போலிகளின் மருத்துவம்

Posted: Wednesday, March 17, 2010 | Posted by no-nononsense | Labels:
இச்செய்தியை முன்வைத்து:

வேறு எத்தனையோ துறைகளில் போலிகள் இருந்தாலும், உயிர் காக்கும் மருத்துவ துறையிலும் போலிகள் மலிந்திருப்பதுதான் மிகக்கொடுமை. இங்கே போலிகள் என்பதை பட்டம் பெறாத போலி டாக்டர்களுடன், பட்டம் பெற்ற சில உண்மை டாக்டர்களையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன்.

பட்டம் பெற்றவர்களில் வைத்தியத்தில் சரியான பயிற்சி இல்லாமல் ஏனோதானோ சிகிச்சை அளிப்பவர்கள் ஒரு வகை போலி என்றால், வைத்தியம் தெரிந்தும் தன்னுடைய மருந்து கடையில் தேங்கி கிடக்கும் மருந்துகளை எக்ஸ்பைரி தேதி முடியும் முன்னர் விற்றுத்தள்ள வேண்டிய வணிக நிர்பந்தத்தில், சம்மந்தமில்லா நோய்களுக்கு கூட அவற்றை பரிந்துரை செய்யும் போலிகள் இன்னொரு வகை. இதையெல்லாம் படித்தவர்களாலேயே அறிந்து கொள்ள முடியாது எனும்போது பாமரர்களைப்பற்றியெல்லாம் பேசவே வேண்டியதில்லை.

[இவர்களுக்கிடையே நிறைய நல்ல டாக்டர்களும் இருக்கவே செய்கிறார்கள் என்பதை எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு டிஸ்கிளைமராக சொல்லி வைக்கிறேன். The reason is so obvious! :-) ]

இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் pharma-துறையில்தான் இருக்கவேண்டும் என்பது என்னுடைய எண்ணம். இங்கே அதிக மக்கள்; பூஜ்ஜிய சுகாதாரம்; அதிக நோயாளிகள். மாத்திரைகளின் சகவாசமின்றி வாழ்பவர்கள் வெகு குறைவு. மருத்துவர்களை விட மருந்து தயாரிப்பு கம்பெனிகளும் மருந்து விற்பனையாளர்களும்தான் இத்துறையை பாழ்படுத்தி வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு விற்பனை ஒன்றே நோக்கம். வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட மருந்துகளையும்கூட இங்கே தாராளமாக தயாரித்து விற்கிறார்கள். அரசு தரப்பிலிருந்து ஒரு நடவடிக்கையும் கிடையாது.

இதனையெல்லாம் கண்காணிக்க சோதனை நடத்த எல்லா ஊர்களிலும் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆய்வாளர்களின் கையை வழக்கம்போல் கையூட்டு கட்டிப்போட்டு விடுகிறது. மேலும், அவர்களின் குடும்பத்தேவைக்கான நல்ல மருந்துகள் இலவசமாகவே கிடைத்துவிடுகின்றன எனும்போது, மக்களுக்கு கிடைப்பது எதுவாக இருந்தால்தான் அவர்களுக்கு என்ன?

ஏன் இந்தியாவில் இதற்கு எதிராக ஒரு பெரிய மக்கள் இயக்கம் இல்லை என்பதுதான் அவ்வப்போது என் மனதில் தொக்கி நிற்கும் கேள்வி. இடதுசாரி இயக்கங்கள் கூட இதற்கு எதிராக பெரிய போராட்டங்கள் நடத்தியதாக தெரியவில்லை. காரணமும் புரிகிறது. மருந்துகளில் எது நல்ல மருந்து; எது குறைபாடு கொண்டது; எது முற்றிலும் போலி என்பதையெல்லாம் அதில் நிபுணத்துவம் இல்லாமல் அவர்கள் மட்டும் எப்படி கண்டுகொள்ளமுடியும்? நிபுணத்துவம் கொண்டவர்களில் ஒரு சிலராவது சமூக நன்மை கருதி கையில் தரவுகளுடன் போராட்டக் களத்திற்கு வந்தாலே இது சாத்தியம். ஆனால், இம்மாதிரி முறைகேடுகளில் பெரும்பாலும் அதில் சம்மந்தப்பட்டுள்ள எல்லோராலும் ஒரு கள்ளமௌனமே கடைபிடிக்கப்படுகிறது. அத்தனையும் மனிதநேயத்தை விலக்கிய வர்த்தக நலன்களுக்காக என்பதுதான் மனிதர்கள் மீதான நம்பிக்கையை குலைக்கிறது.

