மதங்களையும் நம்பிக்கைகளையும் பற்றிய ஒரு விவாதம்

Posted: Saturday, March 13, 2010 | Posted by no-nononsense | Labels: ,
பொதுவாக நான் எந்த வலைப்பதிவிலும் மறுமொழி எழுதுவதில்லை. நீண்ட காலத்திற்கு பிறகு அப்படி ஒன்றை ஒரு பதிவில் எழுதப்போக, அது இப்போது அங்கே மதங்களையும் நம்பிக்கைகளையும் பற்றிய தத்துவவிசாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. விவாதம் மேலும் வளர்ந்தால் அதில் இறுதிவரை ஈடுபடவும் எண்ணம் உண்டு. அதன் சுட்டியை பின்னர் கொடுக்கிறேன். இப்போதைக்கு அங்கே பதியப்பெற்ற என் சில கருத்துக்களை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

(1)

சாமியார்களை ஆதரிப்பதையும், பிறகு அம்பலங்கள் அரங்கேறியதும் தடிகொண்டு தாக்குவதையும் - இரண்டையுமே பக்தர்களாகப்பட்டவர்கள் ஒருவித கண்மூடித்தனத்துடன் செய்வதுதான் பிரச்னை.

இந்தப் பிரச்னையில் அதன் ஆனி வேரான மதநம்பிக்கையை சுட்டிக்காட்டியிருப்பது நான் படித்தவரை அநேகமாக நீங்கள் மட்டும்தான் என்று நினைக்கிறேன். நடக்க சாத்தியமில்லா விட்டாலும் தீர்வு என்பது அதுதான் எனும்போது, அதை ஒரு பதிவாககூட முன்மொழிய இங்கே பலரும் தயங்குவதுதான் புதிராக உள்ளது.

சாமியார்களின் போலித்தனங்களை ஆயிரம் ஆதாரங்கள் கொண்டு நிரூபித்தாலும், அதையெல்லாம் புறங்கையால் விலக்கி விட்டு மறக்காமல் உடனே கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பிடிவாதமான பக்திக்கு பின்னால் மரபு ரீதியான காரணங்கள் இருப்பதாக தோன்றுகிறது. காலம் காலமாக ஏதாவது உருவத்தை வழிபட்டே வாழ்ந்துவிட்டார்கள். அது சிலையாகவும் இருக்கலாம்; அதிமானிடமாகவும் இருக்கலாம். எதிலாவது தங்களை ஒப்புவித்துக்கொள்வதில் இயல்பான மனோபாவத்தை கொண்டிருக்கிறார்கள்.

(2)

Basicaana manidha charaterai gavanikka marandhu vitteergal. Manidhargalukku unmai pidikkaadhu. aarudhal mattumey pidikkum. Nithyanandha unmai peysiyirundhaal oru aalum appodhey avarai madhiththirukka maattaargal. Nithyanandha peysiyadhellaam manidhargal yedhai keytka virumbinaargalo adhaiye

உங்கள் கருத்து யோசிக்க வைக்கிறது. இது வெற்றிகரமான சாமியார்கள்/பிரசங்கிகள் எல்லோருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். வெகுஜன உளவியலுக்கு மாறான கலக கருத்துக்களின் பின்னால் — அது மெய்ஞான போதனையாகவே இருப்பினும் — எப்போதும் மெஜாரிட்டி சேர்வதில்லை. எங்கே மெஜாரிட்டி கூடுகிறதோ, அங்கே அவர்களின் முன்முடிவுகளை ஒட்டிய பிரசங்கம் நடக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.

(3)

மதங்கள் மனிதர்களுக்கு என்ன அளிக்கின்றன என்னும் வழமையான பார்வையை கொஞ்சம் மாற்றி, மனிதர்களுக்கு மதங்களின் தேவை ஏன் ஏற்படுகிறது என்ற கோணத்தில் சிந்திக்கும்போது சில விஷயங்களின் மேல் உத்தேசமான ஒரு தெளிவு கிடைக்கிறது. புதிதாக ஒன்றும் இல்லை. எல்லாம் புத்தர் போன்ற மஹான்கள் ஏற்கெனவே கண்டறிந்து சொன்ன அவைதீக கோட்பாடுதான்.

அஃதாவது, மனிதன் பிணி, மூப்பு, சாக்காடு ஆகிய மூன்றின் மீதும் ஆதிகாலம் முதல் இன்று வரை பெரும் அச்சம் கொண்டவனாக இருக்கின்றான். அவற்றிலிருந்து தன்னை விடுவிக்கும் மதம்/மார்க்கம்/வழிபாட்டுமுறை எதிலாவது தன்னை ஒப்பிவித்துக்கொள்வதில் தாளாத முயற்சியுடையவனாக இருக்கிறான். அதை கண்டறிதலுக்கான தேடல், அவனில் எப்போதும் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது. இதற்கான தீர்வு சிலருக்கு அவரவர் பிறக்கும்போது உடன் சுமத்தப்பட்ட மத வழிபாட்டு முறையிலேயே கிடைத்து விடுகிறது. சிலருக்கு அதையும் தாண்டியதொரு தேடலாக நீள்கிறது.

