆராய்ச்சி செய்வதில் வீணடிக்க விரும்பவில்லை.

0

பேசாமல் நான் ஏதாவது இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸம் பத்திரிக்கை ஒன்றில் வேலைக்கு சேர்ந்து விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் ;-) தினமும் வித விதமான க்ரைம் கதைகளுடன் வேலையை துவங்க முடியும் போலிருக்கிறது. காரணம் என் புத்தக உறவு துவங்கியதே ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல்களுடன் தான். அவரில் ஆரம்பித்து பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ராஜேந்திரகுமார், தேவிபாலா, புஷ்பா தங்கதுரை என்று pulp fiction-களில் ஊன் உறக்கமற்று மூழ்கி கிடந்த காலம் என்று என் வாழ்வில் ஒன்று இருந்தது. சுபா, ப.பி எல்லாம் இப்போது சினிமாவில் வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தேவிபாலா பல சீரியல்களுக்கும் கதை வசனம் எழுதி வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். ராஜேந்திரகுமார் மறைந்து விட்டார். புஷ்பா தங்கதுரைக்கு வயதாகி விட்டது. ஆனால் இன்று வரை சினிமாவை சுவீகரித்துக்கொள்ளாத ஒரு எழுத்தாளராக ராஜேஷ்குமார் மட்டும் இருந்து வருகிறார்.


novels.jpg

ராஜேஷ்குமார் என்றதும் தான் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருக்கும் பாய் கடைதான் புத்தகங்கள் வாங்க பிரபலமானது. வழக்கமாக அங்கே எனக்கு தேவையானதை மட்டும் வாங்கிக்கொண்டு உடனே நடையைக் கட்டிவிடுவேன். நேற்று ஒரு நண்பருக்காக அங்கே காத்திருக்க நேர்ந்ததால், தனியாக ஒரு ஓரத்தில் தொங்க விடப்பட்டிருந்த நாவல்கள் மீதும் கண்களை மேய விட்டேன். பத்துக்கு ஒன்பது ராஜேஷ்குமார் நாவல்கள் தாம்! தமிழ் க்ரைம் நாவல் உலகில் மனிதர் இன்றும் சூப்பர் ஸ்டாராகத்தான் திகழ்கிறார் என்பது புரிந்தது.

ராஜேஷ்குமார் 1000 நாவல்களை கடந்து விட்டார். அவரின் 1000-ஆவது நாவல் ”டைனமைட் 98” ஐ படிக்க ஆவலுடன் தேடிக்கொண்டிருக்கிறேன். யாரிடமாவது இருந்தால், கிடைத்தால் பகிர்ந்துகொள்ளவும்.

0 comments:

Post a Comment