அதிசயமாக சமீபத்தில் சென்னையிலுள்ள மருந்து கடைகளில் பெரிய அளவில் ஒரு ரெய்டு நடத்தப்பட்டது. அதில் எக்ஸ்பைரி தேதி முடிந்த மருந்துகளின் மேல் புதிதாக லேபிள் ஒட்டி விற்பனைக்கு வைத்திருந்த மருந்துகள் மட்டும் பல லட்சம் மதிப்பில் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வந்தன.

Surely a tip of the iceberg!

*

போலிகள் ஒருபுறம் இருக்க, இங்கே மக்களால் மேற்கொள்ளப்படும் சுயவைத்தியம் குறித்தும் பெரிதாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது. எப்போது மருந்து கடைக்குச் சென்றாலும் அங்கே யாராவது சிலர் ஏதாவது உடல் உபாதையை சொல்லி, அங்கேயுள்ள மருந்து விற்பனையாளரிடமே அதற்கு மருந்து மாத்திரைகளை பெற்றுச் செல்லும் காட்சியை காணமுடியும் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. அதில் சில சமயம் நாமும் ஒருவராக இருந்து வருகிறோம்.

Over-the-counter இல் விற்பனை செய்ய வகைப்படுத்தப்பட்டுள்ள மருந்து பொருட்களெல்லாம் எவை எவையென மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கே தெரியுமா என்பது சந்தேகமே. இந்தியாவில் எல்லா மருந்துகளுமே OTC தான். அயல்நாடுகளில் அப்படி OTC அல்லாத பொருட்களை தாமாக வாங்கிவிட முடியாது என்று நிச்சயம் நம்புகிறேன்.

[சுயவைத்தியத்தின் தீங்கை மையக்கருத்தாகக் கொண்டு பாண்டியராஜன் ‘டபுள்ஸ்’ என்று ஒரு படம் எடுத்திருந்தார். அவர் இயக்கிய கடைசிப்படம் அதுதான் என்று நினைக்கிறேன்]

என்னைப் பொருத்தவரை, மேற்கத்திய நாடுகளில் இருப்பது போல மெடிக்கல் இன்சூரன்ஸ் இங்கேயும் கட்டாயமாக்கப்பட வேண்டும்(அங்கே கட்டாயம் என்றே நினைக்கிறேன். இல்லையென்றால் நண்பர்கள் திருத்தலாம்). அப்போதுதான் இந்த போலிகள் மற்றும் சுயவைத்தியப் பிரச்னைகள் எல்லாம் ஒழியும்.

தமிழ்நாட்டில் இப்போது செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஒரு ஏமாற்று வேலையே அன்றி வேறு அல்ல. அதில் தங்களை இணைத்துக் கொண்டிருந்த மருத்துவமனைகள் கூட அதிலிருந்து விலகிக்கொள்ளவோ, அல்லது அப்படி ஒன்று எங்கள் மருத்துவமனையில் இல்லை என்று சொல்லிவிடவோ முனைகின்றன. காரணம், சிகிச்சைக்கான பில் தொகையில் மார்ஜின் குறைவாக இருக்கிறதாம். மேலும், பில் கிளைம் ஆகி வர தாமதமாகிறதாம். இக்குறைபாடுகளையெல்லாம் களைய ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமலே அரசு மார்தட்டிக்கொள்வதும் அதைப்பற்றி மக்களும் ஒரு கவலையும் இல்லாமல் இருப்பதும் இந்தியாவில் மட்டுமே சாத்தியம்.

0 comments:

Post a Comment