இந்த இடத்தில்தான், சாமியார்களின் தேவை உருவாகிறது. கண்டவர்கள் விண்டதில்லை; விண்டவர்கள் கண்டதில்லை எனும்படி தங்களால் எளிதில் உணர்ந்துகொள்ளமுடியாதபடி புதிராக இருக்கும் கடவுளிடம், தாங்கள் நேரடி தொடர்பில் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் சாமியார்களை, கடவுளுக்கும் தங்களுக்கும் இடையேயான மீடியமாக காண்கிறார்கள் - தேடலில் ஈடுபட்டிருக்கும் நம்பிக்கையாளர்கள். அதிலும் அச்சாமியார்களே உபாதைகளை சொஸ்தப்படுத்துபவர்களாகவும் அற்புதங்களை நிகழ்த்துபவர்களாக அமைந்துவிடும் பட்சத்தில், சிலருக்கு அவர்களே எளிதில் கடவுளாகவும் ஆகிவிடுகிறார்கள்.

யுகம் யுகமாக தேடல்கள் புதிய புதிய திசைகளில் அமைந்துகொண்டே இருக்கின்றன. அதை நிறைவு செய்யும் புதுப் புது சாமியார்களின் தேவையும், அவர்கள் போதிக்கும் வேறு வேறான வழிபாட்டு முறைகளும் ஓயாமல் உருவாகியபடியே இருக்கின்றன. ஒன்றுக்கொன்று முரணாக அல்லது மேம்பட்டதாக தோன்றும்/பிரசங்கிக்கப்படும் இவை ஒவ்வொன்றின் தொடக்கத்தையும் முடிவையும் ஒரு நூல் கொண்டு இணைத்துப் பார்த்தால் கிடைக்கும் உருவம், மேற்சொன்ன மூன்று தலையாய பிரச்னைகளின் நிவாரணத்திற்கான எத்தனங்களாகவே இருக்கக் காணலாம்.

இங்கே பிணி என்பதை பாபங்களில் இருந்து விடுதலை, நல்வாழ்வு குறித்தான பெருவிருப்பம் எனும்படி உட்கூறாக கிளை பிரித்து இன்னும் ஆழமாக சென்று பேசமுடியும். ஆனால் எல்லாவற்றின் உள்ளீடான பொருளும் முடிவில் ஒன்றாக இருக்கமுடியும்.

இங்கே சாமியார்கள் என்றால் மேற்காசியாவில் தொடர்ந்து மெஸ்ஸையாக்களின் தேவை இருந்துகொண்டே இருந்திருக்கிறது. மறுதலிக்க முடியாத மார்க்கமாக தெரியும் ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் பின்னால் வந்த மீட்பர்களால்/தேவதூதர்களால்/நற்செய்தியாளர்களால் மறுதலிக்கப்பட்டே வந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் நம்பிக்கையாளர்கள் உருவாகி வந்திருக்கிறார்கள். இந்த உளவியலில் அறிவியலாலும்கூட பெரிய மாற்றம் எதையும் கொண்டுவந்துவிட முடியவில்லை. காரணம், இதன் பின்னாலுள்ள காரணங்கள் மரபு ரீதியானவை.

மதத்தைப்பற்றி மார்கஸ் சொன்ன ஒன்றை மேற்கோள் காட்டியிருந்தீர்கள். அதில் அந்த கடைசி வரியாகிய ‘opium of the mass' என்பதற்குத்தான் வரலாற்றில் போர்களாகவும், உயிரிழப்புகளாகவும் எத்தனை எத்தனை எண்ணற்ற உதாரணங்கள்!

மதத்தின் வரையறையாக நான் படித்தனவற்றுள் ‘இயற்கையின் போக்கையும், மனித வாழ்வையும் கட்டுப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்துவதாக நம்பப்படும் மனிதசக்திக்கும் மேலான ஒரு சக்தியுடன் நல்லிணக்கம் செய்து கொள்ளுதல்’ என்று எங்கேயோ படித்தது இன்னும் நீங்காமல் நினைவில் நீடிக்கிறது. இதற்கும் வெளியே சென்று பெரிதாக எதையும் பகுத்தாய்ந்து விட முடியாது என்றே நான் நினைக்கிறேன்.

0 comments:

Post a Comment