தண்ணீர் படும் பாடு

Posted: Monday, March 22, 2010 | Posted by no-nononsense | Labels: ,
சில மாதங்களாகவே வண்டிக்கு ரூ.80 என்று மாதம் ஐந்தாறு முறை மாட்டு வண்டியில் நீர் வாங்கிக் கொண்டிருக்கிறோம். இது புழங்க பயன்படுத்தும் உப்பு நீர் மட்டுமே. ஐந்து பத்து சேர்த்து தரத் தயாராக இருந்த போதிலும் குடிநீர் முன்பு போல விலைக்கு எங்குமே கிடைப்பதில்லை.

கொல்லிமலை குடிநீர் என்று சில ஆண்டுகளாக ஊருக்குள் லாரிகளில் கொண்டு வந்து விற்கிறார்கள். அதைத்தான் மக்கள் வாங்கி குடிக்கப் பயன்படுத்தி வருகிறார்கள். இங்கே இப்போது அது ஒரு நல்ல பிஸினஸ். ஆனால் கொல்லிமலைக்கும் அந்த லாரி தண்ணீருக்கும் ஸ்நானப்ராப்தியும் கிடையாது. அருகிலுள்ள கிராமங்களில் இருக்கும் போர்வெல்களிலோ, கிணற்றிலிருந்தோதான் கொண்டு வந்து விற்கிறார்கள். சுகாதாரம் குறைவானது என்பதால் அதை நான் என் வீட்டில் வாங்க அனுமதிப்பதில்லை. ஆனால் இனியும் சுத்தம் சுகாதாரம் என்றெல்லாம் பேசிக்கொண்டு காலம் தள்ள முடியாது என்று புரிகிறது. எந்த தண்ணீர் கிடைத்தாலும் வாங்கி நிரப்பிக்கொள்ளா விட்டால், பிறகு அதுவும் கிடைக்காது என்பதே நிதர்சனம்.

அண்மையில் என் ஒரே வீட்டை இரண்டாக பிரித்து தனித்தனியாக நகராட்சியில் பதிவு செய்து, சொத்து வரி கட்டிவிட்டு வந்தேன். எல்லாம் இன்னொரு குடிநீர் இணைப்பு பெறுவதற்காகவே. விரைவில் போர்வெல் போடவும் எண்ணியிருக்கிறேன். இதுவரை அதற்கான தேவை வந்ததில்லை. வரும் என்றும் நினைத்ததுமில்லை. அந்தளவிற்கு போதும் போதும் எனும்படி காவிரி நீரே குடிநீர் பைப்பில் வந்து கொண்டிருந்தது. வீட்டிற்கு பிடித்தது போக மீதியை இடமில்லாமல் பாத்ரூம் கழுவி விட்டுக் கொண்டிருந்தோம்.

அப்படியெல்லாம் வீணடித்ததன் வினைப் பயன் தான் இப்போது ”வண்டிக்காரன் எப்போது வருவான்; தொட்டி எப்போது நிரம்பும்” என்று வாசலிலேயே தவம் கிடக்க வேண்டிய நிலை. அது அகமாக இருந்தாலும் சரி; புறமாக இருந்தாலும் சரி, வருமுன் காப்பது என்பது தமிழனின் வம்சத்திலேயே கிடையாது.

ஒரு சராசரி குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ளவே நிறைய செலவளிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

0 comments:

Post a Comment