ஒரு நாடகமன்றோ நடந்தது

Posted: Sunday, March 21, 2010 | Posted by no-nononsense | Labels:
மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை போல இதற்குமுன் இவ்வளவு ஒற்றுமையாக வேறு எந்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டு யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம். இதில் மாற்றுக்கருத்து கூறினால் எங்கே பெண்களுக்கு எதிரான போக்காக அது பிரச்சாரம் செய்யப்பட்டு விடுமோ, பெண்கள் ஓட்டு தங்களுக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் எல்லா கட்சிகளும் ஆதரித்து விட்டார்கள் - இடதுசாரிகள் உட்பட!

லாலு மற்றும் முலாயம் கட்சிகள் மட்டுமே இதை எதிர்த்தன. எதிர்த்தன என்றால் அது மசோதாவை அல்ல. அதன் தற்போதைய வடிவை. இடஒதுக்கீடிற்குள் தாழ்த்தப்பட்டவற்களிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்கென தனியாக உள் ஒதுக்கீடு கேட்கிறார்கள்.

அதென்ன தாழ்த்தப்பட்டவர்களிலேயே தாழ்த்தப்பட்டவர்கள்?

இதற்கு உதாரணமாக சொல்லவேண்டுமானால், தமிழகத்தில் அருந்ததியரை(சக்கிலியர்) சொல்லலாம். அவர்களும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான பொதுப்பிரிவின் கீழ்தான் வகைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றாலும், அவர்களை மற்ற இருபெரும் தாழ்த்தப்பட்ட சாதியினரான ஆதிதிராவிடர் (பறையர்), தேவேந்திர குல வேளாளர் (பள்ளர்) ஆகியோர் சரிநிகராக நடத்துவதில்லை. அவர்களிலும் தாழ்த்தப்பட்டவர்களாகவே கருதுகின்றனர்; நடத்துகின்றனர். காரணம் ஒரு காலத்தில் இச்சாதியினரே மலம் அள்ளும் வேலையை செய்துகொண்டிருந்தனர். இன்றும் கூட சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் இவர்களே!

அதனால்தான் அவர்களுக்கு என தனி உள் ஒதுக்கீடு அவசியமாகிறது. எனவே லாலு முலாயம் வகையறாக்கள் எழுப்பும் குரலில் நியாயம் இல்லாமல் இல்லை.

*

இந்த மகளிர் இட ஒதுக்கீட்டினால் பெண்களுக்கு ஏதோ பெரிய நன்மை நடந்து விடப்போவது போல பலரும் கட்டுரைகளும் பேட்டிகளும் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் பலகாலமாக சோ வலியுறுத்திவரும் கருத்துதான் என்னுடையதும். இன்று ஒரு தொகுதியில் அங்கே செல்வாக்குள்ள அரசியல்வாதி நிற்கிறார் என்றால், நாளை அத்தொகுதி மகளிருக்கு ஒதுக்கப்பட்டால் அப்போது அவரின் மனைவியோ, மகளோ, மருமகளோ அல்லது உறவினரோ தான் நிற்க வைக்கப்படுவார். இதனால் பெண் குலத்திற்கு என்ன பெரிய நலம் விளைவிக்கும் செயல் நடந்துவிடப் போகிறது.

சேலம் தொகுதி நாளை மகளிர் தொகுதி ஆக்கப்பட்டால் அப்போதும் அங்கே வீரபாண்டி ஆறுமுகத்திற்கு வேண்டிய ஒருவர்தான் போட்டியிடுவார். வேறு ஒரு மாற்றமும் வந்துவிடாது.

எல்லோரையும் சாட்சியாக கொண்ட ஒரு நாடகமன்றோ நடந்தது!

0 comments:

Post a Comment