பேச ஒன்றும் இல்லை

Posted: Monday, March 22, 2010 | Posted by no-nononsense | Labels:
கருணாநிதியும் அவர் குடும்பமும் பகுத்தறிவு வேடம் போடுகிறது என்பதன் மீதான விவாதத்தில் என் கருத்து;

ஒருவன் பகுத்தறிவுவாதியாக இருக்கிறான் என்பதனால் மட்டுமே அவனின் ஒட்டு மொத்த குடும்பமும் அப்படியே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரும் மிலிட்டரி சட்டமும் போடமுடியாது. இதெல்லாம் அவரவர் மனத் தெளிவைப் பொருத்தது.

என் திருமணம் நடந்தது கோவிலில். எல்லா விஷேஷ தினங்களிலும் ஏதாவது தெய்வத்தின் சன்னதியில் மனைவியுடன் என்னைக் காணலாம். குழந்தைக்கு மொட்டை அடிக்க பழநி, சமயபுரம் உள்ளிட்ட பல கோவில் வாசல்களையும் மிதித்து விட்டேன். பிரதி வெள்ளி தோறும் என் வீட்டில் அப்பா செய்யும் பூஜையின் போது என்னிடம் காட்டப்படும் தீபாராதனையை நான் நிராகரித்தது இல்லை. முன்பு அம்மாவும் இப்போது மனைவியும் வலுக்கட்டாயமாக நெற்றியில் இடும் திருநீரை ஓரிரு முறைக்கு மேல் மறுத்து பேசுவதில்லை. காலண்டரில் இருக்கும் தெய்வ படத்தைக் கண்டாலும் கூட என் குழந்தை கைகூப்புகிறது; சமயத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறது. எல்லாம் என் குடும்பத்தினரின் பயிற்சி. என் குழந்தையிடம் நான் எதிர்பார்த்தே வேறு. இருந்தாலும் நான் தடுத்ததில்லை. என் மனைவி என் கையில் கட்டி விட்ட சாமி கயிறுடன் தான் இதனை தட்டச்சிக் கொண்டிருக்கிறேன்.

திருச்சியில் என் அருமை நண்பர் ஸ்ரீநிவாசன் என் நலனுக்காக என்று சொல்லி அன்புகூர்ந்து என்னை நாச்சியார் முன்பும், திருவரங்கன் முன்பும் கொண்டுபோய் நிறுத்திய போதும், நம்மாழ்வாரின் பாசுரங்களை வாய் விட்டு பாடிய போதும் மௌனமாக அதை அங்கீகரித்திருக்கிறேன். அவரிடம் நாத்திகம் பேசியதில்லை. இன்று வரை அவருக்கு எனக்கு அதிலுள்ள விமர்சனங்கள் எதுவும் தெரியாது. என் பல நண்பர்கள் ஐயப்பனுக்கு மாலை போட்ட போதெல்லாம் அவர்களின் விரதத்திற்கு உகந்த அத்தனையும் செய்திருக்கிறேன். பயண காசு கொடுக்க தவறுவதில்லை.

இதையெல்லாம் நான் செய்வதாலேயே நான் ஆத்திகவாதி என்றும், எல்லாம் எனக்கும் ஏற்புடையன என்றும் நீங்கள் கூறுவீர்களேயானால், அது உங்களின் சொந்த முடிவு. உண்மை வேறு!

இத்தனையையும் மறுத்து எதிர்த்து நான் வாதம் செய்து கொண்டிருந்தால் என் அன்புக்குரியவர்களின் மனம் புண்படுவதைத் தவிர, வேறு ஒரு பயனும் உண்டாகப் போவதில்லை. பிரச்சாரம் செய்தோ விவாதம் செய்தோ எந்த மனத் தெளிவையும் உண்டாக்க முடியாது. அதற்கு அவரவருக்கு மனதில் அடிப்படையான ஒரு தேடல் இருக்க வேண்டும். மாற்றுக்கருத்துக்களை பரிசீலிக்கத் தேவையான திறந்த மனது இருக்க வேண்டும். முக்கியமாக நிறைய படிக்க, படித்தவற்றின் மீது சிந்திக்க தயாராக இருக்க வேண்டும். இவையெல்லாம் இல்லாது போகும் பட்சத்தில் விவாதங்களினால் பயனில்லை.

அதனால் என் அத்யந்த நண்பர்களிடம் கூட விடாப்பிடியாக அவர்களின் நம்பிக்கைகளின் மேல் நான் விவாதிப்பதில்லை. அவர்களுடன் இயைந்து போவதால் அவர்களுக்கும் மகிழ்ச்சி; எனக்கும் ஒரு குறைவும் இல்லை.

*

கருணாநிதியையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன். அவரின் பகுத்தறிவு கொள்கைகளின் மீது எனக்கு நாளது தேதி வரை எந்த ஐயமும் இல்லை. பல நேரங்களில் ஆழமான பகுத்தறிவு வாதங்களை அவர் கடிதங்களில் முன்வைப்பார்; ஆனால் அதனை நீட்டித்து உள் புக மாட்டார். காரணம் ஓட்டரசியல் தான். மஞ்சள் துண்டு போடுவது ஒரு அடையாளத்திற்காக என்பதும் ஏற்கக் கூடியதே. அப்படிப் பார்த்தால், கருப்பு சட்டை பெரியாருக்கு ராசியானது என்று யாரோ ஜோஸியம் சொன்னதால்தான் அவர் காலமெல்லாம் கருப்பு சட்டை அணிந்திருந்தார் என்றும் கூட சொல்லமுடியும். ஆனால் ஏற்றுக்கொள்வார் யார்?

இக்கட்டுரை மட்டும் அல்ல; நான் தொடர்ந்து பலரிடமும் காணும் ஓர் அம்சம் என்னவென்றால் பெரியாரை படிக்காமலேயே விமர்சிக்க துணிகிறார்கள். “பெரியாரே கடைசி காலத்தில் யாருக்கும் தெரியாமல் சாமி கும்பிட்டாராமே, தெரியமா’ என்று அடித்து விடுகிறார்கள். அவர்களுடன் பேச ஒன்றும் இல்லை.

அதேபோல்தான் இப்படி குடும்ப உறுப்பினர்களின் நம்பிக்கையை நம் மீதும் ஏற்றி பேசுபவர்களிடமும் பேச ஒன்றும் இல்லை.

0 comments:

Post a Comment