நித்தியானந்தா சர்ச்சை - மேலும் சில கருத்துக்கள்

Posted: Wednesday, March 3, 2010 | Posted by no-nononsense | Labels: ,
முன்பு பார்த்து விட்டு ஓரம் கட்டி வைத்திருந்த நித்தியானந்தா வீடியோக்களை மீண்டும் ஒருமுறை தேடியெடுத்து ஓடவிட்டுப் பார்த்தேன். வாழ்க்கையின் கூறுகளைப்பற்றிய அருமையான பொழிப்புரைகள்! அழுத்தம் திருத்தமான மொழியாளுகை! இதுதான் மற்ற சாமியார்களிடமிருந்து இவரை தனித்துக் காட்டியது.

எனக்கு இவர் பெயர் அறிமுகமானது வலம்புரி ஜான் மூலமாக. இவரின் வித்யாஞானம் பற்றி அவர் விதந்தோதி ஒருமுறை எழுதியிருந்தார். வலம்புரி ஜானை வாசித்து வந்தவர்களுக்கு அவருடைய தேர்வுகளின் மீது நிச்சயம் ஒரு கவனம் இருக்கும். அவரின் மொழி விளையாட்டுகளின் மீது ஏற்பட்ட லயிப்பின் காரணமாக எனக்கு கொஞ்சம் அதிகமாகவே அது உண்டு. அப்படி அவர் எழுதியிருந்த கொஞ்ச நாளிலேயே நாமக்கல்லில் நித்தியானந்தாவின் கூட்டம் ஒன்று பிரம்மாண்டமாக ஏற்பாடாகியது. சௌத் ஸ்கூலில் நடந்த அக்கூட்டத்திற்கு தாமதமாகத்தான் சென்றேன்; ஆனால் பேச்சில் கட்டுண்டேன் என்றுதான் சொல்லவேண்டும். அதுமுதல் நித்தியாவின் பேச்சுக்கள் கேட்க கிடைக்கும் போதெல்லாம் செவிமடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். சில நல்ல விஷயங்கள் அறிய கிடைக்கும்.

நித்தியாவின் பேச்சு கவர்ந்த அளவிற்கு அவருடைய குமுதம் தொடர் என்னை கவரவில்லை. அண்மை காலமாக நித்தியாவை இணைய உலகில் அதிக வாசகர்களைக் கொண்டிருக்கும் சாருநிவேதிதா வெகுவாக ஆதரித்து வந்தார். சர்வரோகங்களையும் ஸொஸ்தப்படுத்த வந்த கடவுளாக தன் எழுத்தில் சித்தரித்து வந்தார். இன்று அதனாலேயே மிகவும் அவமானப்பட்டு நிற்கிறார். இப்படி நிற்பது அவருக்கு வழக்கம் என்பதால், அதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல.

பேச்சு திசை மாறுகிறது.

நித்தியானந்தா போலவே என்னை கவர்ந்த இன்னொரு கார்ப்போரேட் சாமியார், ஜக்கி வாசுதேவ். எதேச்சையாகத்தான் அவர் உரையாற்றிய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டேன்(இதுவும் நம்ம ஸ்கூலில்தான்). பேச்சு பொருள் நிறைந்ததாக இருந்து கவனத்தை கவர்ந்தது. அதுமுதல் அவருடைய பேச்சுக்களையும் கேட்டு வருகிறேன். தேவையானதை எடுத்துக் கொண்டு, அபத்தங்களை விட்டு விடுகிறேன்.

இந்த impression எனக்கு தமிழகத்தின் மூன்றாம் பிரபல சாமியாராகிய பூஜ்யஸ்ரீ ரவிசங்கரிடம் வரவில்லை. அவர் உரைகள் சாதாவாகவே தெரிகின்றன. என் நண்பன் ஒருவன் விடாப்பிடியாக என்னை கொண்டுபோய் அவர்களின் அறிமுக வகுப்பு ஒன்றில் உட்கார வைத்தான். அரை மணி நேரத்திலேயே அடித்து பிடித்து ஓடி வந்து விட்டேன். ஜெய் குருதேவ் ஜெய் மஹாதேவ் சொல்லித்தான் யோகா கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் கட்டுப்பாடுகள் எனக்கு பிடிக்கவில்லை. யோகாவை கிம்மிக் இல்லாமல் கற்றுக்கொடுக்கும் ஒரு யோகா ஆசிரியரை இன்றுவரை தேடிவருகிறேன். கிடைத்தபாடில்லை. எல்லோரும் ஆன்மிக பிஸினஸுடன் யோகாவையும் பிணைத்து வைத்து கழுத்தறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

*

என் வீட்டின் எதிர் வீட்டு காம்பௌண்டில் குடியிருக்கும் நிராதரவான பெண் ஒருவர் தீவிரமான நித்தியானந்தா பக்தை. எந்தளவு என்றால் போன வாரம் ச.பே.புதூரில் நடந்த பகவதியம்மன் பண்டிகைக்கு அனைத்து குடிமக்களும் பொங்கல் வைத்து எடுத்துச் சென்றபோது, நான் கும்பிடும் கடவுள் இனி நித்தியானந்தர் தான். அதனால் இனி வேறு எந்த பண்டிகையிலும் கலந்துகொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டவர். காதலித்து மணந்தவன் ஒரு கயவனாக போனதால் இரண்டு குழந்தைகளுடன் சுயமாக உழைத்து பிழைக்கும் அவர் மீது வீதியில் எல்லோருக்கும் அனுதாபம் உண்டு. ஆனால் இந்த நித்தியா விஷயத்தில் அவர் காட்டிய தீவிர பக்தி மற்றும் இந்து மதத்திலிருந்து தன்னை விலக்கி நடந்து கொண்டது எல்லாம் குறித்து வீதி பெண்களிடம் பொருமல் உண்டு.

நித்தியா விஷயம் இப்படி ஆனதும் இன்று காலை அவரை எல்லோரும் பிலுபிலு என்று பிடித்துக் கொண்டார்களாம். எப்போதும் அவர்கள் வீட்டில் எல்லோரும் அணிந்திருக்கும் டாலரை எல்லாம் கழற்ற வைத்து, போட்டோக்களை எடுத்தெறிந்து, அறிவுரையாக வழங்கியதில் இன்று அவமானப்பட்டு சங்கடப்பட்டு அவர்கள் யாரும் தெருவில் நடமாடவேயில்லை. வழக்கமாக அவர் குழந்தைகள் மாலை என் குழந்தையுடன்தான் விளையாடிக் கொண்டிருப்பார்கள். எங்கே இன்று காணோம் என்று கேட்டபோதே இது தெரியவந்தது.

நம்பி வணங்கியது ஒன்றைத் தவிர இவர் போன்ற அப்பாவிகள் எல்லாம் என்ன தவறு செய்தார்கள் இப்படி அவமானம் சந்திக்க? இவர் போன்றவர்கள்தான் நித்தியா செய்த பித்தலாட்ட ஆன்மிக பிஸினஸின் பாதிப்பின் அடையாளங்கள். இவர்களின் மீது செக்ஸ் சாமியாரின் பக்தை என்று நிரந்தரமாக ஒரு முத்திரை விழுந்தது விழுந்ததுதான். இதனாலேயே நித்தியாவின் குற்றம் மன்னிக்க முடியாததாகிறது.

0 comments:

Post a Comment